இலங்கை தமிழனின் இன்றைய யதார்த்தம்! : வாசுதேவன்

Students_Mannarதமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் இன்று குழிதோண்டிப் புதைத்துவிடப்பட்டுள்ளது. ஆனால் புலம்பெயர் மன்ணில் உள்ள எச்ச சொச்ச தேசிய படை வீரர்கள் கறுப்பு சிவப்பு என்று தற்போது தமக்குள் மோத வெளிக்கிட்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் இருப்பை காக்க என்று தொடங்கிய போராட்டம் இன்று தமிழ் மக்களின் அரசியலை நிர்வாணமாக்கி அவர்களை நட்டாற்றில் விட்டுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மாற்றிய அனைவரும் புலிகளின் அராஜகத்தால் அழித்தொழிக்கப்பட மிஞ்சிய புலிகளும் அரசினால் அழித்தொழிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அவர்களுக்கு இருந்த உரிமைகளையும் பறிகொடுப்பதற்கே வழி வகுத்தது. தமிழ் பேசும் மக்களிற்கு குறைந்தபட்சம் கிடைக்க இருந்த பல தீர்வுகள் இந்த போராட்டத்தல் நிராகரிக்கப்பட்டு இன்று தருவது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் தமிழ் மக்கள் உள்ளனர்.

இந்த போராட்டத்தினால் இன்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் சொல்லில் அடங்காது. பட்டினிக் கொடுமைகளை காணத வடக்கு கிழக்கில் இன்று பலர் பட்டினிக் கொடுமையால் தங்கள் குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்க்கும் கட்டத்தில் உள்ளனர்! வேலையற்ற எந்த வித தொழில் பயிற்சியுமற்ற மற்றவர்கள் தருவதை எதிர்பார்க்கும் ஒரு சமூகத்தை இந்த போராட்டம் தோற்றுவித்துள்ளது. எண்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இன்று தமது எதிர்காலத்தை வெறும் சூனியத்துடன் எதிர் நோக்கியுள்ளனர். வீதியோரங்களில் தம் வீடுகளை இழந்த சமூகம் ஒன்று வெறும் கொட்டில்களை போட்டு முற்றாக  நம்பிக்கையிழந்த நிலையில் ஏதோ வாழ வேண்டும் என்று தம் வாழ்கையை தொடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் அற்ற தம் வாழ்க்கைகளை அன்னியர்களுடன் வாழத் தொடங்குகிறார்கள். விடுதலைத் தீயினில் சங்கமிக்க வாருங்கள் என்று அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் சிறைகளில் தம் இருண்ட எதிர்காலத்தை உறுத்துப்பார்த்தபடி விரக்தியுடன் காலத்தை ஓட்டுகின்றனர். இவர்களின் பலர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு யுத்த களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். 

IDP_Camp_Injured_Manஆனால் புலத்திலோ கறுப்பு சிவப்பு பச்சை என்று பல்வேறு கூட்டங்கள் தங்கள் இருப்பை காக்க தங்களுக்குள் மோதிக்கொண்டு ஆளுக்காள் சேற்றை வாரியடித்துக் கொண்டுள்னர். யுத்த காலத்தில் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரைச்சதம் கொடுப்பதற்கு ஆயிரம் கதை கூறுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு தான் எனவே சிறீலங்கா அரசு செய்யட்டும் என்று புறந்தள்ளி விட்டு தங்கள் குழந்தை செல்வங்களின் முதல் மாதவிடாய்க்கு 5 நட்சத்திர விடுதியில் விழா எடுக்கிறது புலம்பெயர் சமூகம்! ஆயிரக்கணக்கில் அகதிகள் அனாதைகள் விதவைகள் அடுத்த வேளை உணவிற்கு அல்லலுறுகையில் மாதமொரு ஆண்டு விழா வாரமொரு அரங்கேற்றம் நாளுக்கொரு பிறந்தநாளுடன் இருக்கின்ற சுபதினங்களில் கல்யாணம் கச்சேரியில் வயிறுபுடைக்க உண்டுவிட்டு தலைவர் நடுக்கடலிலை சுத்துறார் ஒரு நாளைக்கு வெளியிலை வருவார் என்று ஏப்பக்கதைகள் கதைக்கிறார்கள். இவர்கள் உண்ணாத உணவுகளை கறுத்தப்பைகளில் சேர்க்க கோட்டு சூட்டுடன் வாடகைக்கு அமர்த்தப்படும் வெள்ளைக்காரர்கள்.

ஒவ்வொரு ஈழப்போரிற்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் புலிக்கு பணம் சேர்த்த பண முதலைகளின் இருப்பை காக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள். போரில் வெற்றி வந்தால் கொண்டாடும் இந்த சமூகம் தோல்விக்கு இன்று ஒருவரை தேடி அவரை துரோகி என முத்திரை குத்துவதில் காலத்தை ஓட்டுகின்றனர். தற்போது இந்த துரோகிகள் பட்டியல் மைல் கணக்கில் நீண்டுகொண்டு முடிவற்று செல்கிறது. அதிலும் பதவிகள் துரோகி மேஜர் ஜெனரல், துரோகி லெப்டினட் கேணல் என்று. ஆனால் இந்த பட்டியலில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் மட்டும் வரவே வராது! ஏனெனில் அவர் இப்போது எம்மோடு இல்லை. குறைந்தபட்சம் புலிகளின் தோல்வியை கூட சுதந்திரமாக சுயவிமர்சம் செய்யத் தயங்கும் இவர்கள் இன்னமும் புலிகள் வளர்த்த புழுத்துப்போன கலாச்சாரத்தில் நின்று சுற்றி சுற்றி வருகிறார்கள் ‘அவர் வருவார், வந்து ஒரு பதில் தருவார்’ என்று கனவுலகில் சஞ்சரிக்கும் இவர்கள் தற்போது நாடுகடந்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்.

தாயகத்தில் அரசிற்கும் புலிகளிற்கும் இடையில் சிக்கி சின்னாபின்மாகிப் போன மக்களை யாரும் கவனிக்க தயாராக இல்லை! சிறு சிறு குழுக்களாக ஒரு சிலர் இன்று பல்வேறு உதவிகளை செய்த போதும் இது தேவைப்படும் உதவிகளில் ஒரு கடுகளவே! உதவிகள் என்பது வெறும் பணம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. உளவியல் ரீதியாக இன்று பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களிற்கு பல்வேறு தேவைகள் இன்று உள்ளன. பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்கள் தம் மன அழுத்தங்களால் இன்று மனநோயாளிகளாக மாறி வருகின்றனர். யுத்தம், இரத்தம், சதைத் துண்டங்கள் போன்ற அவலங்களை பார்த்த குழந்தைகள் மூர்க்கதனமான பழக்க வளக்கங்களை சாதரணமாக செய்கிறார்கள். தன்னுடன் படிக்கும் சக மாணவனை கல்லால் அடித்து விட்டு ரத்தம் ஒழுகுவதை பார்த்து ரசிக்கும் கூரூர மனப்பாங்கில் உள்ள பல குழந்தைகளை இன்று ஆசிரியர்கள்  எதிர்நோக்க வேண்டியுள்ளது. தன் கண்முன்னே கொல்லப்பட கணவனை அரை குறையாக புதைத்து விட்டு ஓடிய மனைவியின் மன அவலங்கள் இன்னும் அவர்களின் மனதில் ஒட்டியுள்ளது. இந்த மன உளைச்சலுடன் வெளியல் வந்து தம் வாழ்வை தொடங்க முயல்கையில் ‘முண்டச்சி முழிவியளத்திற்கு வந்திட்டுதுகள்!’, ‘தாலியறுந்ததுகள் வீடுகளுக்கை இருக்காமல், எங்கடை உயிரை எடுக்குதுகள்’ என்று வசைவாங்கியே தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

IDP_Camp_Barbed_Wireஇதற்கும் மேல் இடம்பெயர்ந்து வந்த ஒரு புதுச்சாதி யாழ் குடாவில் உள்ளது. இவர்களை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக அங்கு வசித்து வருபவர்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர். காரணம் இவர்கள் என்ன சாதியென்று தெரியாதாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த இந்த மக்கள் புலிகள் அல்லது புலிகளின் ஆதவராளர்கள். எனவே இவர்களுக்கு தொழில் கொடுக்க பயப்படுவதுடன் இவர்களை ஒரு கள்வர்களை போல பார்க்கிறர்கள். சந்திக்கு சந்தி நின்று பெண்களுடன் சேட்டை பண்ணும் இன்னுமொரு கூட்டம் மாலையானதும் மதுவில் மயங்குகிறார்கள். மாலை மயக்கதில் வீடுகளை பூட்ட மறந்தால் முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இரத்தம் கண்ட பின்னே அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு சென்று விடுவார்கள்.

இன்று யாழ் குடாவில் தற்போது பல வீதிகள் செப்பனிடும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இதற்கு கூட தெற்கில் இருந்து தான் ஆட்களை கெண்டு வரவேண்டியுள்ளது. காரணம் பலருக்கு இந்த வேலைகள் பிடிப்பில்லை. அத்துடன் ஒரு சிலருக்கே இந்த தொழில் தெரிந்திருக்கிறது. மேசன் வேலை செய்ய ஆட்கள் இல்லை. தச்சுத் தொழில் செய்ய வவுனியாவிலிருந்து ஆட்களை கொண்டு வரவேண்டியுள்ளது. இதற்கு காரணம் புலம்பெயர் நாட்டில் இருக்கும் நம்மவர்கள் அனுப்பும் பணமா அல்லது சோம்பலா அல்லது தொழில் சார் அறிவீனமா? புரியவில்லை. ஒரு சிறு வேலையை கூட சுயமாக சிந்திக்க தெரியாத ஒரு சமூகமாக உருவாகியுள்ள சமூகத்தில் இன்று ஓரளவு படித்து வேலை செய்பவர்கள் வெளிநாடு போவதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.

அரசு கவனிக்கவில்லை அரசு புறந்தள்ளுகிறது என்று சோம்பேறித்தனமாக சாட்டுச் சொல்பவர்கள் மத்தியல் ஒரு சிறுபான்மையானவர்கள் கடும் வேலைசெய்து முன்னேற முனைவது ஒரு சிறு ஆறுதலாக உள்ளது. வெளிநாட்டில் உறவினர்கள் ஏதுமற்ற குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அண்மையில் தன் தாயாரிற்கு 7 லட்சம் செலவு செய்து இருதய சத்திரசிகிச்சை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் யாழ் குடாவில் படித்து அங்கேயே தங்கி வேலை செய்பவர்கள். அரச வேலை செய்யும் அதே நேரம் ஒரு சிறு வியாபார நிறுவனத்தை நடாத்தி அதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கி இந்த மருத்துவ சிகிச்சைக்கு யாரிடமும் கை நீட்டாது தங்களின் தாயாரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இவர்கள் ஒன்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. தாயார் தையல் தொழில் தந்தையார் மரக்கறி வியாபாரி. இவர்களும் மற்றவர்கள் போல் யாழ் குடாவில் பல்வேறு சமயங்களில் இடம் பெயர்ந்தவர்கள். சொந்த காணி கூட இல்லாது வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள். தங்கள் விடா முயற்றியால் இன்று சொந்தமாக ஒரு காணி வாங்கி வீடு கட்டி வருகிறார்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  என்பதை இவர்கள் நிருபித்துள்ளார்கள். 

தாயகப்பிரதேசம் வடக்கு கிழக்கு அது இணைந்தே தீர்வே தீர்வு என அகங்காரமாக வந்த தீர்வுகளையெல்லாம் தூக்கியெறிந்த ஆளப்பிறந்த இனம் என கொக்கரித்த தமிழ் தேசியப்பற்றாளர்கள்  இன்று ஆட்டம் கண்டு என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறார்கள். ஆள ஒரு துண்டு நிலம் கொடுத்தாலும் ஆட்சி செய்ய மன்னன் அற்ற நிலைதான் இன்று. இதன் வண்ட வாளங்களை இன்று வவுனியா நகரசபை நிர்வாகங்களில் நன்கே காண முடிகிறது. நகர சபைகளை கூட இயக்க தகுதியற்றவர்கள் மாகாண சபையை எப்படி நிர்வாகிக்க போகிறார்கள்? இது அவர்களின் தவறல்ல. தொழில் சார் அறிவு முகாமைத்துவ அனுபவம் தனிமனித தலைமைத்துவ பண்புகளற்ற ஒரு சமூகத்தை தான் இந்த போர் படைத்துள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் சிந்திக்க வேண்டிய காலம்.

Murukandi_Kovilஅண்மையில் பேராசியர் ராஜன் கூல் நாடு திரும்ப முன் சந்தித்த சந்திப்பில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட்ட விடயம் நிரந்தரமாக நாடுதிரும்ப முடியாத அறிஞர்கள் விடுமுறையிலாவது அங்கு சென்று தம் அறிவுசார் அனுபவங்களை அங்குள்ள துறைசார்ந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது.

Nallur_Thiruvillaசிறுதுளி பெரு வெள்ளம் போல் இன்று தோன்றிய இந்த சிறு மாற்றங்கள் தொடரும் பட்சத்தில் மீண்டும் வடக்கு கிழக்கில் ஒரு மாற்றும் உருவாகும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. ஆனால் இன்று பல்வேறு திசைகளில் பயணிக்க தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக குறைந்த பட்சம் அந்த மக்களின் வாழ்விற்காகவவது ஒன்றுபடுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! 

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • மாயா
    மாயா

    யதார்தமான கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள் வாசுதேவன்.

    Reply
  • kitty
    kitty

    தலைவர் வருவார் என்றதில் உங்களுக்கென்ன சந்தேகம். அவர் வெளிவரும்போது தெரியும் போராட்டம் படுகுழிக்குள் போனதா இல்லை மகிந்தவின் தலை போகுதா என்று. வாசு பொறுத்திருங்கள் வாசு.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பளபளக்கும் புத்தம்புது ஆயுதம் வாங்கப்பட்டது புலம்பெயர் அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில் தான். இந்த புத்தம்புது ஆயுதம் பலி எடுத்தது முதல் தமிழரை தான் 1986. 80 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளியேறிய தமிழராலேயே ஈழத்து தமிழ்மக்கள் வஞ்சம் தீர்க்கப் பட்டனர் 2009 மேமாதம் வரை. ஒரு மதிப்புக்குரிய பதவியில் இருக்கும் போல்சத்தியாநாதனே அவர்கள் இப்ப தான் இலங்கை சென்ற போது உண்மையை அவிழ்துவிட்டார். நாமோ-துரை போன்ற கருத்தாளர்கள் வருடக்கணக்காக புலம்பெயர் தமிழராலேயே ஈழத்தமிழருக்கு அழிவு என்று கரடியாய் கத்துக் கொண்டிருக்கிறோம் இத்தளத்தில். இனியும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களை நம்பி பயன் இல்லை. இருப்பவர் அதே பாணியிலேயே சுடலைக்கு றூட் எடுத்து கொடுக்கிறார்கள். இங்கே எப்படி இந்த நஞ்சுக்குஞ்சுகள் வித்தியாசமான வெள்ளைகளோடு உறவை வைத்து வாழப் பழகிவிட்டார்களோ அதே போல ஈழத்தமிழரும் சுயஅரசிலிலும் சொந்தபொருளாதார பலத்திலும் நம்பிக்கை வைத்து ஐக்கியபட்ட இலங்கைக்குள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். மாற்றம் ஒன்றே எப்பவும் மாற்றமில்லாமல் இருப்பது என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டியது தான். இந்த நிலை மாறும்…..!.

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    கிற்றி கற்பனையில் வாழும் நீங்கள் என்றுமே கனவு கண்டபடி இருப்பதே நல்லது!

    Reply