போர் முடிவுற்றாலும் மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. தற்போதைய நிலை தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என நேற்று புதன் கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய பிரதிநிதிகள் தெரிவித்தள்ளனர். இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனம், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று புதன் கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்து, யாழ். அரசாங்க அதிபர் மற்றும் சிவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை யாழ். அரச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
தாம் நேரடியாக அவதானித்த வகையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியதாகவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் குறித்து தமக்கு திருப்தி இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
போர் முடிவடைந்தமை மகிழ்ச்சியானதுதான் ஆனால், போர் முடிவுற்ற போதும் மக்களால் சுதந்திரமாக நடமாடவோ, பேசவோ முடியாத நிலை உள்ளது எனவும், பயங்கவரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் எனபன தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமையே இத்றகுக் காரணம் எனவும், இந்நிலை நீடிக்குமானால் திட்டமிட்ட- கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் தோன்றா விட்டாலும் சிறியளவிலான வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஐரோப்பிய பிரதிநிகளிடம் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினர்.