Friday, September 17, 2021

”மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம்.” கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி

TULF Leader V Anandasangareeதமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஓகஸ்ட் 13, 2010 படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் தெரிவித்த கருத்துக்களின் முழுமையான வடிவம்.

கேள்வி நேரம்

டாக்டர் ரொஹான் பெரேரா: திரு ஆனந்தசங்கரி அவர்களே! உங்களிடம் கேட்பதற்கு இரண்டு கேள்விகள் உள்ளன. முதலாவது கேள்வி போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழல் நிலவியது. ஜனாதிபதியாகவும், முப்படைகளின் பிரதம கட்டளையிடும் அதிகாரியாகவும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் இருந்தார். அவரிடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. அநேநேரத்தில் நாட்டின் பிரதம மந்திரியாக இன்னொரு கட்சியைச் சார்ந்த ஒருவர் இருந்தார். பாரம்பரியமாகவும், காலங்காலமாகவும் எமது நாட்டில் நிலவிவந்த அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் சமாதான பேச்சவார்த்தைக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கருத்து அல்லது சிந்தனை உண்டு. அதேநேரத்தில் இத்தகைய ஒரு அரசியில் சூழல் நாட்டின் அதி முக்கிய தேசிய பிரச்சினையொன்றில் தெற்கிலுள்ள இரண்டு பிரதான அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து ஒரு தீர்வினை எடுக்க கிடைத்த ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்று ஒரு சிந்தனை அல்லது கருத்து உண்டு. ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி என்ற முறையில் இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.

எனது அடுத்த கேள்வி வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பற்றியது. இவர்கள் எவ்வாறு யுத்தத்தின் பின்னரான சமாதான முயற்சிகளுக்கு உதவ முடியுமென நினைக்கின்றீர்களா?

இந்த இரு விடயங்களிலும் உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

திரு. வீ. ஆனந்தசங்கரி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். ஜனாதிபதியாக ஒரு கட்சியை சார்ந்தவரும் பிரதம மந்திரியாக இன்னொரு கட்சியைச் சார்ந்தவரும் இருந்தது ஒரு முக்கிய பிரச்சினையே. போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கு இதுவே முக்கிய காரணம் என நான் நம்புகிறேன். நட்டின் தலைவருக்கும் பாராளுமன்ற தலைமைக்குமிடையே புரிந்துணர்வு இருக்கவில்லை. இது அழிவுக்கு இட்டுச் செல்லும் என நாம் உணர்ந்திருந்தோம். பாராளுமன்றத்தில் கண்காணிப்பாளர்களை விமர்சிக்க தொடங்கினார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்கு இவையும் காரணிகளாக அமைந்தது.

எனினும் ஒப்பந்தத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் விடுதலைப் புலிகளின் ஆணவப் போக்கே. அவர்களது ஆணவத்திற்கு நான் ஒரு உதாரணத்தைக் கூறினால் நீங்கள் சிரிப்பீர்கள். எனது பாராளுமன்ற சகாவான திரு. சம்பந்தன் அவர்களிடம் ஒருமுறை கூறினேன். அதிபர் என்னை தனது அலுவலகத்தில் சந்திக்கும்படி அழைப்பு விடுத்தால் நான் அவரைச் சந்தித்து அவர் கேட்பதற்கெல்லாம் ஆம் ஐயா என்று கூறிவிடுவேன். அதுபோல் வகுப்பாசிரியர் என்னை சந்திக்க அழைத்து சிலவற்றை செய்யும்படி கூறினால் என்னால் செய்ய முடியுமா?  இதைக் கேட்டு திரு. சம்பந்தன் பல நிமிடங்கள் வாய்விட்டு சிரித்தார். நான் கூறுவது என்னவென்றால் பிரபாகரன் கூப்பிட்ட போதெல்லாம் நாங்கள் போய் அவர் கூறியபடியே கேட்டு நடந்தோம். அது பரவாயில்லை. தமிழ்ச்செல்வன் கூப்பிட்டனுப்பிய போதும் விருப்பமின்றியேனும் ஒரு தடவை சென்று பார்த்தேன்.

இப்போது என்னவென்றால் மக்களின் உரிமைகளை பறித்தவர்களும், சிறுவர்களை கைதுசெய்து புலிகள் இயக்கத்தில் சேர்க்கும் சாதாரண பேர்வழிகள் தம்மை வந்து சந்திக்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் புலிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் இப்போது இராணுவ உளவுப் பிரிவில் ஒரு பெரிய ஆளாக இருக்கின்றார்.

முன்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஒரு கட்சியும் செனட் சபையில் பெரும்பான்மையாக இன்னொரு கட்சியும் இருந்தபோதும் இதே பிரச்சினை இருந்தது. இதனால் செனட் சபை இல்லாதொழிக்கப்பட்டது. இங்கும் நாட்டின் தலைவரும் பாராளுமன்ற தலைவரும் ஒரே கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிலைமை சீராக இருந்திருக்கும். போர் நிறுத்த ஒப்பந்தமும் சிறப்பாக அடுல்படுத்தப்பட்டிருந்திருக்கும்.

மற்ற விடயம் வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் பற்றியது. இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவ தயாராக உள்ளனர். நீங்கள் ஏன் கே.பி என்னும் மனிதனின் பின்னால் செல்ல விரும்புகின்றீர்கள்? கே.பி யிடம் 09 பேரே உள்ளனர். நீங்கள் ஒரு சாதாரண புலி ஆதரவாளரை கேட்டால்  அவர் கடையிலோ அல்லது பாரிஸ் நகரத்திலோ  நூறு பேரை திரட்டித் தருவார். அபிவிருத்தி வேலைகளுக்கு வேறு எவரையும் கூட்டி வருவதாக கே.பி கூறியதாகத் தெரியவில்லை.

அதேசமயம் நாடுகடந்த அரசு ஒன்றினை நிறுவுவதற்கு பல்வேறு நாடுகளில் ஒரு குழு தேர்தலை நடத்துகின்றது. அவரையும் இங்கு கூட்டிவந்து “ நீ இங்கு வந்து ஏதாவது செய், ஆனால் அரசியலில் இறங்காதே திரும்பிவந்து உனது நாட்டில் அமைதியாக வாழப் பழகிக்கொள் “ எனக் கூறினால் அதில் அர்த்தமுண்டு. அத்தகையவர்களே நமக்குத்தேவை. அதைவிடுத்து இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சகல அராஜகங்களுக்கும்  காரணமானவர்கள் நமக்குத் தேவையில்லை. இவர்களின் பணமும் பாவப்பட்ட பணம். போதைப்பொருள், கடத்தல், சித்திரவதை ஆகியவை மூலம் பெறப்பட்ட பணம். இப் பணம் எமக்கு தேவையில்லை.

மக்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குங்கள். ஆறு மாதங்களில் அவர்கள் தமது வாழக்கையை மீளமைத்துக் கொள்வார்கள். உறுதியளிக்கப்பட்ட நட்ட ஈடுகளை அவர்களுக்கு வழங்குங்கள். இழந்த உயிர்களைத் தவிர மற்ற அனைத்தையும் தான் பெற்றுக் கொடுப்பேன் என ஒருமுறை ஜனாதிபதி கூறினார். நட்ட ஈடு இழந்த உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் வழங்கலாம்.

கிளிநொச்சியில் ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்து உயர்ரக மோட்டார் வாகனங்களையும், லாரிகளையும் வைத்திருந்தவர்களும் பெரியளவில் வர்த்தகம் செய்தவர்களும் 100 ஏக்கர் காணிக்கு மேல் விவசாயம் செய்து கோடீஸ்வரராக இருந்தவர்களும் பின்னர் ஒருவேளை உணவுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசையிலே காத்திருக்க நேரிட்டது. 2,  3 வாரங்களுக்கு முன்னர் பரந்தனிலிருந்து தர்மபுரம் வரையிலான இடங்களுக்கு சென்றிருந்தேன். சாதாரணமாக என் கண்களிலிருந்து கண்ணீர் வராது. அத்தகைய கல்நெஞ்சன் நான். அதற்காக என் தந்தை என்னோடு கோபித்துக் கொண்டதும் உண்டு.

நான் சென்ற இடங்களில் கண்டது யாதெனில் அங்குள்ள நிலைமை இடம்பெயர்ந்து முகாம்களில் அவர்கள் இருந்தபோது இழந்ததைவிட மோசமானதாகும். அதற்கு இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நள்ளிரவில் பாரிய மழை பெய்ய தொடங்கியது. திடீரென்று விழித்தெழுந்த நான் இந்த மக்கள் இப்போது என் செய்வார்கள் என எண்ணி அழுதேன். இவற்றை ஒருவரும் உணர்வதில்லை. நுளம்புச் சுருள் இன்றி அங்கு என்னால் ஒரு இரவைக்கூட கழிக்க முடியாது. ஆனால் இந்த மக்கள் வெட்ட வெளிகளில் எவ்வாறு எவ்வளவு காலம் வாழ்ந்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில் பலர் உதவத் தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இலகுவாக இவற்றை செய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுங்கள். இங்கு மூலதனம் செய்ய விரும்புவோருக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படுமென விளம்பரப்படுத்துங்கள். உங்களுக்கு எதற்காக கே.பி?. அவருக்கு ஏன் இத்தனை வசதிகள்? அவருக்கு தண்டனை கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. அவரை தன்பாட்டில் விட்டுவிடுங்கள். அவரை மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.

திருமதி மனோகரி இராமநாதன்: திரு. ஆனந்தசங்கரி அவர்களே! யுத்தம் தற்போது வெல்லப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்களின் மனம் இன்னும் வெல்லப்படவில்லை. இதற்கு உங்கள் கருத்து என்ன?

திரு. ஆனந்தசங்கரி: அவர்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். யாழ்ப்பாணத்தில் இன்று யாரிடமேனும் இந்த அரசாங்கம் நல்லதா? அல்லது ஐ.தே.க அரசாங்கம் நல்லதா என்று கேட்டால் ஒருவரும் வாய்திறக்க மாட்டார்கள். ஏன்? யாழ் பல்கலைகழத்தை திறந்து வைக்க சிறிமாவோ அம்மையார் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது வீரமகாகாளி அம்மன் கோவிலடியில் நாங்கள் ஒரு சத்தியாக்கிரகத்தை ஏற்பாடு செய்தோம். மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் இருக்கும்படி கூறினோம். அம்மையாரும் வந்தார். சத்தியாக்கிரகமும் நடந்தது. இன்று அவ்வாறு செய்ய முடியுமா?

இன்று கிளிநொச்சியில் 750 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் தமது சொந்த இடங்களில் குடிமயர்த்தப்படுவதாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் தற்போதைய நிலைமையை கண்கொண்டு பார்க்க முடியாது. அவர்களின் காணி இராணுவ முகாமுக்கு மிக அண்மித்ததாக இருக்கின்றது. காடுகளை அழித்தே அவர்கள் இந்த விவசாய காணிகளை உருவாக்கினர். இவர்களில் பலர் அகதிகளாக பல்வேறு தோட்டப்பகுதிகளிலிருந்து வந்த இந்திய வம்வாவளி மக்கள். இந்த 750 குடும்பங்களில் 250 குடும்பங்கள் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மிகுதி 500 குடும்பங்கள் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் காணிகளுக்கு இவர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தம்மை சுட்டு கொல்லுங்கள், தம்மை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என இந்த மக்கள் கதறுகின்றனர். அவர்களின் காணி அரச தேவைக்கு வேண்டுமாம். அரச தேவைக்கு வேறு இடங்களில் காணிகள் இல்லையா? அவர்கள் எமது மக்களின காணிகளை அபகரிக்க வேண்டும்?

அரசாங்கம் செய்யக்கூடியது இதுதான். இராணுவத்தை உடனடியாக அகற்றி சிவல் நிர்வாகத்தை அங்கு ஏற்படுத்த வேண்டும். சில சிறந்த அரசாங்க அதிபர்கள் இருக்கின்றார்கள். கிளிநொச்சியில் ஒரு நல்ல அரசாங்க அதிபர் இருந்தார். ஏதோ காரணங்களை காட்டி அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தர். அவரை விடுவித்து கிளிநொச்சிக்கு திரும்ப அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரினேன்.  ஆனால் அவரை பல மாதங்களள் தடுப்புக்காவலில் வைத்திருந்து பின்னர் அண்மையில் அவருக்கு பரிச்சயமற்ற முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக அனுப்பியுள்ளனர். அவரை கிளிநொச்சிக்கே அனுப்பியிருந்தால் இந்தக் காலகட்டத்தில் அவரால் சிறப்பாக பணியாற்றியிருக்க முடியும்.

மக்கள் இப்போது சுதந்திரமாக இல்லை. அவர்களின் முதல் தேவை தாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே. அவிருத்தி அல்ல. எங்கள் நிலதத்pல் எங்களை சுதந்திரமாக  வாழ விடுங்கள். அல்லது எம்மை சுட்டுத்தள்ளுங்கள் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை. நான் தேசபக்தியுடையவன். இந்த மண்ணை நேசிப்பவன். இந்த உணர்வு சிறுவயது முதலே எனது இரத்தத்தில் கலந்துள்ளது. இது ஈழமும் அல்ல கொழும்பும் அல்ல. இது எனது சொந்த பூமி. நான் இங்கு வாழ விருமபுகின்றேன். அதுதான் உண்மைநிலை. வெளித்தோற்றத்தில் ஏமாந்து விடாதீர்கள். விசேடமாக யாழ் மாவட்டத்தில் யுத்தத்தால் மிகக் குறைந்த வீடுகள் மாத்திரம் சேதமடைந்தன. அங்கு இசை, நடன நாடக விழாக்கள் அரங்கேறுகின்றன. வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லுங்கள். அவைதான் யுத்தத்தால் முற்று முழுதாக அழிந்த இடங்கள். அங்குதான் அபிவிருத்தி தேவை. ஆனால் அவர்கள் தமக்கு அபிவிருதி தேவையில்லை எனக் கூறுகின்றார்கள். அவர்களை தமது சொந்த இடத்தில் விவசாயம் செய்ய விடுங்கள். அவர்கள் ஆறு மாதங்களில் தமது சொந்தக்காலில் நிற்பார்கள்.

திரு எச். எம்.ஜி.எஸ். பனிக்கார்: விடுதலைப் புலிகளுக்கு விரோதமாக இருப்பது அநாகரிகமாக கருதப்பட்ட அந்த நாட்களில் நீங்கள் உங்கள் உயிரையும் பணயம் வைத்து அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள். எனவேதான் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் சுதந்திரமாக உள்ளார். ஆனால் 10,500 பேர் போராளிகள் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற உங்கள் உணர்வினை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது உங்களைப் போன்ற அரசியல் வாதிகளுக்கும் மற்றும் தேர்ந்தெடுக்ப்பட்ட அரசியல் வாதிகளுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை இந்த காலக்கட்டத்தில தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 10,500 பேரையும் நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

அவர்கள் கட்டாயத்தின் பேரிலாவது விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்கள் தற்போதும் தடுப்புக் காவலில் உள்ளனர். அரசாங்கம் அவர்களுக்கு சில தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

எனது அடுத்தக் கேள்வி யுத்தம் இராணுவ ரீதயிhக முடிவுக்கு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வாறு தமிழ் கட்சிகள் ஒருமித்த குரலில் உதவ முடியும்?

திரு. ஆனந்தசங்கரி: அன்று தமிழ் காங்கிரஸ், தமிரசுக் கட்சி என இரண்டு அரசியல் கட்சிகள் இருந்தன. அபேட்சகர்கள் தகுதி அடிப்படையில் தமது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் சயனைட் குப்பிகளை முன்னர் அணிந்திருந்தவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உள்ளனர். இது எமது முக்கிய பின்னடைவு. இது பற்றி நான் மேலும் கூறினால் அது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுததலாம் என கருதுகின்றேன்.

தமிழ் கட்சிகளிடையே ஒத்த கருத்தினை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்ற முடிவில் இருக்கின்றது. இக் கட்சிகள் கடந்த காலங்களில் எனக்கு இழைத்த தீங்குகளையும் அவமானங்களையும் மற்று மக்களின நலனுக்காக நான் ஒன்றுபடத் தயராக இருக்கின்றேன். தற்போது உயர்ந்த கோட்பாடுகளை பேசுவோர் கடந்த ஆறு வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு தற்போது தமிழ்சமூகத்தை பாதுகாக்கப் போவதாக கூறுகின்றனர். தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. எனினும் மக்களுக்காக முன்னிலையில் நிற்பவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது வேலைத் திட்டத்தை முன் வைத்தால் தமிழ் மக்கள் அந்த வேலைத்திட்டத்தினை ஏற்றுக் கொள்வார்கள் என்பதே எனது நம்பிக்கை.

இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்று எனக்குத் தெரியாது. நாடு கஷ்டத்தை எதிர்நோக்கினால் மக்களும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிவரும். நான் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களுடன் வாழந்திருக்கின்றேன். மூவின மக்களுக்கு கற்பித்திருக்கின்றேன். சிங்கள மக்கள் மிகவும் இணக்கப்படானவர்கள். தவறு அவர்களின் தலைமையில். முஸ்லீம் மக்களும் இணக்கப்பாடானவர்கள். தவறுகள் அவர்கள் தலைமையில். தமிழ் மக்களும் அவ்வாறே இணக்கப்பாடானவர்கள். தவறு அவர்களின் தலைவர்களே. மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் காலங்காலமாக ஒன்றாக வாழந்து வந்துள்ளனர். எனது நண்பர்கள் சிங்களவர்களே. அதேபோன்று முஸ்லீம் சமூகத்தினரேடையும் நல்ல நண்பர்கள் எனக்கு உண்டு. எனவே தவறு சமூகங்களின் தலைமைகளிலே அன்றி மக்களில் இல்லை. நான் இதை கூறுவதற்கு தலைவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனினும் அவர்களுக்கும் எனது கருத்தில உடன்பாடு இருக்குமென நம்புகின்றேன்.

தடுப்புக் காவலில் உள்ளவர்களை பற்றி ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் யாவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றே கூறினார். பின்னர் ஓரிரு நாட்களேயாயினும் பயிற்சி பெற்றோம் என ஒப்புக் கொண்டோர் அனைவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களை விடுவிப்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவர்களால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என உறுதி மொழி பெற்றுவிட்டு அவர்களை பெற்றோரிடம் ஒப்படையுங்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் துணிந்து செயலாற்ற வேண்டும்.

பிரபாகரனுக்கு அடுத்த ஆளாக இருந்த 200,000 பேர் கொலை செய்யப்பட்டதற்கும் எண்ணற்றோர் கண்பார்வையை இழந்தும் அங்கவீனமுற்றும் பல பெண்கள் தமது இரு கால்களை இழந்து தவழ்ந்து செல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்திய கே.பி போன்ற குற்றவாளிகளை பொறுத்தவரை நாம் துணிந்து முடிவுகளை எடுக்க முடியுமானால் ஏன் இந்த அப்பாவி இளைஞர்களையிட்டு நாம் ஓர் முடிவு எடுக்க கூடாது. நடந்தவை யாவற்றிற்கும் பொறுப்பாளி ஒருவர் இருப்பாரெனில் அவர் கே.பி யே. கே.பியை நீங்கள் நம்புவதால் இந்த இளைஞர்களை ஒன்றில் நீங்கள் விடுதலை செய்யுங்கள் அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அவர்களின் பெற்றோரின் உத்தரவாதத்துடன் அவர்களை பிணையில் செல்ல விடுங்கள்.

இன்னும் விடுவிக்கப்படாத பல்கலைகழக மாணவர்கள் உள்ளனர். ஜே.வி.பி கிளர்ச்சியின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் குழுக்கள் மூலம் விசாரிக்கப்பட்டு விடுவிக்கக்கூடியோரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விடுதலைப் புலிகளுக்கு தேனீர் கொடுதோரும் உணவு வழங்கியவர்களும் இன்று தடுப்பு முகாம்களில் உள்ளனர். அவர்களின் உணவை சாப்பிட்ட மனிதன் இன்று சுதந்திரமாக இருக்கின்றார்.

தலைவர்: நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்றால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளுடன் எத்தகைய தொடர்புகள் வைத்திருந்தார்கள் என்பதனை விசாரித்தறிவதற்கு குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் இயக்கத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்டிருந்தாலோ அல்லது அவர்களின் பங்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலோ அவர்களை விடுவித்து அவர்களை சமூகத்ததுடன் இணைக்க வேண்டும். நீங்கள் அப்படித்தானே கூறுகின்றீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: ஆம் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு பல குழுக்கள் நியமிக்கப்படலாம்.

தலைவர்: ஆம் பல குழுக்கள்

திரு. எ. பி பரணகம: மொழிப்பிரச்சனை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.

திரு. ஆனந்தசங்கரி: மொழிப்பரச்சினை ஏற்பட அதிக அளவு தவறு செய்தோர் அரசியல்  தலைமைத்துவங்களே. 1956 வரைக்கும் எல்லா பாடசாலைகளிலும் சிங்களம் ஒரு கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டது. திரு. சண்முகம் அவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். எனது தம்பி சிங்களம் கற்றார். சோமஸ்கந்தா கல்லூரியில் எனது தந்தையார் அதிபராக இருந்தபோது பட்டதாரியான ஒரு பிக்குவிடம் நான் சிங்களம் கற்றேன். காலஞ்சென்ற கே.பி இரத்காலக அவர்கள் கல்வி கற்ற ஹாட்லி கல்லூரியில் திரு. சோமரத்ன என்பவர் சிங்களம் கற்பித்தார். யாழ் இந்துக் கல்லூரி கீதத்தை கேட்டால் அதில் “சிங்களமும் தமிழும்” என்ற வரிகள் வருகின்றன.

பின்னர் என்ன நடந்தது? சிங்கள மாத்திரம் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அனைத்துப் பாடசாலைகளிலும் சிங்களம் கற்பித்தல் நிறுத்தப்பட்டது. அநேகமான பாடசாலைகள் தனியார் பாடசாலைகளானபடியினால் இது சாத்தியமாயிற்று. பரீட்சார்த்தமாக வேறு பாடங்கள் கற்பிக்க ஈடுபடுத்தப்பட்ட இந்த சிங்கள ஆசிரியர்களின் சேவை ஒரு வருடத்தின் பின்னர் நிறுத்தப்பட்டது. சிங்களம் மாத்திரம் சட்டம் கொ:டுவரப்பட்டிருக்காவிட்டால் ஒருவேளை எனது இந்த சமர்ப்பித்தலை நான் சிங்கள் மொழியில் செய்திகருக்க கூடும்.

தலைவர்: சிங்களமும் தமிழும் பாடவிதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று நீங்கள் கூறுகின்றீர்களா?

திரு. ஆனந்தசங்கரி: மொழி பிரச்சினைக்கும் இனப்பிரச்சினைக்கும ஏற்றதோர் தீர்வு கண்ட பின்னரே அத்தகைய ஏற்பாடு சாத்தியமாகும். சிங்கள, தமிழ் மொழி கல்வி தீர்வுத திட்டத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். மொழிப் பிரச்சினையையோ இனப்பிரச்சினையையோ தீர்க்காமல் சிங்கள, தமிழ் கல்வியை நீங்கள் கட்டாயமாக்கினால் அது செயலற்றதாகி விடும். நான் எப்போதும் கூறுவது என்னவெனில் “சமாதானம் எமது கதவை தட்டுகிறது.’ கதவைத் திறந்து அனைத உள்ளே அனுமதிப்பதோ அல்லது கதவை சாத்துவதோ எமது கைககளிலதான் உள்ளது.

தலைவர்: பல்கலைகழகங்களில் சேர்வதற்கு சிங்களம், தமிழ் அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். என நீங்கள் கருதுகிறீர்களா?

திரு. ஆனந்தசங்கரி:ஆம் நிர்வாக சேவையில் சேர்வதற்கு மொழித்தேர்ச்சி கட்டாயமாக இருந்தது என்று எனக்கு ஞாபகம்.

திரு. எம். பி பரணகம: கட்டியெழுப்ப கலாச்சார தொடர்புகளை எவ்வகையில் பிரயோசனப்படுத்தலாம்

திரு. ஆனந்தசங்கரி:அவ்வாறு கருதுவது தவறானது. முன்னர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த 100 யுவதிகளுக்கு நடனப் பயிற்சியளித்து அவர்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். இது அந்த யுவதிகளின் மனோநிலைநிலையை பற்றி அறியாமல் செய்யப்படும் காரியங்கள். அவர்கள் வாழ்வில் பெரும் துன்பங்களை சந்தித்தவர்கள். அதில் அநேகமானோருக்கு தமது தாய், தந்தையர் எங்கேயெனத் தெரியாது. தமது குடும்பங்களில் பல இழப்புக்களைச் சந்தித்தவர்கள். வீடு பற்றி எரியும் போது அல்லது பக்கத்து வீட்டில் ஒரு மரணச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாம் இசைமழையில் திளைப்போமா? நான் ஒரு இசை விரும்பி. சிங்களம் தமிழ் அல்லது வேறு எந்த மொழியானாலும் இசையை ரசிப்பேன். ஆனால் அதற்கு கால நேரம் உண்டு. அண்மையில் யாழ் நாடக மன்றம் இரு வாரங்களுக்கு நாடகவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். எமது அயலவர்கள் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது நாம் இத்தகைய விழாக்கள் நடத்துவது முட்டாள்தனமாகது என அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அவர்களும் எனது நியாயங்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் திட்டத்தை கைவிட்டனர்.

நான் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்தபோது கிராமங்களுக்குச் சென்று விடிய விடிய நாடகங்கள் பார்த்திருக்கின்றேன். ஆனால் அதற்குரிய நேரதம் இதுவல்ல. மக்கள் வீடின்றியும், உணவின்றியும் எதுவித வசதிகளுமின்றி வாழும் போது அவர்களின் குழந்தைகள் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டுமென நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கலாம்.

தலைவர்: தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.

தலைவர்: தற்போது வடக்கிலும் கிழக்கிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. தொலைகாட்சி போன்ற மின் ஊடகங்களை பயன்படுத்தி ஆங்கிலக்கல்வியை மேற்கொள்வது பற்றி உங்கள் கருத்தென்ன?

திரு. ஆனந்தசங்கரி: அதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் கல்வி கற்ற நாட்களில் இந்தியாவிலிருந்து பல பட்டதாரி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த சிறப்புடன் சேவையாற்றினர். எனவே நாம் ஆங்கிலக் கல்வியை ஆரம்பிக்கும் போது அந்த வகையிலும் முயற்சிக்கலாம்.

திரு. எச்.எம்.ஜி.எஸ். பணிகக்கார்: வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக்குடிமயர்த்தி அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது பற்றிய உங்கள் கருத்தென்ன?

திரு. ஆனந்தசங்கரி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இந்த விடயம் ஒரு நிபந்தனையாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இது அன்றைய அரசு விட்ட தவறு. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது முஸ்லீம் மக்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்க வேண்டுமென புலிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும். புலிகளை பிரதிநிதித்துவம் செய்வதாக பாராளுமன்றத்தில் இருந்த குழுவினரும் இந்த வேண்டுகோளை புலிகளுக்கு விடுத்திருக்க வேண்டும். முஸ்லீம் மக்கள் வெளியேறும் போது ரூபா 500 மாத்திரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முஸ்லீம்களில் பல கல்விமான்கள் இருந்தனர். எனது நண்பரான திரு மக்பூல் ஒரு சிறந்த தமிழ் – சைவ அறிஞர். தேவார திருவாசகங்கள் யாவும் நன்கறிந்தவர். அவர் மன்னார் அரச அதிபராக இருந்தபோது புலிகளால் கொல்லப்பட்டார்.

பேராசிரியர் கரு. ரங்காவத்த:  நீங்கள் எப்போதும் சுதந்திரமாகவே இயங்கி வந்துள்ளீர்கள். அதனை நான் பாராட்டுகின்றேன். ஆனால் ஏன் தமிழ் சமூக ஆர்வலர்கள், நான் அரசியல் தலைமைத்துவங்களை கூறவில்லை. செயலற்று இருக்கின்றார்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் சமூகத்துக்கு எவ்வளவோ செய்திருக்கலாம். இவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஏதும் தடைகள் உண்டா? ஏன் எல்லாவற்றுக்கு அரசாங்கத்தை வேண்டிநிற்கிறார்கள்.

திரு. ஆனந்தசங்கரி: அவர்கள் சுயமாகச் செயல்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லையென்றே கூறுவேன். வடக்கில் எண்ணற்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. அவர்கள் அரச அனுமதியின்றி ஒன்றும் செய்ய முடியாத நிலை. கிளிநொச்சி மாவட்டம் எனக்கு பரிச்சயமான மாவட்டமாகையால் எதுவித ஊதியமும் இன்றி அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நான் தயாராக இருக்கின்றேன் என அரசிடம் தெரிவித்தேன்.

தமிழ்த் தலைவர்களின் தனிப்பட்ட அபிலாசைகள் தமிழ்ச் சமூகத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என நான் அன்று ஒத்துக்கொண்டிருந்தால் இன்னும் பாராளுமன்ற உறுப்பினராக, அதுவும் இந்த 15 பராளுமன்ற உறுப்பினர்களின் தலைவனாக இருந்திருப்பேன். நானும் விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதியாக ஏற்கவில்லை. ஆனாலும் அதை நான் வெளிப்படையாக கூறுவதில்லையென சகபாடி ஒருவர் ஒருமறை என்னிடம் கூறினார். நான் எனது மக்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை. கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் கிளாலியிலிருந்து மல்லாவி வரை கிராமம் கிராமமாக வீடுவீடாக நடந்தே சென்றுள்ளேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து நான் வழக்காடுவதை நிறுத்தினேன். எனது பாராளுமன்ற வாழ்க்கையை சமூகப்பணிகளுக்காக அர்ப்பணித்தேன். வேறு எதற்காகவும் அல்ல.

திரு. எச்.எம்.ஜி..எஸ். பணிகக்கார்: நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு  பாதிக்ப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல் எவ்வாறு உதவும் என நீங்கள் நம்புகிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: முதலில் நாங்கள் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். இப்போது அவர்களிடம் போய் நாங்கள் இதனை தருவோம் அல்லது ஒரு பாதை போட்டு தருவோம் என்று கூறினால் அதில் அவர்களுக்கு அக்கறையிருக்காது. அவர்கள் முதலில் தமது சுதந்திரத்தையும் தமது மூன்றுவேளை உணவைப் பற்றியுமே சிந்தித்த வண்ணம் உள்ளனர். தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என மக்கள் நம்ப வேண்டும். நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை சென்று பார்ப்பிர்களாயின் அங்கு வசந்தம் இல்லை. உத்துர வசந்தமும் இல்லை. அது பெயரளவில் மாத்திரமே உள்ளது எந்த அபிவிருத்தியும் அங்கு இல்லை.

தலைவர்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பற்றி குறிப்பிட்டுள்ளிர்கள். இந்த நட்டஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவீர்களா?

திரு. ஆனந்தசங்கரி: கிளிநொச்சி மக்கள் குடியேற்றப்பட்ட ஒரு விவசாய பூமியாகும். காலப்போக்கில் இந்த குடியேற்றவாசிகள் செல்வந்த விவசாயிகளாக மாறினார்கள். கிளிநொச்சி ஒரு வளமிக்க மாவட்டமாக மாறியது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இந்த மாற்றத்தை கண்டேன். குடிசைகள் யாவும் அழகிய வீடுகளாக மாறின. இப்போது அவர்கள் சகலவற்றையும் இழந்து விட்டனர். நீங்கள் இதனை நேரில் சென்று பார்க்கலாம். இதற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு. அவர்கள் மந்தைகள் போல் மக்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு விரட்டியடித்தனர். அவர்களை தப்ப விட்டிருந்தால் அவர்கள் தமக்குத் தேவையானவற்றை எடுத்து சென்றிருப்பர்.

இறுதியில் அவர்கள் மாத்தளனை அடைந்தபோது  அவர்கள் உடுத்தியிருந்த உடைமையைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. பலர் தமது நகைகளை விட்டுட்டு வந்தனர். ஏனெனில் அவர்கள் ஐந்து சவரன் நகைகளுக்கு மேல் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அபோபோன்று ரூபா 5000 இற்கு மேல் எடுத்துவரவும் அனுமதிக்கப்படவில்லை. மக்கள் இடம்பெயர்ந்து சென்றபின் அங்கு அதிகளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சான்றுகள் உண்டு.

தலைவர்: எனவே நட்டஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற நட்டஈடு வழங்குவது அரசின் கடமையாகும். முதல் தடவையாக ரூபா 5000 வும் 2ம் தவணையாக ரூபா 20,000 கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சிலர் மூன்றாம் தடவையாக ரூபா 50,000 வை பெறுவதாக கேள்விப்படுகின்றேன். சகலவற்றையும் இழந்த மக்களுக்கு இது எவ்வாறு உதவும்? மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுகூட அரச பணததிலிருந்து வழங்கப்படவில்லை. அது உலக உணவுத் திட்டத்திலிருந்து வழங்கப்படுகின்றது. உழவு இயந்திரத்தை இழந்த ஒருவருக்கு அதற்கு மாற்றீடாக விவசாய உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஏதுவாக அவர்களுடைய நட்டஈடு அமைய வேண்டும். வீட்டின் மேல் கூரையும் உணவும், உடையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

முறிகண்டி கோவிலிலிருந்து கிளிநொச்சிவரை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட யன்னல்களும் கதவுகளும் மிகப் பெரியளவில் வைக்கப்பட்டுள்ளன. இராணுவத்துக்கு வீடுகள் கட்ட இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிகின்றேன். தமக்கென வீடுகட்டியோர் வீதிகளில் இருக்கும் போதும், அகதி முகாம்களில் அல்லல்படும்போதும் இராணுவத்திற்கென தயார் நிலையில் வீடுகள் கட்டப்படுகின்றன. காணிக்கு உரிமையாளர்கள் இருக்கும் போது அக்காணிகள் இராணுவத் தேவைக்கு எடுக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது நீங்கள் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகின்றீர்கள்.

இந்த நாடு ஒரு சுதந்திரமான பாதையில் செலலப் போகின்றதா? சுகல மக்களும் சம அந்தஸ்துடன் வாழப் போகின்றார்களா? அல்லது இந்த நாட்டின் ஒருபகுதி மக்கள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் போன்ற ஒரு இராணுவ அமைப்பின் கீழ் அல்லல்பட போகின்றார்களா? என்பதை நாங்கள் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டதென்றே கருதுகின்றேன்.

தலைவர்: திரு. ஆனந்தசங்கரி அவர்களே! நீங்கள் இங்கு வந்து எமக்குத் தெரிவித்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி உங்கள் தனித்தன்மையையும் சுதந்திர போக்கையும் வெளிப்படையான கருத்துக்களையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம். நீங்கள் தெரிவித்த கருத்துக்களால் நாம் நிச்சயம் பயனை அடைந்துள்ளோம். நாங்கள் எமது சிபாரிசுகளை தயாரிக்கும் போது நீங்கள் தெரிவித்த கருத்துக்களை கவனத்திற்கெடுத்து கொள்வோம்.

திரு. ஆனந்தசங்கரி: இந்த சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தமைக்கு நன்றி கூறும் அதேநேரத்தில் எனது கருத்துக்களால் உங்களுக்கு ஏதும் அசௌகரியம் ஏற்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர்: அவ்வாறு ஏதும் இல்லை

திரு. ஆனந்தசங்கரி: உங்களுக்கு எனது நன்றிகள்.

Show More
Leave a Reply to pandithar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

4 Comments

 • chandran.raja
  chandran.raja

  கேள்வி-பதில்கள் விசாரணைகள் பண்பாகவும் அழகாகவுமே இருக்கின்றன. வன்னி மக்களுக்கு ஏற்பட்ட துர்பாக்கிய நிலை இனியொருமுறை வேண்டவே வேண்டாம். ஒருவகையில் இது அவர்களுக்கு மறுபிறப்பே!.
  சயினட்கார தலைவன் தமிழ்மக்களுக்கு செய்தது முள்ளுக்கம்பிக்குள் பிடித்து விட்டதும் மண்டியிடப் பண்ணியதுமே அதற்கு மறைமுகமாக முண்டு கொடுத்தவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதும் உலகம் சுற்றும் வாலிபர்களாக அலட்சியமாக திரிவதுமே புண்ணில்புளிப்பத்தின மாதிரியான உணர்வு ஏற்படுகிறது. தமிழ்மக்கள் செய்த அடுத்த தவறாகவே இதையும் கணக்கெடுக்க வேண்டியுள்ளது.
  அவர்கள் வரவையே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். இந்த சாட்சியத்தில். முதல்மாத பென்சன் பணம் வந்த அன்றே ஒரு துரஷ்டம் பிடித்தவனுக்கு உயிர் போனதாம். அந்தநிலை வன்னிமக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. எதையும் துரிதப் படுத்துவதிலேயே அவர்கள் உரியபலனை அடைய முடியும். இதை அரசாங்கம் நுறுவீத அக்கறையுடன் செயல் படுத்தவேண்டும். சகலவிதத்திலும் உந்துதல் கொடுக்கப்படல் வேண்டும்.அவர்கள் இரண்டாவது மழை காலத்தை சந்திக்கப்போகிறார்கள்.

  Reply
 • pandithar
  pandithar

  ஐயா சங்கரியார் கூட சந்திரிகா அரசு கொண்டு வந்திருந்த நல்லதொரு தீர்வுத்திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர். சிகல உறுமய ஜே.வி.பி> யு.என்.பி போன்ற கட்சிகளோடு இணைந்து அதற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். அந்த தீர்வுத்திட்டத்தை எரித்து கொழுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தவர். காரணம் இது போதாது என்றுதான். கறிக்கு கொஞ்சம் உப்பு காணாது என்பதால் உணவே வேண்டாம் என்று சொன்னது போல். இன்று என்ன நடந்திருக்கின்றது. அதை விட எதை பெரிதாக பெறப்போகின்றார்கள். முதலில் வரலாற்று தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோளுங்கள் சங்கரி ஐயா அவர்களே…

  Reply
 • SS Ganendran
  SS Ganendran

  பண்டிதர் சொல்வது முழுத்தவறு , சந்திரிகா கொண்டுவந்த்த தீர்வுத்திட்டத்தினை சங்கரி மனதுக்குள் எதிர்த்தாரோ எனக்குத்தெரியாது, ஆனால் சந்திரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதியினை தயார்படுத்தியதில் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கிருந்த முக்கிய பங்குகள் பண்டிதருக்கு தெரியவில்லைபோலவே தெரிகிண்றது. சந்திரிக்காவின் தீர்வுத்திட்டத்தினை கூட்டணி எதிர்க்கவேண்டும் என மிக முனைப்புடன் செயற்பட்டவர் ஜோசப் பரராஜசிங்கமும் அவருக்கு சார்பான சிலரும் அத்துடன் புலிகளுக்கு ஆதரவு வழங்காத கூட்டணியின் சில இளைஞர்களுமே தீர்வுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கடும் வாதத்தில் ஈடுபட்டு முடிவு இல்லாமலேயே கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் முடிவுக்கு வந்தது மட்டுமல்லாமல் தீர்வுத்திட்ட விவாதத்தையோ அல்லது வாக்கெடுப்பையோ நடாத்தவேண்டாமென சந்திரிக்காவிற்கு ஆலோசனை வழங்கியவர் சம்பந்தர். அதுபோலவே தீர்வுத்திட்டமும் கைவிடப்பட்டது. இதுதான் உண்மை.
  ஆனந்தசங்கரி அச்சமயம் பாராளுமண்ற உறுப்பினரும் அல்ல தீர்வுத்திட்டம் சமர்ப்பிக்க இருந்த்த நாளில் சங்கரி இலங்கையிலேயே இருக்கவில்லை.
  பண்டிதர் நான் ஏதோ உங்களில் தவறு கண்டுபிடித்து ஆனந்தசங்கரிக்கு வக்காளத்து வாங்குகிணறேன் எனத் தவறாகத்தன்னும் எண்ணிவிடாதீர்கள். ஆனந்தசங்கரியின் தவறுகள் கழுத்தறுப்புக்கள் நிறையவே இருக்கினன்றது அவற்றை கண்டுபிடித்து எழுதுங்கோ

  Reply
 • pandithar
  pandithar

  திரு ஆனந்தசங்கரி அவர்கள் கொழும்பில் நடந்த தீர்வுத்திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது என்பது உண்மை.

  அதை சங்கரி ஐயா அவர்களிடமே கேட்டுப்பார்க்கலாம். ஆம் என்றும் சொல்லி அதற்கு ஒரு விளக்கமும் தருவார்…

  Reply