ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லை முகவரகமும் வெளிநாட்டு மாணவர்களும் : நிஸ்தார் மொகமட்

UKBAமாணவர் என்ற போர்வையில் இங்கிலாந்துக்குள் நுழைபவர்களின் தொகை வருடாவருடம் கூடிச் செல்வதுடன் 2004ம் ஆண்டில் அது என்றும் இல்லாதவாறு 186,000 என்ற எண்ணை எட்டியது. இதில் படிப்பபை வெற்றிகரமாக முடித்தோர், முடியாமல் பாதியில் முறித்தோர் எல்லாரையும் சேர்த்து பார்த்தல் அவர்களில் 1/5 பங்கினரே தம் நாட்டுக்கு திரும்பி போகிறார்களாம். மற்றவர் கதி என்ன? குடிவரவுத் திணைக்களத்தைப் பொறுத்தவரை இவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி விட்டனர். ஆனால் திரும்பவில்லை, இங்கேயே உள்ளார்கள், அதுவும் தலைமறைவாக (Underground) என்பது குடிவரவு திணைக்களத்துக்கு எதிரான மற்றோர்களின் அறிக்கை. அப்படிப்பட்டவர்கள் துணிச்சலாக underground (சுரங்கப்பாதை)யிலும் வெளிப்படையாக வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை இரகசியம். இதில் பலர் குடிவரவு சட்டத்தின் ஓட்டையை பாவித்தும், இங்கிலாந்து அரசாங்கம் வேண்டுமென்றே சட்டத்தை ஓட்டையாக்கி வைத்து அதனுள் புகுந்து விளையாடுங்கள் என்று அனுமதித்துள்ளதாலும் அதைபாவித்து தம்மை இங்கேயே நிரந்தர வதிவிடக்காரர்களாக்கி விடுகின்றனர் (indefinite leave to remain holders). ஆனால் எல்லாருக்கும் இந்த விளையாட்டில் நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்ய விரும்பமில்லை.

இப்படி மாணவர்கள் வருவதும், போவதுமாய் இருந்தாலும் இங்கிலாந்து அரசாங்கம் இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக அவுஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்படும் புள்ளிகள் அடிப்படையிலான (Points Based System) குடிவரவு முறையொன்றை 2008ல் அறிமுகப்படுத்தி, அதை 1, 2, 3, 4, 5 என்று தட்டுகளாக(Tier) பிரித்து பொதுவாக இங்கிலாந்துக்குள் உள் நுழைவோரை கட்டுப்படுத்த முயற்சித்தது.

இந்த அடிப்படையில் இந்த மாணவர்களை கட்டுப்படுத்தும் முகமாக PBSசின் தட்டு 4 (Tier 4) என்ற புள்ளிகள் அடிப்படையிலான முறையை 31.03.2009ல் அரசாங்கம் அமுல்படுத்தியது. இந்த தட்டு 4 தொடர்பாக, இது திறமைமிக்க மாணவரை மாத்திரம் உள்வாங்கும் முறை, சரியான வடிகட்டல் முறை, நீதியான கட்டுப்படுத்தல் முறை, புதிய அறிமுகம் என்ற முன்னுரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மாணவர் தொகை சத்தம் சந்தடி இன்றி கூடிச் சென்று விட்டதாம். 2010 ஜுன்னுக்கு முன்னான 12 மாத காலத்தில் மாத்திரம் இந்த மாணவர் தொகை 288,000தை எட்டியதாம். கற்பதில் என்னே ஆர்வம், புல்லரிக்கிறது. இந்த மாணவருடன் கூடவே வந்து தொல்லை கொடுப்போராக ஐக்கிய இராச்சிய எல்லை முகவர் நிலைய (United Kingdom Border Agency)த்தால் கருதப்படும் அவர்களில் தங்கி இருப்போரையும் சேர்த்தால் அதே காலப்பகுதியில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 320,000.

அட 60மில்லியன் மக்கள் உள்ள நாட்டில் இந்த மூன்று இலட்சத்தி இருபதினாயிரம் என்பது ஒரு சிறு தொகைதானே என்றால், அது சரி இதில் இரண்டு மடங்கு என்றாலும் எமக்கு பரவாயில்லை, ஆனால் இங்கு வந்தால் படித்தோமா, இல்லை படித்து கிழித்தோமா அலுவல் முடிய நடையை கட்டிவிட வேண்டும், அதுதான் எமது எதிர்பார்ப்பு என்று ஆளும் அரசாங்கம் முதல், சாதாரண பிரசைவரை எல்லாரும் ஒருமித்து குரல் எழுப்புகிறார்கள். அவுஸ்திரேலிய PSB முறையை கடைபிடிக்கும் இங்கிலாந்து அங்கு நடந்த வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்திய மாணவரை தீயிட்டும், வெட்டியும், அடித்தும் கொன்ற சம்பவங்களை முன்னுதாரணமாக கொள்ளாதவரை சந்தோசம்.

ஒப்பிட்டு ரீதியில் இங்கிலாந்தில் மேற்படிப்பை வழங்கும் நிறுவனங்கள், அதாவது வெளிநாட்டாரின், அதிலும் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கரின் நிறுவாகங்களில் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்கள் சிறந்த(?) கல்வி வழங்களை விட ஒரு வகையில் குடிவரவை ஊக்குவிக்கும் நிறுவனங்களாகவே செயற்படுகின்றன. இந்த நாட்டில் கல்விசேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களை சிந்தனை/கண்டுபிடிப்புக்கள், பல்கலைக் கழகங்கள், திறமைகளுக்கான திணைக்கள (Department for Innovation, Universities and Skils) சுருக்கமாக DIUS, த்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த திணைக்களம் இந்த நிறுவனங்களை A,B என்ற தரவரிசைபடுத்தி, காலத்துக்கு காலம் அவர்களின் தரத்தையும், நற் போக்குகளையும் கணக்கிட்டு(Appraisal) ஒரு கல்வி நிறுவனம் தொடந்தும் இந்த DIUS சின் பதிவில் இருப்பது நிச்சயிக்கப்படும். இப்படி இதில் இருந்து நீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தெரியாமல் காசை கட்டி, விஸாவும் இல்லாமல், கட்டிய காசும் இல்லாமல் அல்லலுறும் மாணவர் ஆயிரமாயிரம். இப்படிபட்டோரில் கோயில்களின் அன்னதானம் விடயம் அறிந்தவர்கள் ஒரு நேரபசியை போக்கிக் கொள்வதற்கு அங்கே தஞ்சமடைவதையும் அனேகர் கண்டிருப்பீர்கள்.

சில வேளைகளில் சரியான கல்வி நிறுவனத்தில்தான் சேர்ந்துள்ளோம் எமக்கு பயமில்லை என்றிருக்கும் மாணவர்களும் வேறுவிதமாக மாட்டிக்கொள்வதும் கண்கூடு. இந்த தட்டு 4 முறையின் கீழ், மேலதிக வதிவிட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் மீதமாக இருக்கும் கற்கைநெறி பணம் (Course fee), மற்றும் தங்களை பராமரித்துக் கொள்வதற்கான பணமாக லண்டனும், லண்டனை சூழவுள்ள பகுதிகளில் கற்போராயின் மாதமொன்றுக்கு 800 பவுண்டுகளும், லண்டனுக்கு வெளியேயாயின் 600 பவுண்டுகளுமாக ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கான பணம் தொடர்சியாக UK வங்கிக் கணக்கில் வைப்பில் இருக்க வேண்டும் என இந்த விடயத்தை கையாளும் உள்நாட்டு விவகார அமைச்சின் (Department for Home Affairs) குடிவரவு விதிகள் (Immigration Rules) கூறுகிறது. இந்த இடத்தில்தான் பங்கீனாவின் பார்வை உள்நாட்டு திணைக்களத்தின் மேல் மெல்ல படத்தொடங்கியது.

