செனல் 4 தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
செனல் 4 புதிய நிகழ்ச்சி குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த வருடமும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செனல் 4 தொலைக்காட்சி வீடியோ காட்சி ஒன்றை ஒளிபரப்பியது. அந்தக்காட்சி முற்றிலும் பொய்யானது என விஞ்ஞான ரீதியிலாக பரிசோதனை மூலம் நிருபிக்கப்பட்டதுடன் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் சவால் விடுத்தது.
எனினும் இதுவரை அந்த தொலைக்காட்சிச் சேவை அந்த சவாலுக்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. எனவே இவ்வாறான செயற்பாட்டை அந்த தொலைக்காட்சி நிலையம் ஒரு வாடிக்கையாக செய்து வருவதாகவே அரசாங்கம் கருதுகிறது. முதலில் கேட்ட கேள்விக்கே பதில் அளிக்காத போது மீண்டும் மீண்டும் நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.