Thursday, October 21, 2021

‘‘தடுத்துவைக்கப்பட்டு உள்ள எல்ரிரிஈ போராளிகள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படுவார்கள்’’ பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க – நேர்காணல் : த ஜெயபாலன்

rajiva_wijesinha_prof‘‘தடுத்துவைக்கப்பட்டு உள்ள எல்ரிரிஈ போராளிகள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படுவார்கள்’’ என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க இன்று (செப்ரம்பர் 18, 2010) தேசம்நெற் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். 2010இல் ‘’சிறிலங்கா வளம்கொளிக்கும் நாடாக இருக்கும். அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்கம் காணப்படும்’’ என்றும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க நம்பிக்கை வெளியிட்டார். ‘இலங்கை யுத்தத்திற்கு பின்னான எதிர்காலம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க றோயல் கொமன்வெல்த் சொசைடியில் நேற்று (செப்ரம்பர் 17 2010) உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ‘‘யுத்தத்திற்குப் பின் சிறிலங்கா விரைவாக வழமைக்குத் திரும்பிக் கொண்டு உள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் கிராமப் புறங்கள் முன்னுரிமை வழங்கப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது. சுயாதீனமாக எங்கும் சென்றுவரக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது. அவசரகாலச் சட்ட விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளது. 5000 தமிழ் பொலிஸாரை பொலிஸ் பிரிவில் சேர்த்துக் கொள்வதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது’’ என்ற விடயங்களை சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவின் அரைமணி நேர உரையின் பின் சபையில் இருந்தவர்கள் மத்தியில் இருந்து கேள்விகளுக்கு நேரம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரம்பரிய ஆதரவாளர்களால் நிறைந்திருந்த மண்டபத்தில் இலங்கை தொடர்பான விடயங்களில் ஈடுபாடுடையவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். கேள்வி நேரத்தில் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மீதும் இலங்கை அரசு மீதும் கடுமையான கண்டனங்கள் வைக்கப்பட்டன. இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், குடும்பக் கட்டுக்குள் அதிகாரங்களைக் குவிப்பது, பிறள்வான ஆட்சிமுறை போன்ற வழமையான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

இவற்றுக்குப் பதிலளித்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, ‘‘தமிழ் மக்களுக்கு கடந்த கதலங்களில் அநீதி இழைக்கப்பட்டது. அதனால் தமிழ் மக்களின் உணர்வுகளை எனக்கு புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுடன் நானும் கவலைகொள்கிறேன். ஆனால் இன்று அரசாங்கம் அநீதி இழைக்கப்பட்ட சூழ்நிலையை மாற்றி அமைக்கின்ற செயன்முறையில் தன்னை ஈடுபடுத்தி உள்ளது. 1987ல் எல்ரிரிஈ மட்டும் ஆயுதங்களை ஒப்படைக்காமல் தொடர்ந்தும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இன்று யுத்தம் வெல்லப்பட்டு சமாதனச் சூழல் ஏற்பட்டு உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் எதிர்மறையாக செயற்படுவதால் எவ்வித பலனும் இல்லை’’ எனத் தெரிவித்தார்

சர்வதேச நாடுகளின் மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பற்றிக் குறிப்பிடுகையில், ’’பனிப்போருக்குப் பின் தேவைகளைப் பொறுத்து மேற்குநாடுகள் மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்கின்றனர்’’ என தெரிவித்தார். கனடாவைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர் ஒருவர், ‘‘கனடாவில் உள்ள பொருளாதார அகதிகளை திருப்பி அனுப்ப முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கையில் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகலாம் என தஞ்ச வழக்குகளின் நீதிபதிகள் கருதுகின்றனர். ஆகவே எப்போது அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும்’’ எனக் கேள்வி அனுப்பினார். அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, ‘‘கனடா ஏன் அவர்களை மனித வளமாகக் கருதவில்லை. அவர்களை தங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாமே”” எனப் பதில் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தம் பதிலளிக்கையில்,’’கனடாவில் உள்ள 50 வீதமான தமிழர்களும் விடுமுறைக்கு இலங்கை வந்து செல்கின்றனர். அதனால் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள் என்பதெல்லாம் ஆதாரமற்ற கதைகள். கனடாவில் வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் செழிப்பான இடங்களுக்கு மக்கள் கவரப்படுவது இயல்பானது. இலங்கைக்கு யாரும் திரும்பி வருவதில் எந்தத்தடையும் இல்லை’’ என்றார் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க.

இன்று (செப்ரம்பர் 18 2010) காலை லண்டனைவிட்டு புறப்படுமுன் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணல்.

தேசம்: தடுத்து வைக்கப்பட்டு உள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் காலவரையறையை குறித்துள்ளதா?

பா உ ரஜீவ: யுத்தத்தின் முடிவில் 10 000 வரையான எல்ரிரிஈ உறுப்பினர்கள் சரணடைந்தனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் முகாம்களில் உள்ளவர்களால் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் எல்ரிரிஈ இல் என்ன ஈடுபாட்டைக் கொண்டிருந்தார்கள் என்ற வகையில் A, B, C, D, E, F, G என வகைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் A, B, C பிரிவுகளில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களும் ஏனையவர்கள் 10,000 பேரும் உள்ளனர். இந்தப் 10 000 பேரும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். ஏற்கனவே சில ஆயிரம் பேரை அரசாங்கம் விடுவித்து உள்ளது. தற்போது 7,000 பேர் வரையிலேயே உள்ளனர். இவர்களில் இன்னும் 1400 பேர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர். மாதத்திற்கு 1,000 பேரை விடுவிப்பது என்ற அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகிறது.

A, B, C பிரிவுகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் எல்ரிரிஈ இன் முக்கிய உறுப்பினர்கள். இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஏனையவர்களுக்கு ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும். ஏனையவர்கள் ஒரு சில வருடங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு தொழில் பயிற்சி உளவியல் ஆலோசணைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் திருமணங்கள் கூட செய்து வைத்துள்ளது.

தேசம்: அரசாங்கத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மத்தியிலேயே தற்போது அதிருப்தி நிலவுகின்றது. வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். வட மாகாண அபிவிருத்தியை முன்னெடுக்க அமைக்கப்பட்ட குழுவில் வடமாகாணத்தைச் சேர்ந்த யாரும் இல்லை.

பா உ ரஜீவ: அபிவிருத்தி விடயங்களை துரிதமாக முன்னெடுக்க அமைச்சர் பசில் ராஜபக்ச சில துரித விடயங்களை மேற்கொள்கிறார். அப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். ரிஎன்ஏ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதித முன்னுரிமை வழங்கப்படுவதாக பல சமயங்களிலும் குற்றம்சாட்டி வருகின்றது. மற்றைய தமிழ் கட்சிகளும் அப்போது பிளவுபட்டு நின்றன. அபிவிருத்தி துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனாலேயே கட்சிகள் அக்குழுவில் இடம்பெறவில்லை என நினைக்கிறேன்.

தேசம்: வடக்கு – கிழக்கு மாகாணத்தின் குடிபரம்பலை மாற்றி அமைக்கின்ற நிகழ்ச்சி நிரல் ஒன்று அரசாங்கத்திடம் உள்ளதா? அரசாங்கத்தை ஆதரிக்கின்ற கட்சிகளே அவ்வாறான திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இருப்பதாக நம்புகின்றன.

பா உ ரஜீவ: இவ்வாறான செய்திகள் சென்ற ஆண்டில் பரப்பப்பட்டு இருந்தது. அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை இப்போது ஒரு வருடம் ஆன பின் அறிந்திருப்பீர்கள். எண்பதுக்களில் இடம்பெயர்ந்த சிறிய தொகையான சிங்கள கிராமவாசிகள் தங்கள் நிலங்களுக்கு திரும்பியதைத் தவிர அங்கு வேறு குடியேற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.

வடக்கு கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றி அமைக்கின்ற எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை நான் நிச்சயமாகத் தெரிவிக்க முடியும். ஆனால் உங்களுக்கு விளங்க வேண்டும் வடக்கில் சில இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அதையொட்டி சிறிய அளவில் இராணுவக் குடும்பங்கள் குடிஇருப்பார்கள்.

இது பற்றி அமைச்சர் கருணாவும் கூட அரசாங்கத்திற்கு வலியுறுத்தி உள்ளார். இக்குடியிருப்புகள் சிறய அளவுக்குள்ளாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ முகாம்களுடன் இராணுவக் குடியிருப்புகள் உள்ளது. அவ்வாறு சிறிய குடியிருப்புகள் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களுடன் அமைக்கப்படும் இது வடக்கு கிழக்கின் குடிபரம்பலை மாற்றி அமைக்கும் நோக்குடன் செய்யப்படவில்லை. அவ்வாறான நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை.

தேசம்: இலங்கையில் இனப் பதட்டத்தை தீர்ப்பதற்கு அதனை ஏற்படுத்திய சூழலை மாற்றி அமைக்க வேண்டும் என நேற்று றோயல் கொமன்வெல்த் சொசைட்டியில் இடம்பெற்ற உரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். இனப்பதட்டமற்ற சூழலை உருவாக்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

பா உ ரஜீவ: இந்த இனப்பதட்டத்தை உருவாக்கியதில் மொழி முக்கியமானது. ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டுவரப்பட்டது மடமைத்தனமானது. அதனைப் பின்னர் மாற்றி அமைத்த போதும் அதனை ஆட்சிக்கு வந்தவர்கள் சரிவர அமுல்படுத்தவில்லை. ஆனால் நாம் இன்று அதனை அமுல்படுத்துகின்றோம். இளையவர் மட்டத்தில் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் தெரியாமல் பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பில்லை. ஏற்கனவே அரசதுறைகளில் உள்ளவர்களை வேலைநீக்கம் செய்ய முடியாது. ஆனால் அவர்களையும் தமிழ் கற்கத் தூண்டுகிறோம்.  

பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியிலான தரப்படுத்தலைக் கொண்டு வந்தது தவறு. அது பிரதேச ரீதியான தரப்படுத்தல் ஆன போது கொழும்பும் பாதிக்கப்பட்டது. ஆனால் அங்கு வேறு கல்வி வாய்ப்புகளும் தனியார்துறை வேலை வாய்ப்புகளும் இருந்தபடியால் அங்கு குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அரசதுறை மட்டுமே இருந்ததாலும் வேறு கல்வி வாய்ப்புகள் இல்லாததாலும் அவர்களை பிரதேச ரீதியான தரப்படுத்தலும் கடுமையாகப் பாதித்தது. இன்று யாழப்பாணத்திற்கு இத்தரப்படுத்தல் உதவுகின்றது.

எதிர்காலத்தில் எமது கல்விக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான ஆலோசணைக் குழுக்கள் பாராளுமன்றதில் உள்ளது. தமிழ் கட்சிகள் இவற்றில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றனர். ரிஎன்ஏ யும் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். முன்னைய அரசாங்கங்களில் எல்லோரும் அமைச்சர்களாக இருந்த நிலை இப்போது இல்லை. பின்வாங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாராளுமன்றக் குழுக்கள் விவாதங்களையும் ஆலோசணைகளையும் வழங்குகின்றன.

நாட்டினுடைய சட்டம் சமத்துவமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொலிஸ் படைகளில் தமிழ் பொலிசார் இணைக்கப்படுகின்றனர். இராணுவப் படையணியிலும் 25 வீதமானவர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 10 வீதமானவர்கள் என்றாலும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

எல்ரிரிஈ இன் ஊடுருவல் இருக்கலாம் என்பதால் படையணியில் இன்னமும் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் என்னிடம் குறிப்பிட்டதாக ஞாபகம். ஆனால் இராணுவ அலுவலர்களாக தமிழர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நாட்டினுடைய கட்டுமானங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மக்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மன்னாரில் உள்ளவர்களுக்கும் திருகோணமலையில் உள்ளவர்களுக்கும் இடையிலேயே தொடர்புகள் இல்லை.

மனிதவளங்கள் விருத்தி செய்யப்பட வேண்டும். பொதுத் துறைகளில் உள்ளோர் கண்ணியமாக உரையாட வேண்டும். கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.

தேசம்: நேற்று உங்களது உரையில் நீங்கள் பிரதேசங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதை வரவேற்பதாகக் கூறி இருந்தீர்கள்.

பா உ ரஜீவ: நிச்சயமாக.

தேசம்: ஆனால் நீங்கள் அங்கம் வகிக்கின்ற அரசாங்கம் அதிகாரங்களைப் பரவலாக்குவதில் எவ்வித ஆர்வத்தையும் காட்டவில்லை. ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தையே அமுல்படுத்த அரசு முன்வரவில்லை.

பா உ ரஜீவ: 13வது திருத்தத்தில் சில பிரச்சினைகள் உள்ளது. வரதராஜப் பெருமாள் புலிகளின் நெருக்கடியால் தமிழீழத்தை பிரகடனப்படுத்தியது 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக சிக்கல்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. ஆனால் பொலிஸ் காணி அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பெரிய முரண்பாடுகள் இல்லை. பொலிஸ் அதிகாரத்தை வடக்குக்கு கையளிப்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால் அதனை தென் மாகாணங்களுக்கு கையளிப்பதில் சிக்கல்கள் எழும்.

மேலும் அரசுக்கும் மாகாணத்துக்குமாக வரையறுக்கப்பட்ட கொன்கறன்ட் லிஸ்ட்டில் உள்ள வரையறைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டி உள்ளது.

ஆனால் கிழக்கில் மகாணசபையில் உள்ளவர்களிடம் அதனை நடாத்துகின்ற திறன் குறைவாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் எல்லாம் அவர்கள் தங்கள் எண்ணப்படி செயற்பட முடியும். ஆனால் அவர்கள் இதைக்கேட்கலாமா அரசு அனுமதிக்குமா என்றெல்லாம் யோசிக்கிறார்கள்.

தேசம்: பொலிஸ், காணி தவிர்ந்த விடயங்களில் மாகாணசபை தன் எண்ணப்படி செயற்படலாம் என்கிறீர்கள் ஆனால் கிழக்கு மாகாணத்து பாடசாலைக்கு ஒரு ஆசிரியரையோ அல்லது அங்கு ஓடுகின்ற ஒரு பஸ் வண்டிக்கு ஒரு சாரதியையோ நியமிக்கின்ற அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் nதிரிவிக்கின்றாரே.

பா உ ரஜீவ: வடக்கு கிழக்கில் ஆளுனர் ஆட்சியே நீண்டகாலமாக இருந்தது. அதனால் ஆளுனரே முடிவுகளை எடுத்து வந்தார். இப்போது முதலமைச்சர் பதவிக்கு வந்ததும் ஒரு அதிகாரப் போட்டி நிலையுள்ளது. முதலமைச்சருக்கு ஆலோசணை வழங்குபவர்கள் தங்கள் அதிகார மேலாண்மையை நிறுவவும் பார்க்கிறார்கள். இதில் முதலமைச்சரும் ஆளுனரும் ஒத்துழைத்துப் பணியாற்றினால் பலவிடயங்களைச் சர்ச்சையின்றிச் செய்ய முடியும். கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரும் ஆளுனரும் ஒத்துழைத்து பல விடயங்களைச் செய்கின்றனர். கிழக்கில் நிலைமைகள் பெருமளவு முன்னேற்றமாகவே உள்ளது. அதிகார குழப்பங்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

தேசம்: கிழக்கு மாகாணம் மாகாண சபையூடாக இயக்கப்படுகிறது. வடமாகாணத்திற்கான தேர்தல் எப்போது நடாத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

பா உ ரஜிவ: அடுத்த ஆண்டில் வடமாகாண சபைத் தேர்தலை நாடாத்தப்படும் என நினைக்கிறேன். தமிழ் கட்சிகளிடையே ஒரு உடன்பாடில்லை. வீ ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா இருவரும் உறுதியான அரசியல் உடையவர்கள். அவர்களில் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவதே இல்லை. இதனால் தான் வவுனியா நகரசபையை ரிஎன்ஏ கைப்பற்றியது. அவ்வாறான ஒரு நிலை வடமாகாண சபைக்கு ஏற்படக் கூடாது. (இப்போது ரிஎன்ஏ இன் வவுனியா நகரசபை இயங்காதது போல வடமாகாணசபைக்கு அந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.)

இப்போது நிலைமை மாறியுள்ளது. அவர்கள் இனைந்து செயற்படுகின்றனர். டக்ளஸ் தேவானந்த சூழலைப் புரிந்துசெயற்படுகின்ற ஒருவர். அவர் பல விடயங்களைச் சாதித்து உள்ளார். அப்போதெல்லாம் எல்ரிரிஈ உடன் தனித்து நின்று போராடியவர். அவருடைய தைரியத்தை மதிக்கிறேன்.

தேசம்: நேற்றைய உரையில் தமிழ் மக்களுடைய உணர்வுகளை மதிப்பதாகக் கூறியிருந்தீர்கள். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்த இனப்பிரச்சினையை தீர்க்கத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தீர்கள்.

பா உ ரஜீவ: சிறிய திருத்தம், ஆட்சிக்கு வந்தவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டனர் என்பதல்ல அவர்களே இனப்பிரச்சிiனைக்கு காரணமாகிவிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த போது ஜேஆர் அரசு மேற்கொண்ட இனக்கலவரங்களே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது. அந்த வகையில் டக்ளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றவர்களுடன் அன்று எனக்கு அனுதாபம் இருந்தது. 1987ல் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அரசியலுக்கு வந்த துணிவைப் பாராட்டுகிறேன். பல வருடங்களாக எல்ரிரிஈ யை எதிர்த்து அவர்கள் அரசியல் செய்துள்ளனர். அந்த தைரியத்தை நான் மதிக்கிறேன்.

தேசம்: இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது ஒரு நல்ல விடயம்!

பா உ ரஜீவ: நிச்சயமாக! நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்கின்றனர். தங்கள் நாளாந்த வேலைகளைச் செய்கின்றனர். அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது.

தேசம்: இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது ஒரு நல்ல விடயம்! ஆனால் அது முடிவுக்கு வந்த முறை தமிழ் மக்களது உள்ளங்களை மிகக் காயப்படுத்தி உள்ளது. இந்த யுத்தத்தை வேறுவிதமாக முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பா உ ரஜீவ: 1987 முதல் எல்ரிரிஈ அனைத்து பேச்சுவார்த்தைகளையும் குழப்பி யுத்தத்தில் தீவிரமாக நின்றது. இந்த யுத்தத்தில் 2009 முற்பகுதிவரை பெரும் இழப்புகள் ஏற்படவில்லை. அதன்பின் எல்ரிரிஈ இழப்புகளை பலமடங்கு பெருப்பித்தது. அதுமட்டுமா மக்கள் மீதே எல்ரிரிஈ துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இதனை ஐக்கிய நாடுகள் அறிக்கையே தெரிவிக்கின்றது. எல்ரிரிஈ மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்து இருக்காவிட்டால் இவ்வளவு இழப்பு ஏற்பட்டு இருக்காது. எல்ரிரிஈ மக்களை விடுவிக்க வேண்டும் என்று உலகமே கேட்ட போதும் ரிஎன்ஏ அப்படி ஒரு கோரிக்கையை விடவே இல்லையே.

எல்ரிரிஈ போன்ற கொடிய அமைப்புடன் வேறொரு முறையில் அதனைச் செய்திருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. மக்களை மனிதக் கேடயங்களாக்கி அம்மக்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகமும் செல்வீச்சும் நடாத்தி பழியை எதிர்தரப்பில் போடும் அமைப்புடன் வேறுவிதமாக இந்த யுத்தத்தை முடித்திருக்க முடியாது.

தேசம்: புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பா உ ரஜீவ: அவர்களிடம் இருந்து வடக்கு கிழக்கை விருத்தியடையச் செய்வதற்கான உதவிகளை எதிர்பார்க்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் அரசாங்கத்திறகும் இடையே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் நிச்சயமாக ஒரு 10வீத முரண்பாடுகள் உண்டு. அதே சமயம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய விடயங்களில் அரசாங்கத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் 90 வீதமான விடயங்களில் உடன்பாடுகள் உண்டு.

அவர்கள் உடன்படாத விடயங்களில் உதவ வேண்டியதில்லை. ஆனால் தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளை அமைப்பது போன்ற விடயங்களில் அவர்களும் ஈடுபட முடியுமே. மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்கலாம். அதனை அவர்கள் அரசாங்கத்தின் மூலம் செய்ய வேண்டியதில்லையே நேரடியாகவே செய்யலாமே. இவ்வாறு பலவாறாக அவர்கள் தங்களுக்கு உதவலாம் அதற்கு உதவ முன்வர வேண்டும். அதற்கு அரசாங்கம் தடையாக இருக்காது.

தேசம்: 2020இல் யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளில் இலங்கை எவ்வாறு இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பா உ ரஜீவ: சிறிலங்கா வளம்கொளிக்கும் நாடாக இருக்கும். விவசாயமும் ஏனைய துறைகளும் நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்து விளங்கும். கல்வித்துறையும் புதிய கல்விக் கொள்கையையும் புதிய கட்டமைப்புகளையும் கொண்டு சிறந்து விளங்கும். இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்கம் காணப்படும்.

Show More
Leave a Reply to George Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

3 Comments

 • George
  George

  முகாமில் உள்ளவர்களையும் விட்டு தடுத்து வைத்திருக்கும் போராளிகளையும் விட்டால் எப்படி புலிப் போராட்டத்தை முன்னெடுக்கிறது. இவையெல்லாரையும் உள்ளுக்கு வைத்திருந்தால் தான் போராட வசதியா இருக்கும்.

  Reply
 • தகவல்
  தகவல்

  றோ.கொ.சொ ல் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் 20 வருடங்களாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகள் புத்தளத்தில் எவ்வித அரச உதவியும் இன்றி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

  அதற்குப் பதிலளித்த ரஜீவ அது மிகப்பெரிய கொடுமை என்றும் அரசாங்கம் தற்போது அரசாங்கம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

  Reply
 • George
  George

  ’’கனடாவில் உள்ள 50 வீதமான தமிழர்களும் விடுமுறைக்கு இலங்கை வந்து செல்கின்றனர். அதனால் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள் என்பதெல்லாம் ஆதாரமற்ற கதைகள்.” பா உ ரஜீவ

  Reply