UK யின் குடிவரவு விவகாரமானது எப்போதுமே ஒரு சூடான பேசு பொருளா(hot topic)கவே காணப்படுகின்றது. உதாரணமாக, UK வெளிநாட்டவரால் நிறைந்து விட்டது, இனி வழிவதுதான் தாமதம் அதற்கு முன்னால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும், இந்த வெளிநாட்டார் உள்நாட்டாரின் தொழில் வாய்ப்புகளையெல்லாம் அபகரித்து விடுகின்றனர் எனவே மக்கள் வெகுண்டெழுந்து எசக்கு பிசகாக ஏதாவது நடந்தேற முன் அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கடும் போக்காளர் கூக்குரலிடுகின்றனர். இல்லை வெளி நாட்டாரின், குறிப்பாக வெளிநாட்டு மாணவரின் வருகை குறைந்தால் உயர்கல்வி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரும் என்று கல்வி(விற்பனை) நிலையங்கள் எச்சரிக்கின்றன. வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் இங்கிலாந்து வருடமொன்றுக்கு சுமார் 3.5 முதல் 8 பில்லியன் பவுண்ட்ஸ் வரை சம்பாதிக்கிறது எனவே அவர்களின் வருகையை கவனமாக கையாள வேண்டும் என்ற பொருளாதர ரீதியிலான நியாயங்கள் வேறு. இப்படி மாணவர்களுக்கு எதிராகவும் சார்பாகவும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க சத்தம் சந்தடி இல்லாமல் 2007ம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம்(Labour government) சட்டவிரோதமாக இங்கு இருப்போரில் சுமார் 500,000 பேருக்கு நிரந்தர வதிவிட அனுமதி (Indefinite leave to remain)கொடுத்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான(?) முற்பட்டது. இந்த முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டாலும், கடந்த பொது தேர்தலின்போது இது தொடர்பாக, முன்னை நாள் பிரதமர் Gordon Brown னும், இன்றைய பிரதமர் David Cameron னும், இன்றைய உதவி பிரதமர் Nick Clegg கும் வெளிப்படையாக ஆடிய நாடகத்தை நீங்கள் மறந்திருக்க நியாயமில்லை.

இன்றைய உதவி பிரதமர் UKயில் சட்டவிரோதமாக அதிககாலம் இருப்போருக்கு அனுமதி வழங்கி அவர்களை சட்டரீதியானவர்களாகுவதன் மூலம் அவர்களை இன் நாட்டின் பொருளாதரத்துக்கு தோள் கொடுக்க செய்யலாம் ஆகவே அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து (public amnesty) வெளியே கொண்டு வாருங்கள் என கடந்த பொது தேர்தலின் கட்சி தலைவர்களுக்கான மூன்று கட்ட விவாதத்திலும் தம் Liberal Democratic கட்சி சார்பாக அதை மீண்டும் மீண்டும் வழியுறுத்தினார். அதேநேரம் எமது முன்னை நாள் பிரதமர் அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், உமது பிந்திய ஞானம் எமக்கு தேவையில்லை என்று சொல்லாமல் அந்த கதையை மழுப்பிக் கொண்டே சென்றார். ஆனால் இன்றைய பிரதமர் அப்படி அனுமதிப்பது கூடாது. அது மற்றோருக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும், எனவே உள்வந்தவர் வெளியேறவே மாட்டார்கள். ஆகவே இவர்களை கட்டுப்படுத்த ஒரு கடினமான முறை தேவை என்றார். இப்படி தேர்தல் விவாதம் நடக்கும்போதே 250,000 வதிவிட அனுமதி வழங்கப்பட்டது (அதில் பலன்பெற்ற நம்ம ஆட்கள் நாடு சென்று, விடுமுறையையும் கழித்து, பலதும் பத்தும் அறிந்து, வெள்ளை வேனின் கண்பட்டாமல் வெற்றிகரமாக நாடு(UK) திரும்பியுள்ள விவகாரம் வேறு) மிகுதி 250,000 பேருக்கான வதிவிட அனுமதி கொடுபட்டுக் கொண்டிருக்கிறது. 2011 ஜூலையுடன் இதன் காலஎல்லை முற்றுப் பெறுகிறது.

இப்படி இந்த குடிவரவு விவகாரம் பிரச்சினைக்குறிய விடயம் என்பதாலும், இதற்கெதிரான கடும்போக்கை எடுக்காவிட்டால் BNP(British National Party), EDF( English Defence Front) போன்ற இனவாத கட்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், அதே நேரம் வெளிநாட்டு மாணவர்களுக்கான எதிர்பை வெளிப்படையாக காட்டினால், வெளிநாட்டாரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதாலும், இங்கிலாந்தின் பெயர் சர்வதேச ரீதியில் கெட்டுப் போகும் என்பதாலும் செய்வதறியாது தவிக்கும் இன்றைய Con-Dem கூட்டு அரசாங்கம் மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மேலதிக வதிவிட அனுமதி கோரும் மாணவர்களுகான குடிவரவு விதிகளுடன் சேர்ந்து UKBAயின் குடிவரவு கொள்கை(Immigration policy) காலத்துக்கு காலம் மாற்றம் பெறுகிறது. இந்த அடிப்படையில் மாணவர் ஒருவர் தமது விண்ணப்பத்துடன் கற்கை நெறிக்கான அனுமதி உறுதிபத்திரம்(Confirmation of Acceptance of Study), சுருக்கமாக CAS உடன், (இது குறிப்பிட்ட மாணவருக்கு அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும்) இரண்டு மாதங்களுக்கான பராபரிப்பு பணம் வைப்பில் உள்ளது என்பதற்கான வங்கி கணக்கு அறிக்கையும்(bank statement) அனுப்ப வேண்டும். CAS க்கு 30 புள்ளிகளும், வங்கி அறிக்கைக்கு 10 புள்ளிகளுமாக ஒரு மாணவர் 40 மொத்த புள்ளிகள் UKBA மூலம் பெற வேண்டும். இது கிடைத்தால் மேலதிக அனுமதி கிடைக்கும், இல்லாவிட்டால், UKBA கழுத்தை பிடித்து தள்ள முன் குறிபிட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அல்லது, … அது அந்த சம்பந்தப்பட்டவர் விருப்பம். நாம் புத்தி சொல்ல முடியாது. அது எமது தலைக்கு ஆபத்தாக முடியும்.

இப்படி இந்த பராமரிப்பு பணம் தொடர்பான இறுக்கமான கட்டுப்பாட்டால் ஆயிரக் கணக்கான மாணவர் பாதிக்கபட, யார் செய்த புண்ணியமோ, இந்த பராமரிப்பு பணம் இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்ட அதேநேரம் அந்த பணம் விண்ணப்ப நாளுக்கு 28 நாட்களுக்கு முன்பிருந்து வங்கிக் கணக்கில் இருந்து வருகிறது என்று ஆதாரத்துடன் காட்டினால் போதும் என்று சென்று கொள்கை சற்று தளர்த்தப்பட்டது. அப்பாடா இந்த இரண்டு மாத தொல்லை தொலைந்தது என்று மாணவர் பலர் சந்தோசப்பட்டனர். பல மாணவர்களும் தெய்வம் நின்று கொள்ளும் என்று சும்மாவா சொன்னார்கள் என்ற திருப்தியில் தமது வதிவிட அனுமதிகளை பெற்றுக் கொண்டனர்.

அட சரி 28 நாட்களுக்கு பணம் வைப்பில் உள்ள மாணவர் தப்பிக் கொள்வர். அப்படி இல்லாத மாணவர் என்ன செய்வர்? ஒருவன் விரும்பிய இடத்தில் படிக்க வேண்டுமென்பது அவனது அடிப்படை உரிமையல்லவா? படிப்பை தொடர பணம் இருந்தால் சரிதானே அதற்கென்ன 28, 82 நாள் என்ற கணக்கு. நாங்கள் வெளி நாட்டார் எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு, ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகி காரியத்தில் இறங்கும் பழக்கமெல்லாம் எம்மிடமில்லை. படிக்க பணம் கட்டினால் சரிதானே, மற்றும்படி நான் சாப்பிட்டல் என்ன, சாப்பிடாவிட்டால் உனக்கென்ன? எனக்கு அனுமதியை தா என்பது மாணவரின் கோசம்.

இந்த நேரத்தில்தான் எல்லா மாணவர்களுடனும் சேர்ந்து ஒரு பிரேசில் நாட்டு மாணவியும் தனது மேலதிக வதிவிட அனுமதிக்கு விண்ணப்பம் செய்தாள். வழமை போலவே தொடர்சியாக 28 நாட்களுக்கு பணவைப்பை உறுதிபடுத்தாத மாணவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நாட்டு சட்டத்தின்படி அரச நிறுவனங்கள் ஏதாவது விண்ணப்பமொன்றை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் சொல்ல வேண்டுமென்பது சட்டம். அப்படியே உள்நாட்டு அமைச்சு சார்பாக இந்த UKBA தமது நிராகரிப்பு காரணமாக “மாணவர்களே நீங்கள் குடிவரவு விதிகளுக்கமைய பராமரிப்பு தொகையொன்றை குறிப்பிட்ட கால அளவுக்கு வைப்பில் வைத்திருப்பதற்கான ஆதாரங்களை காட்டவிலை, ஆகவே நீங்கள் பொது நிதியத்தின் உதவியின்றி (recourse to public funds) உங்களால் உங்களை பராமரிக்க முடியாது. எனவே நீங்கள் என்மை உங்கள் பணம் சம்பந்தமாக விடயத்தில் திருப்திபடுத்தவில்லை. எனவே உங்கள் விண்ணப்பம் பிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எமது முடிவை மேன்முறையீடு செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு என்று அறிவித்துவிட்டார்கள்.

என்ன ஆட்கள் அப்பா இந்த UKBA உத்தியோகத்தர்கள். இந்த நாட்டில் நிரந்தர வதிவிட உரிமை இல்லாதவர் எப்படி பொது நிதியத்தின் உதவி பெறமுடியும்? அரசாங்க உதவி பெற முதல் தகைமை நிரந்தர வதிவிட உரிமை அல்லவா? இந்த அடிப்படை விடயம் தெரியாமல் ஏன் அங்கு வேலை செய்கிறிர்கள் என்று கேட்டால் பதிலா தரப்போகிறார்கள்? தொடர்ந்தும் தங்கள் பழைய புராணத்தையே பாடுவார்கள், அதாவது இது நேர்மையான ஒரு முறை, அது, இதுவென்று கூக்குரல் செய்வர். எனவே இந்த பாதிக்கபட்ட மாணவர்களில் ஒருவர் தமது மேல் முறை ஈட்டு உரிமையை சரியாக பாவித்து முதல்நிலை குடிவரவு நீதி மன்றில் (First-tier Tribunal) மேன் முறை ஈடு செய்து வெற்றி கிட்டியது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தோல்வியை தழுவிக் கொண்டது. பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதை நம் எல்லாருக்கும் பழக்கப்பட்டதுதானே, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த தீர்ப்புக்கெதிராக இரண்டாம் நிலை குடிவரவு நீதிமன்றில் (Upper Tribunal) மேன் முறை ஈடு செய்ய அனுமதி கோரி அந்த அனுமதி வழங்கப்பட்டு இறுதியில் வெற்றியும் கண்டனர். மாணவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்ட்டது.

தோல்வியடைந்த மாணவி இந்த தீர்ப்பினால் சளைத்து விடவில்லை. அவர் எல்லா வழக்குகளுக்குமான மேல் நீதிமன்றில் (Court of Appeal) மேன் முறைஈடு செய்தார். இந்த மேன் முறைஈட்டு காரணங்களோடு சம்பந்தப்ப்ட்ட (Like cases) மேலும் 5 வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க மேன் முறைஈட்டு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு தமக்கு பாதகமாக அமையும் என்றாலும், அரசாங்கம், அதன் நிறுவனங்கள் சார்பாக வழக்காடும் திறைசோரி வக்கீல்கள்(Treasury solicitors) சும்மா இருப்பார்களா? அரசாங்க பணம் தானே கொஞ்சம் கை, கால் நீட்டி உழைத்தால் என்ன என்ற “உழைப்பு கோட்பாடு”க் கேற்ப சமாதானதுக் கொல்லாம் தயாரில்லை, நீதிமன்றம் வாருங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள். இதில் என்ன பரிதாபம் என்றால் ஒரு மாதகாலத்துக்கு மாணவர் ஒருவரின் பராமரிப்புக்கு போதுமானதாக கருதப்படும் 800 பவுண்ட்ஸ் இந்த திறைசோரி வழக்கறிஞரின் சுமார் ஒரு மணி நேரத்துக்கான சம்பளம். என்ன விதமான சுரண்டல். இது மூளையால் செய்யும் வேலை, மூளையின் களைப்படையும் தன்மைக் கேற்ப கூலி அமையவேண்டும் ஆகவே இது சரி என்று வாதாடுவோரும் நம்மில் இருக்கத்தான் செய்வர். என்ன செய்ய நாம் மாடாய் உழைத்து கட்டிய வரிப்பணம் தேவையில்லாத வழக்கிற்காக தேவையில்லாதவன் கையில் போய் கிடைக்கிறது. இந்த கூத்துகளுக்கு மத்தியில் வழக்கின் முடிவு வெளியாகிவிட்டது.

மேலுள்ளது Pankina v. Secretary of State for Home Department என்ற Court of Appeal வழக்கு. இதை விசாரித்த நீதிபதி பிரபு செட்லீ (Lord Justice Sedley), நீதிபதி பிரபு ரிமெர்(Lord Justice Rimer), நீதிபதி பிரபு சலிவன் (Lord Justice Sullivan) கீழ்வரும் தீர்ப்பை வழங்கினர், ” குடிவரவு கொள்கை (policy) என்பது, நிச்சயமாக குடிவரவு விதி(Rules)யாகாது. கொள்கை என்பது சட்டங்கள் அல்லது சட்டங்களின் பகுதியான விதிகளின் கடும்போக்கை கொண்டிருக்க முடியாது. கொள்கைகள் சட்ட அந்தஸ்து பெற வேண்டின் அது பாராளுமன்றத்தின் முன் சமர்பித்து அது ஒன்றில் சட்டமொன்றின் விதியாக அல்லது முழு சடமாக வந்த பின்பே அதை நடைமுறைபடுத்த வேண்டியது அரச நிறுவனங்களின் கடமை. அதை நிலை நிறுத்துவது நீதிமன்றங்களின் கடமை. தேவையான அளவு பணம் வைப்பில் இருக்க வேண்டும் என்பது விதியின் பால்பட்டது. அது இரண்டு மாதம் என்பது கொள்கையாக பின்னால் புகுத்தப்பட்டது. எனவே இந்த கொள்கை விதியின், அல்லது சட்டத்தின் உறுதி தன்மையில் இருந்து பிரித்து பார்க்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையில் ஒருவரை பராமரிக்க தேவையான இரண்டு மாதப் பணம் 28 நாட்களுக்கு வைப்பில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அந்தளவு பணம் 28 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் இருந்தால் போதுமானது. குறிப்பாக விண்ணப்பிக்கும் அந்த நாளில் இருந்ததற்கான அத்தாட்சி காட்டினாலே போதும்.” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களே உடனடியாக காரியத்தில் இறங்குங்கள். ஏனெனில் இந்த கொள்கையை பாராளுமன்றில் சமர்பித்து இதற்கு விதி(Rule)வடிவம் கொடுத்தால் எல்லாரும் மீண்டும் மாட்டிக் கொள்வீர்கள். எனவே குடிவரவு முறையில் புதிய விதிகள் புகுத்தப்படமுன் அல்லது புதிய சட்டங்கள் மீண்டும் கடினமாக வரமுன் உங்கள் சட்டத்தரணிகளை பாருங்கள். மேலே சொன்னவை ஒரு சுருக்கமே, இதில் இன்னும் சட்டசிக்கல்கள் வர நிறையவே வாய்ப்புகள் இருப்பதால் DIY( do it yourself) முறையை கைவிட்டு விட்டு துறைசார்ந்தோரை நாடுங்கள். என்ன இருந்தலும் படிக்க வேண்டும் அதிலும் London னில் படித்து, பட்டம் பெற வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள் ஒரு சின்ன யோசனை சொன்னேன் அவ்வளவுதான். இலங்கை படிப்பு UK படிப்புக்கு குறைந்தல்ல என்பதையும், அனேகமாக எல்லா ஐரோப்பிய நாட்டின் படிப்புகளும் UK படிப்பைவிட மிக சிறந்தது என்பதையும் எனது தனிப்பட்ட அனுபவத்தின் முலம் உறுதி கூறலாம் அதையும் சற்று கவனத்தில் கொள்ளுதல் நலம்.

Related News & Articles:

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக் கூறி யாழில் மோசடி!

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • மாயா
    மாயா

    மிக பயனுள்ள ஒரு கட்டுரை. இங்கிலாந்தில் உள்ள மாணவர்களுக்கு அல்லது இங்கிலாந்து கல்விக்காக வரும் மாணவர்களுக்கு ஒரு விளக்கத்தை கொடுக்கலாம். இது போன்ற கட்டுரைகள் தொடரட்டும்…..

    Reply