மக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத் திருத்தம் – சு.க. மாநாட்டில் ஜனாதிபதி

slfp.jpgஎனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அபேட்சகரை கட்சி தான் தெரிவு செய்யும் எனவும் ஜனாதிபதி கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59வது வருடாந்த தேசிய மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவரை மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்வதா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இத்திருத்தத்தின் ஊடாக மக்களிடம் அளிக்கப்படுகின்றது. நாம் மக்கள் மயமான அரசியல் யாப்பு திருத்தத்தையே முன்வைக்கவிருக்கின்றோம். இதனூடாக ஆறு வருட பதவிக் காலத்தை 12 வருடங்களாக நீடிக்கும் நோக்கம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் விரும்புபவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவாவார்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என அரசியலமைப்பு விமர்சகர்கள் கூறினர். ஆனால் நாம் அதனை முடியும் என நிரூபித்துள்ளோம். சூரியனும், சந்திரனும் இருக்கும் வரையும் இந்த யாப்பு இருக்க வேண்டியதில்லை. நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப அது திருத்தப் படவேண்டும். அபிவிருத்தியும், தேசிய சமத்துவமும் மாறவேண்டும். மக்களின் இறையாண்மையை வலுப்படுத்தக்கூடிய வகையில் அரசியல் யாப்பு மாற வேண்டும்.

இந்த அரசியல் யாப்பின் ஊடாக மக்களின் விருப்பு, வெறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் தேவையான பலத்தை பெற்று வலுவான அரசை அமைத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எமது பொறுப்பு என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.

நாம் இப்போது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் முன்வைத்திருக்கின்றோம். அது மக்கள் மயமான அரசியல் யாப்பு. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக்காக கொண்டு தான் இந்த யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டிருக்கிறதே தவிர எனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளுவதற்காக அல்ல. அப்படி நினைப்பது தவறு. இத் திருத்தம் ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்கக் கூடியதல்ல.

தற்போதைய அரசியல் யாப்பின் 9 ஆவது ஷரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களின் பட்டியல் உள்ளது. அதில் மன நோயாளர்கள், லஞ்சம் பெற்றவர்கள், வங்குரோத்துகாரர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாக்கு மூலம் இருமுறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களும் அப்பட்டியலில் இவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரசியலமைப்பு சபை பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கின்றது. இதற்கு மாற்றமாக பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மூவரையும் இன அடிப்படையில் தமிழர் சார்பாக ஒருவரும், முஸ்லிம் சார்பாக ஒருவரும் இச்சபைக்கு நியமிக்கப்படுவர்.

மக்கள் பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் படியும், அதுவே உயரிய இடம் என்கின்றனர். அதனையே நாம் செய்கின்றோம். அதனால் மக்களுக்கு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *