உக்ரேன்- இலங்கை இருதரப்பு பேச்சு; மூன்று ஒப்பந்தங்களும் கைச்சாத்து

ugrain.jpgஉக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவி ச்சின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு உக்ரேன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (30) காலை இடம்பெற்றது. உக்ரேன் நிர்வாகத் தலைமையகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையிலும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார துறைகளை மேம்படுத்துவது தொடர்பான பல விடயங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டன.

இரு நாடுகளுக்கிடையிலும் வர்த்தக துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த வர்த்தக ஆணைக் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கும் உக்ரேன் விமான சேவைநிறுவனத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புடன் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் அவதானம் செலுத்தினர்.

இலங்கையிலிருந்து உக்ரேன் இறக்குமதி செய்யும் தேயிலை, மற்றும் பீங்கான் பொருட்களுக்காக அதிக வசதிகளை வழங்குவது தொடர்பாகவும் உக்ரேன் இலங்கைக்கு ஏற்றுமதிசெய்யும் யூரியா உரம் மற்றும் உருக்கு கம்பிகளின் அளவை அதிகரிப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் அகழ்வு பற்றி ஆராய உக்ரேனிடம் இருந்து தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவும் இரு நாடுகளுக்கிடையிலும் கல்வி பரிமாற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இரு நாடுகளினதும் தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில் சுற்றுலா, கடற்படை, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் மூன்று உடன்படிக்கைகளை இலங்கையும் உக்ரேனும் நேற்று (30) செய்துகொண்டன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் முன்னிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

சுற்றுலா தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், உக்ரேனின் சார்பில் உக்ரேனிய கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சர் மிக்கேய்ல் குயின்யக்கும் கைச்சாத்திட்டனர்.

யுத்த நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் உக்ரேனின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் மிக்கைலோ யெஸெலும் கைச்சாத்திட்டனர். பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும், உக்ரேனின் சார்பில் பாது காப்பு சேவைகளின் பிரதி தலைவர் பொரோ ட்கோவும் கைச்சாத்திட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *