மீளக்குடியேறும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு; பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் – முல்லைத்தீவில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய

gotabaye.jpgமுல்லைத் தீவு மாவட்ட மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்தி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் சேவையாற்றும் போது அவர்களின் உள்ளத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கக் கூடிய வகையில் செயற்படுவது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அவர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் காரணமாக தற்போது நாட்டின் நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் இம்மாற்றத்திற்கு ஏற்றவகையில் நாமும் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களது உள்ளங்களை வெற்றிகொள்ளக்கூடிய வகையில் சேவையாற்ற வேண்டும்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது. அதற்கு ஏற்றவகையில் நாம் பெற்றிருக்கும் வெற்றியையும் சமாதானத்தயும் நாம் பாதுகாத்து தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம்.

மக்களின் உள்ளங்களையும் நம்பிக்கை யையும் வென்றெடுக்கக் கூடியவகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எமது படை வீரர்கள் சிறு தவறுவிட்டாலும் அதனை தூக்கிப் பிடிப்பதற்கு சில வெளிநாட்டு அமைப்புக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதனால் நீங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நாம் புலிகளிடமிருந்து மீட்டெடுத்துள்ள பெரும்பாலான ஆயுதங்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டவையே. அவை கடல் வழியாகவே இங்க கொண்டு வரப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு ஆயுதங்கள் கடல் வழியாக நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் பொறுப்பு கடற்படையினரைச் சார்ந்ததே.

மக்களின் உள்ளத்தையும் நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் வகையில் செயற்படும்போது புலனாய்வு தகவல்களையும் அம்மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதனைப் பாதுகாப்பு படையினர் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

புலிகளின் தலைமைத்துவமும் இராணுவ கட்டமைப்பும் பயங்கரவாதமும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. என்றாலும் ஈழவாதமும் பிரிவினைவாத சிந்தனைகளும் வெளிநாடுகளில் செயற்படுகின்றன. இவற்றின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் நாட்டுக்குள் வராமல் இருப்பதை தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எமது பாதுகாப்பு கட்டமைப்பு மறு சீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்படும் என்றார்.

இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்க, பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா உட்பட பாதுகாப்பு படையதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *