அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah_Nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புக் கலைமாணிப் பட்டதாரிகளை உருவாக்கி வெளியேற்றி வருவதை நாம் அறிவோம். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வுக்காக ஒவ்வொருவரும் துறைத்தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட, தெரிந்தெடுத்த ஒரு விடயத்தை வைத்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு 100 பக்கம் வரையிலான ஆய்வாக அதனைத் தமது இறுதித் தேர்வின் ஒரு பகுதியாக தாம் சார்ந்த துறைப்பீடத்திற்கு வழங்குவதுண்டு.

மற்றைய பல்கலைக்கழகங்களைப் போலல்லாது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமக்கென்று ஒரு பதிப்பகப் பிரிவினை ஒருபோதும் கொண்டிராததால், இவ்வாய்வுகளை நூலுருவில் கொண்டுவந்து அதனைத் தான் சார்ந்த சமூகத்திற்கு வழங்கித் தமது கல்விசார் அடைவினை சமூகமயப்படுத்துவதற்கும், அவ்வாய்வேடுகள் பரவலாக சமூகத்தின் பிற புத்திஜீவிகளிடம் சென்றடையச்செய்து பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் புலமையை பட்டைதீட்டிக்கொள்வதற்கும் இன்றளவில் வாய்ப்பில்லாது போய்விட்டது. இதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தான் சார்ந்துள்ள தமிழ்ச் சமூகத்துடன் மேற்கொள்ளக்கூடிய ஒரு உறவுப்பாலத்தை போக்குவரத்திற்காகத் தடைசெய்துவருகின்றது.

இதனால், ஆய்வினை மேற்கொள்ளும் பட்டதாரிகள் தாம் பெரும் பணச்செலவினதும் உடல் உழைப்பினதும் கால விரயத்தினதும் பெறுபேறாக உருவாக்கிய ஆய்வுகள் கிணற்றில் போட்ட கற்களாக பல்கலைக்கழக பீடங்களின் துறைத்தலைவர்களின் இறாக்கைகளில் தஞ்சமடைவதுடன் தமது பிறவிப் பெரும்பயனை எய்திவிடுகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஆய்வு மாணவரின் சுயமுயற்சியால், அல்லது இவ்வாய்வு பற்றிய தகவல் அறிந்த சிலரால் வெளியாரின் உதவியுடன் நூலுரவாக்கி வெளியிட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுகளை நூலுரவாக்கி வெளியிடுவதில் மற்றைய பதிப்பகங்களைவிட, கொழும்பு குமரன் புத்தக இல்லம் அதீத அக்கறை காட்டிவருவதும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

இந்நிலையில் நூலுரவாக்கப்பட்ட அய்வுகள் பற்றிய பட்டியலையோ, அவற்றின் இருப்பு பற்றிய தகவல்களைக்கூட பல்கலைக்கழகங்கள் பேணிவருவதாகத் தகவல் இல்லை. பல்கலைக்கழக வட்டாரத்தின் மூலமல்லாது, தினசரிப் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாகவே இவ்வாய்வுநூல்களின் இருப்பு பற்றி அறியமுடிகின்றமை கவலைக்குரியதாகும்.

அமுதுப் புலவருக்கு அஞ்சலி: விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

இவ்வகையில் அண்மையில் எனக்குக் கிட்டிய பத்திரிகைத் தகவல்- 2006ஆம் ஆண்டு தமிழ்த்துறையில் இறுதித்தேர்வினை மேற்கொண்ட டயானா மரியதாசன் என்பவர் தனது சிறப்புக் கலைமாணித் தேர்வுக்காக லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அண்மையில் 23.2.2010 அன்று மறைந்த இளவாலை அமுதுப் புலவர் பற்றிய விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார் என்பதாகும். இவரது ஆய்வு தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் 99 பக்கங்களில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. இதனை அருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ளார். 2006இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வென்ற வகையில் இது அவரது மறைவுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலைக் கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் அமுதுப் புலவர். இளவாலை தம்பிமுத்து –சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.
ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் தான் மரணிக்கும்வரை வாழ்ந்துவந்தார்.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

அமரர் இளவாலை அமுது பற்றிய ஆறு இயல்களைக்கொண்ட இவ்வாய்வு நூலின் இயல் ஒன்றில் அமுதுப் புலவரின் வாழ்க்கை வரலாறும், இயல் இரண்டில் அவரது கவிதைப் படைப்புகள் பற்றியும், இயல் மூன்றில் அவரது ஆய்வு நூல்கள் பற்றியும், இயல் நான்கில் அவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள் பற்றியும், இயல் ஐந்தில் அவரது பிற பணிகள் பற்றியும் பேசும் இவ்வாய்வின் ஆறாம் இயல் அமுதுப் புலவரின் வாழ்வும் பணிகளும் பற்றிதொரு விரிவான மதிப்பீடாக அமைந்துள்ளது. அமுதுப் புலவரின் இலக்கிய உலா, விருது வழங்கல், பிறந்த தினம், மேடைப் பேச்சுக்கள் என்பன பற்றிய புகைப்படக்காட்சிப் பதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

இலங்கையில் இந்நூல் 200 ரூபாவுக்கு புத்தக விற்பனை நிலையங்களில் பரவலாக விற்பனையிலுள்ளன.

Show More
Leave a Reply to Sivamathy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    சிலர் பண்டிதர் எனவும், சிலர் வித்துவான் எனவும் தங்கள் பேரின் முன் போடுவார்கள். ஒன்று மற்றயதை (பண்டிதர், வித்துவான்) உள்ளகத்தே கொண்டதா? இந்த இரண்டையும் வைத்திருக்கும் இவர், “அமுதுப் புலவராக” அடையாளப்படுத்துவது, பட்டங்கள் பயனில்லை என்பதாலா? யாரேனும் விளக்கம் தருவீரோ?

    Reply
  • Sivamathy
    Sivamathy

    //யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புக் கலைமாணிப் பட்டதாரிகளை உருவாக்கி வெளியேற்றி வருவதை நாம் அறிவோம்.//

    இது உண்மையாக இருக்கின்ற பட்சத்தில்… நாமனைவரும் ஒன்று திரண்டு சண்முகலிங்கனை வாழ்த்தி அவருக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும்…

    இந்த சிறப்புக் கலைமாணி பட்டதாரிகளின் நிலை உண்மையில் மிகவும் கவலைக்கு இடமானது. ஒருவிதமான தரமான வழிகாட்டலுமின்றி வெளியேறுகின்ற இவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் மூழ்கித் தொலைந்து விடுகின்றார்கள்.

    துர்க்கை அம்மன் கோவில், யாழ்ப்பாண மக்களின் ஆடையணிகள் என்று ஆய்வு செய்யும் இவர்களால் – சமகால யதார்த்த வாழ்க்கைக்கான எந்தவிதமான தகமைகளையும் பெற்றுக் கொள்ள முடியாது.

    முடிவு: சண்முகலிங்கன் போன்றவர்களுக்கு பேராசிரியர் பட்டம்… பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம்…

    ஃகூல்தான் இது பற்றி கவனிக்க வேண்டும். எங்கே பேராசிரியர் ஃகூல்? யாழ் வந்துவிட்டாரா?

    Reply