கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் முஸ்லிம்கள் சாட்சியம்.

கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நேற்று மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வின் போது சாட்சியமளிக்க முன்வந்த முஸ்லிம்கள் தமிழ், முஸ்லிம் மக்களிடையே கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் குறித்தே அதிகம் சாட்சியமளித்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் கணிசமான முஸ்லிம்கள் சாட்சிமளித்தனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர் ஆனால், அவர்கள் 22சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள்தான் முடங்கிக் கிடக்கின்றனர் எனவும், இம்மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகள் குறித்து விரைவாக தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பாரிய இன வன்முறைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் ஓட்டமாவடி ரகுமத் பள்ளிவாசல் நிர்வாகசபை செயலாளர் ஐ.எல்.டி.சாகிபு சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

 வாகரைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் 1985, 1990 ஆண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்ட இன வன்முறைகளின் போது வெளியேறியதையடுத்து அவர்களுக்கு சொந்தமான காணிகளில் தமிழர்கள் குடியிருப்புக்களை அமைத்து வசித்து வருகின்றனர் எனவும், தமிழர்கள் அக்காணிகளை அபகரித்துள்ளனர் எனவும், இப்பகுதி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மிக அவசியமானது என்றும் விவசாயியான எம்.பி. முஸ்தபா என்பவர் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த அமர்வில் சாட்சியமளித்த தமிழர்கள் பலர் காணாமல் போன தமது உறவினர்கள் குறித்தே சாட்சியமளித்தனர். மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள். சிரேஸ்ட புலி உறுப்பினர்களின் மனைவிமார் உட்பட பலர் சாட்சியமளித்தனர்.

காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழர்கள் எவரும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இதே வேளை, காணாமல் போனவர்கள் தொடர்பாக நான்கு பேர் இரகசிய சாட்சியங்களை ஆணைக்குழுவின் முன் அளித்தனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *