பெண்ணின் கையைத் துண்டித்து அவரது நகைகள் கொள்ளை. மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நெடுங்கேணியில் சம்பவம்!

நெடுங்கேணியில் மீளக்குடியமர்ந்த பெண்ணொருவரின் கைகள் வெட்டித் துண்டிக்கப்பட்டு அவரது நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்றிரவு (Jun 09 2010) இந்த பீதியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மையில் மீள் குடியமர்த்தப்பட்ட நெடுங்கேணிப் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கே இந்நிலை ஏற்பட்டது.

சொந்த இடத்தில் மீளக்குடியமர்ந்த இப்பெண்ணும் அவரது கணவரும் தங்கள் பாதுகாப்பிற்காக அயலில் தெரிந்த ஒருவரின் விட்டிற்குச் சென்று தங்குவது வழக்கம். சம்பவதினம் அவ்வாறு தமது கொட்டிலில் இருந்து சற்றுத் தொலைவிலிருந்த வீட்டிற்கு பாய், தலையணையுடன் சென்ற போது பற்றைகள் மிகுந்த ஓரிடத்தில் அவர்களை வழிமறித்த சிலர் பெண்ணின் கையிலிருந்த மோதிரத்தையும், அவர் அணிந்திருந்த காப்புகளையும் கழற்ற முற்பட்டனர். பெண்ணும், அவரது கணவரும் கூக்குரலிட்ட போது அப்பெண்ணின் விரல்களை கத்தியால் வெட்டித் துண்டித்து மோதிரத்தை அபகரித்ததுடன், அவரது கைகளை முழங்கைக்கு கிழாக வெட்டி காப்புகளையும் அபகரித்துள்ளனர். அதே சமயம் அப்பெண்ணின் கணவர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. அதனால், அவரும் காயமடைந்துள்ளார். அப்பெண் அணிந்திரந்த நகைகளுடன் தலையணைக்குள் மறைவாக வைத்து எடுத்துச்செல்லப்பட்ட நகைகளும் கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டன.

நெடுங்கேணி நாவலர் வீதியைச் சேர்ந்த ராசலிங்கம் விக்னேஸ்வரி, வயது 52. அவரது கணவர் ராசலிங்கம் வயது 64 ஆகியோருக்கே இந்நிலை ஏற்பட்டது. இவ்விருவரும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததான தகவல் பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு விசுவமடுவில் இரு குடும்பப் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டமை நிரூபிக்கப் படுமானால், சந்தேக நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.பி.பி. சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *