முகாம்களிலும் சிறுவர் இல்லங்களிலும் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.. மதபோதகர் தலைமறைவு!

மன்னார் சிறுவர் இல்லமொன்றில் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சிறுவர் இல்லம் நேற்று புதன் கிழமை மூடப்பட்டது.

இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது: மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள ‘என் இரட்சகர்’ என்ற சிறுவர் இல்லத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலர் பராமரிக்கப்பட்டு வந்தனர். மதபோதகரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அ.அமிர்தலிங்கம் (வயது 45) என்பவர் இதனை நடத்தி வந்தார்.  பாடசாலை விடுமுறை நாட்களில் சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு வீட்டு வேலைகளுக்காக மதபோதகர் அழைத்துச் செல்வதுண்டாம்.  இந்நிலையிலேயே சிறுமிகள் மீதான துஸ்பிரயோகம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி குறித்த இரு சிறுமிகளையும் வைத்தியப் பரிசோதனைகளுக்குட்படுத்துமாறும், குறித்த சிறுவர் இல்லத்தை முடி அங்குள்ள சிறுவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை நீதவான் இவ்வாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று புதன் கிழமை குறித்த சிறுவர் இல்லம் மூடப்பட்டது. மதபோதகர் தலைமறைவாகியுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

Constantine_Tஇலங்கையில் இருந்து தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன்:

இச்சம்பவம் தொடர்பாக தற்போது இலங்கையில் உள்ள தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன் தகவல் அளிக்கையில் வடமாகாணத்தில் கிறிஸ்தவச் செல்வாக்குள்ள மன்னார் மாவட்டத்தில் எழுந்தமானமாக சில கிறிஸ்தவ குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இவர்கள் பெண்கள் குழந்தைகளுக்கு புகலிடம் வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை துஸ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வறுமையும் சமூகக்கட்டுமானமும் சீரழிந்துள்ள சூழலில் இவ்வாறான தவறான சக்திகள் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். வறுமை காரணமாக பல பெற்றோர் இவ்வாறான இல்லங்கள் பற்றிய எவ்வித மதிப்பீடுகளும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை போலியான இல்லங்களில் ஒப்படைக்கின்றனர் எனத் தெரிவித்தார் ரி கொன்ஸ்ரன்ரைன். தாய் தலைமறைவான நிலையில் இரட்டைகளாகப் பிறந்த குழந்தைகளை வைத்தியசாலையில் இருந்து கிறிஸ்தவ சகோதரிகளால் முறையாகப் பராமரிக்கப்படும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்த காட்சியைத் தான் நேரில் பார்த்ததாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

இடப்பெயர்வுகள் முகாம் வாழ்வுகள் பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட ரி கொன்ஸ்ரன்ரைன் தற்போதுள்ள வவுனியா முகாமில் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகள் அதகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். வயது குறைந்த பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் முகாம்களுக்குள் அதிகரித்துள்ளதாகவும் இவை பெரும்பாலும் முகாம்களில் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் சுட்டிக்காட்டினார். மேலும் பல பெண்களுடனான பாலியல் உறவுகளும் முகாம்களில் அதிகரித்துள்ளதாகவும் இவை மிகுந்த சமூகச் சீரழிவை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கட்டுப்படுத்த முகாம்களில் சைவ குருக்களை அழைத்து வந்து மத போதணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சிந்தனையை இந்தச் சைவக் குருக்கள் மூலம் உபதேசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான முகாம்கள் மூடப்பட்டுள்ள போதும் இறுதி யுத்தம் நடந்த பகுதிகளில் வெடிபொருட்கள் துப்பரவு செய்யப்படாத இடங்களைச் சேர்ந்த மக்களும் எப்போதுமே தமக்கு நிரந்தர வாழ்விடத்தையும் நிரந்தர தொழில்வாய்ப்பையும் கொண்டிராத மக்களும் இன்னமும் முகாம்களில் தங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். முகாம் வாழ்வுமுறை துரிதமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • நந்தா
    நந்தா

    மட்டக்களப்பில் பெண்களுக்கான அனாதை விடுதிநடத்தி அங்குள்ள சிறுமிகளுடன் “பாலியல்” உறவுகள், பலாத்காரம், விபச்சாரம் என்பனவற்றை மேற்கொண்ட பாதிரி நாட்டை விட்டுத் தப்பியுள்ளார்.

    இலங்கையில் பாலியல் வக்கிரங்களுக்கு பாரிய தண்டனைகள் கிடையாதென்பது பிரதான காரணமாக இருக்கிறது. பல்கலைக் கழகத்திலேயே பதவியைக் காட்டி மிரட்டி பாலியல் சேஷ்டைகள் நடக்கும் பொழுது போக்கிடமில்லாத அநாதைகளால் யாரை எதிர்த்து நிற்க முடியும்?

    Reply