கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னரும் பூர்த்தியடையவில்லை அரசாங்கம் அறிவிப்பு

விடு தலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் மீதான அடிப்படை விசாரணை இன்னும் முடிவடையவில்லை என நேற்று புதன்கிழமை சபைக்கு அறிவித்துள்ள அரசாங்கம், கே.பி. உட்பட கைதான விடுதலைப்புலி சர்வதேச செயற்பாட்டாளர்கள், வன்னிப் படை நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முடக்கி அவ்வமைப்பிற்கு சொந்தமான சொத்துகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.தயாசிறி ஜயசேகர எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஆளுந்தரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பதில்களிலேயே இது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. கே.பி. கைது செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட அடிப்படை விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை விசாரணைகள் முடிவடையும் வரை கே.பி. பாதுகாப்புத் தரப்பின் பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கே.பி. அண்மைய தினமொன்றில் வன்னி பிரதேசத்துக்கான விஜயமொன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன, அடிப்படை விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை உறுதி செய்து கொள்வதற்கென அவர் வன்னிப் பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகக் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *