பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

Kailasapathy_K_Profதேசம்நெற் இணையம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைப் பற்றி பல கட்டுரைகளை அண்மைக் காலமாக வெளியிடுகிறது. அக்கட்டுரைகளையும் அவற்றிற்கான பின்னூட்டங்களையும் படித்த பின்பு ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி எனது மனதில் தோன்றுவதை சொல்லியே ஆக வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக இதை எழுதுகிறேன். பெரும்பாலானவை எனது அனுபவங்களின் வெளிப்பாடே.

முதன் முதலாக அவரை நேரில் பார்த்தது அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக வந்திருந்த போது. அக்காலப் பகுதி அவர் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியிருந்த நேரம். அப்போதைய யாழ்ப்பாண மக்கள் பல்கலைக் கழக வளாகத்தையும் அதன் பிரதிநிதிகளையும் தமக்குப் பிடிக்காத அரசாங்கம் ஒன்றின் எச்சமாகப் பார்க்கும் (தமிழரசுக் கட்சியின்) மனநிலையில் தான் இருந்தனர். என்னிடமும் கைலாசபதி என்ற பெயர் அன்றைய தினத்தில் பெரிதான மதிப்புணர்வை ஏற்படுத்தியதாக நினைவில்லை. வாசலில் இருந்து விழா மண்டபத்திற்கு திருமதியுடனும் குழந்தைகளுடனும் வந்திருந்த அவரை எல்லா மாணவர்கள், ஆசிரியர்களுடனும் அழைத்துச் சென்றபோதுதான் அவரை மிக அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. சாதாரணமாக யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் காண முடியாத உயர்ந்த, கட்டுமஸ்தான, சிவந்த உருவம் இயல்பாகவே மதிப்பைப் பெறும் தன்மையைக் கொண்டிருந்தது. பெரிய மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனது மாணவ மனது உடனடியாக எண்னிக் கொண்டது.

விழாவில் அவர் நிகழ்த்திய உரை இன்று பெரிதாக நினைவில்லை. ஆனால் அந்த உரையில் அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் நினைவில் நிரந்தரமாக நிலை கொண்டுவிட்டன. ஒன்று அதே கல்லூரியின் பழைய மாணவர் அவர் என்பது. மற்றையதை அவருடைய வார்த்தைகளிலேயே சொல்கிறேன்:  “நான் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த போது எல்லோரும் பொருளியல் படிக்கவே விரும்பினார்கள். நான் தமிழ் படிக்க விரும்பினேன்.” ( கலைப்பீடத்திற்குச் சென்றால் பொருளியல் படிப்பது பெருமையான விஷயமாக இன்றும் தமிழ் மானவர்கள் நினைக்கிறார்கள்.)
இந்தக் கூற்றின் உட்பொருளையும் அத்தகைய ஒரு தீர்மானத்தை மேற்கொண்ட ஒரு இளம் மனதின் இயல்பையும் நான் அடிக்கடி சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அப்போது எனக்கு மோலியரின் வாழ்க்கை பற்றி எடுக்கப் பட்ட படமொன்றில் பார்த்த காட்சி நினைவுக்கு வரும். அக்காட்சி வெளிப்படுத்தும் மோலியரின் மனனிலையுடன் இந்த மனநிலை ஒத்துப் போவதாக நான் உணர்வதுண்டு. மோலியரின் தந்தை பெரும் பணக்காரர். குடும்ப கெளரவம்இ மற்றும் அதன் நலன்களைக் காப்பாற்றும் பொருட்டு இளம் மோலியரை சட்டம் படிக்குமாறு வற்புறுத்துகிறார் தந்தை. ஆனால் இளம் மோலியர் சொன்ன பதில் தந்தையை அதிர்ச்சியடைய வைக்கிறது:  “நான் நாடகம் எழுதப் போகிறேன்!” பிரெஞ்சு நாடகத்தின் தந்தையாக இன்று கொண்டாடப்படும் மோலியர் அன்று சட்டம் படிக்கப் போயிருந்தால்..?

யாழ்ப்பாண உயர் சைவ வேளாள, பணக்கார குடும்ப வாரிசான கைலாசபதி சட்டமோ அல்லது பொருளியளோ படிக்க ஏன் போகவில்லை? தமிழ் சமூகத்தின் மந்தைத் தனமான சிந்தனைப் போக்கிலிருந்து மாறுபட்டு நிற்கும் ஒரு மன நிலையை அவர் கொண்டிருந்தார் என்பதாலா அல்லது “தமிழ் என் உயிர்” என்று அரசியல் செய்யும் எண்ணத்தைக் கொண்டிருந்தாரா?
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக நுழைந்த போது மீண்டும் அவரை நேரில் காண்பதற்கும் அவரை மிக அருகில் இருந்து அவதானிப்பதற்குமான வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர் கலைப் பீடாதிபதியாகப் பதவியிறக்கப் பட்டிருந்தார், அப்போதும் அவருடைய சிந்தனை முறையின் தன்மை பற்றி என்னிடம் பல கேள்விகள் எழுந்தன. தானே முன்னின்று உருவாக்கிய பல்கலைக் கழகத்தினுள் தான் ஏற்கனவே வகித்த பதவியை விட குறைவான பதவியை வகிக்க எப்படி அவர் போன்ற ஒரு மனிதரால் முடிகிறது? தமது தகுதிக்கு மீறிய தலை வீக்கமும், தமது பதவிகள் தரும் மதிப்பு என்னும் மாயைக்குள்ளிருந்து மீள முடியாத மனநிலையும் கொண்ட மனிதர்களால் நிரம்பிய ஒரு சமூகத்தில் இவர் வித்தியாசமான சிந்தனையுடய ஒரு மனிதரா? ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒரு குறைவான பதவியை என்றாலும் ஏர்றுக் கொண்டு ஓடுவதுதான் தன்மானமிக்க செயல் என்று கருதுபவர்களிடையே இவர் சிந்திக்கத் தெரியாத மனிதரா? அல்லது தான் கொண்டிருந்த அறிவை தான் சார்ந்துள்ள சமூகத்தின் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது தனது கடமையெனக் கருதினாரா?

அவர் வெறும் கலைப் பீடாதிபதியாக இருந்த போதும் அவரது ஆளுமை வீச்சு பல்கலைக் கழகத்தைக் கடந்தும் எமது சமூகம் மற்றும் தேசத்தின் எல்லைகளைக் கடந்தும் பரந்திருந்ததை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. பதவியில் இல்லாவிட்டாலும் பல்கலைக் கழகத்தினுள் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்கினார். யாருடனும் வம்பளந்து கொண்டிருந்ததையோஇ வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்ததையோ நான் என்றும் கண்டது கிடையாது. உடலின் இயக்கத்திலும் பேச்சிலும் தன்னம்பிக்கையையும் தலைமை தாங்கிச் செல்லும் பண்புகளையும் எப்போதும் வெளிப்படுத்தும் தன்மை அவரிடமிருந்தது. ( அதே காலத்தில் பதவிகளை பற்றிப் பிடித்துக் கொண்டிருந்த பலர் உடலை அசைத்து நடப்பதற்கே மிகவும் சிரமப் பட்டனர். )

பீடாதிபதியாக இருந்த போதும் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை முக்கிய கடமையாகச் செய்தார். அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் அவரிடம் பாடம் கேட்பதை பெரிய விஷயமாகக் கருதினார்கள். (அவருடைய காலப் பகுதியில் பல்கலைக் கழகத்தில் பயின்றதை நானும் பெரிய விஷயமாகவே உணர்கிறேன்.) அவர் பணியாற்றிய காரணத்தினாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் பெயர் பெற்றது என்றால் அது மிகையில்லை. அந்தப் பெருமையை வேறு எந்த துணை வேந்தராலோ அல்லது பேராசிரியராலோ யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியதாலேயே அவர்கள் பெயர் பெற்றனர். பீடாதிபதியாக பதவி வகித்த போதிலும் பல்கலைக் கழகத்த்கின் பெயரை நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவராக அவர் இருந்தார்.

நான் அகதியாக தமிழ் நாட்டுக்கு சென்ற பின்பு மதுரையில் நடந்த ம்ர்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பந்தலில் ஒரு பார்வையாளனாக அமர்ந்திருந்தேன்.. தற்செயலாக என்னருகில் அமர்ந்திருந்த கல்லூரி மானவர்களுடன் உரையாடியபோது அவர்கள் ஒரு நபரைப் பற்றிப் பெரிதும் விதந்து பேசினார்கள்.. அந்த நபர் கைலாசபதி. தமிழ் கல்வியும் ஒரு பல்கலைக் கழகப் பதவியும் ஒருவருக்கு இத்தகைய மதிப்பைப் பெற்றுத்தர முடியுமா? அப்படியானால் இத்தகைய புகழைப் பெறுவதற்கு இந்த மனிதரிடம் இருந்த ஆளுமைகள் என்ன?

லண்டன் வந்த பின்பு ஒரு நூல் நிலையத்தில் அறிமுகமான தமிழ் அன்பர் ஒருவருடன் உரையாடியபோது அவர் தான் இலங்கையில் வகித்த பதவிகளைச் சொல்லிக் கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர் மிகப் பெருமைப் பட்டுச் சொன்ன விஷயம்: “நான் கைலாசபதிக்கு சிறு வயதில் தமிழ் படிப்பித்தேன்”. இத்தனைக்கும் அந்த அன்பர் ஒரு தமிழாசிரியர் அல்ல. தனது வீட்டுக்கு அருகில் குடியிருந்த கைலாசபதி தன்னைக் கண்டவுடன் தமிழ் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவார் என்று சொன்னார். அந்த அன்பர் சொன்ன சொன்ன இன்னொரு விஷயம் முக்கியமானது. கைலாசபதி அகர முதலை முதன் முதலாக அறியத் தொடங்கியபோது அவருக்கு வயது ஏழு. அப்போது கைலாசபதி வீட்டில் ஆங்கிலம் பேசுபவராக இருந்தார்.

கைலாசபதி எழுதிய நூல்கலைப் படிக்காதவர்கள் கூட அவர் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைப் படித்திருப்பார்களேயானால், ஒரு சாதாரண வாசகனைக் கூட அறிவார்ந்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்லும் லாவகத்தை தனது எழுத்து திறமையால் அவர் கையாண்டார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து விட்ட எனது நண்பர் ஒருவர் அண்மையில் என்னிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். மூன்று நாடகங்கள் என்ற நூலுக்கு கைலாசபதி எழுதிய முன்னுரையை எங்காவது பெற்றுத் தர முடியுமா என்று. நான் அதனை யாழ்ப்பாண பல்கலைக் கழக நூலகருக்கு அனுப்பினேன். நூலகர் உடனடியாக கைலாசபதி எழுதிய முன்னுரையை அனுப்பிய போது அதனைப் படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. பத்திரிகை வாசகனுக்குரிய எளிய முறையில் எவ்வாறு மிக ஆழம் நிறைந்த கருத்துக்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு அந்த முன்னுரை சிறந்த உதாரணம்.

அவர் தினகரன் ஆசிரியராக இருந்த போது அவர் ஆற்றிய தமிழ் பணியைப் பற்றி  இன்னொரு நீண்ட கட்டுரையை எழுதலாம்.. தமிழ் நாட்டு இலக்கியமே எமது இலக்கியம் என இலங்கைத் தமிழ் சமூகம் மயங்கிக் கிடந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்தைப் பிரசுரித்து ஈழத்து இலக்கியம் வளர அவர் அயராது உழைத்தார். ( இன்றும் கூட ரமணி சந்திரனைப் படிப்பதில் நமக்குள்ள ஆர்வம் தமரைச்செல்வியைப் படிப்பதில் இல்லை) எமது மக்களின் வாழ்க்கையும் இலக்கியமாக முடியும் என்பதற்கு வழிசமைத்துக் கொடுத்தவர் கைலாசபதி.

அவர் பயின்ற கல்வியோ அவர் வகித்த பதவிகளோ அவரது இயல்புகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சாதாரண நிலையில் இருந்தவர்களுடனும் நட்பு பாராட்டினார். நாடி வந்தவர்களுக்கு தம்மால் இயன்ற உதவியைச் செய்ய கைலாஸ் எப்போதும் தயங்கியதில்லை என நீர்வை பொன்னையன் தெரிவித்ததாக ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். தமிழை நேசித்த அனைவருடனும் கைலாசபதி நட்புணர்வு பாராட்டியதாக எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தீராநதியில் எழுதிய கட்டுரையொன்றில் தெரிவித்திருந்தார். இதைப் படித்துப் பாருங்கள் என பல எழுத்தாளர்களின் புத்தகங்களை தன்னிடம் தந்து அவர்களை கைலாஸ் தனக்கு அறிமுகம் செய்து வைத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் திடீரெனெ மறைந்த போதும் நான் பல்கலைக் கழக மாணவனாக இருந்தேன். அவருடைய மறைவு பல்கலைக் கழகத்தினுள் பெரும் வெற்றிடத்தை தோர்றுவித்ததை மாணவராகிய எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்ற எண்ணம் இயல்பாய் எமக்குள்ளே தோன்றத் தொடங்கியது.

ஆழம் கொண்ட அறிவார்ந்த விவாதங்கள் அற்றுப் போய், மதகுகளில் அமர்ந்து நுனிப்புல் மேய்ந்த நிலையில் விவாதம் செய்வதே கருத்துப் பரிமாற்றம் என ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு சமூகத்தில் அவருடைய இடம் என்றும் நிரப்ப முடியாத ஒன்று. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

Show More
Leave a Reply to Varatharajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • indiani
    indiani

    /பீடாதிபதியாக இருந்த அவர் பணியாற்றிய காரணத்தினாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் பெயர் பெற்றது என்றால் அது மிகையில்லை. அந்தப் பெருமையை வேறு எந்த துணை வேந்தராலோ அல்லது பேராசிரியராலோ யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியதாலேயே அவர்கள் பெயர் பெற்றனர். பீடாதிபதியாக பதவி வகித்த போதிலும் பல்கலைக் கழகத்த்கின் பெயரை நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவராக அவர் இருந்தார்// கரவைஜெயம்

    நன்றி தங்கள் கட்டுரைக்கு தகுந்த நேரத்தில் வெளியிட்டுள்ளமைக்கு – பேராசியர் கைலாசபதி போன்றவர்கள் பலர் சமூகத்தில் இன்று தேவைப்படுகின்றது.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    இன்னொன்றையும் தவற விட்டுவிட்டீர்கள்:

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்களாக திறமை வாய்ந்த அறிஞர்களையெல்லாம் நியமனம் செய்தவர் கைலாசபதி. நித்தியானந்தன், மற்றும் ஏ.ஜே. கனகரத்தினா போன்றவர்களையெல்லாம் பல்கலைக் கழக சூழலுக்குள் வரவழைத்து தமிழ் மாணவர்களின் அறிவு பன்முகத்தன்மை கொண்டதாக உருவாவதில் அவர் அக்கறை காட்டினார்..

    சிறு விஷயத்தைச் செய்தாலும் பத்திரிகைகளில் போட்டோவுடன் தம்பட்டம் அடிக்கும் சமூகத்தில் அவருடைய சேவைகள் வெளித்தெரியாமல் போனது வியப்பில்லை..பேராசிரியர் கூல் அவர்களும் துணைவேந்தராக நியமிக்கப் பட்டால் கைலாசபதியைப் போன்று பல்கலைக் கழகத்தை மீண்டும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்..

    Reply
  • Varatharajan
    Varatharajan

    சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களை இலங்கை வாசகர்களுக்குக் காட்டியபணி- ஊடகத்துறையில்-கைலாஸ் அவர்கள் செய்த முக்கிய பணி எனலாம்.

    கரவை ஜெயம் நல்லதோரனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார். இப்படியான அனுபவக் கட்டுரைகளை தேசம் வெளியிடவேண்டும். அது அரசியலாக இருக்கலாம் கலை இலக்கியமாக இருக்கலாம். நன்றி.

    Reply
  • நந்தா
    நந்தா

    கடைசியில் சிரித்திரன் சிவஞானசுந்தரம் “புலி” ஆகிய கதை தெரியவில்லைப் போலிருக்கிறது.

    Reply