‘மனுசி ஒரு பொம்பிளை’ ஆக இருப்பது ரொறன்ரோ மேயருக்கான தகுதி! – சிரிபிசி வானொலியின் சர்ச்சைக்குள்ளான விளம்பரம் : த ஜெயபாலன்

George_Smitherman_Mayoral_Candidate_TorontoRob_Ford_Mayoral_Candidate_Torontoதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்திற்கான உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் ரொறன்ரோ மேயர் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது. ரொறன்ரோ சனத்தொகையும் நிதிவருவாயும் அதிகமுள்ள கனடாவின் ஆறாவது பெரும் அரசாங்கமாகும். இதனைக் கைப்பற்ற Rocco Rossi, George Smitherman, Joe Pantalone, Rob Ford ஆகிய நால்வர் போட்டியிடுகின்றனர். முன்னாள் கவுன்சிலர் றொப் போர்ட், ஒன்ராரியோவின் முன்னாள் துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்துகின்ற உலகத் தலைநகர்களில் ரொறன்ரோ முக்கியமானது.

இந்தத் தேர்தலில் வலதுசாரியான றொப் போர்ட் க்கு சார்பான நிலைப்பாட்டைக் கொண்ட சிரிபிசி வானொலி லிபரல் கருத்தியல் உடையவரும் ஒத்தபாலுறவைக் கொண்டவருமான ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிராக அவருடைய பாலுறவை கொச்சைப்படுத்துகின்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தேர்தலில் றொப் போர்ட்க்கும் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கும் இடையே கடுமையான போட்டி நிலவுககையில் அவர்களுக்கு இடையே ஒரு வீத வாக்கு வித்தியாசமே காணப்படுவதாக வாக்களிப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரொறன்ரோவில் 40 வீதமானவர்கள் தென்னாசியாவையும் ஆபிரிக்காவையும் சேர்ந்தவர்கள். இவர்களது சமய கலாச்சாரக் கூறுகள் ஒத்தபாலுறவுக்கு எதிரானது ஆகையால் இத்துருப்புச்சீட்டு லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

வலதுசாரியான றொப் போர்ட் சிறுபான்மை இனங்களிடையே காணப்படுகின்ற ஒத்தபாலுறவுக்கு எதிரான சமய கலாச்சாரக் கூறுகளைக் குறி வைத்து இவ்வாறான விளம்பரங்களுக்கு துணையாக நின்றிருக்கலாம் என கனடியப் பத்திரிகைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. ஆனால் ‘மற்றையவருடைய வாழக்கைத் தெரிவு பற்றி எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் பன்மைத்துவத்தை ஆதரிப்பவன். அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என்கிறார் றொப் போர்ட்.

தேர்தல் முடிவுகள் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிரானதாக அமைந்தால் ஒத்தபாலுறவுக்கு எதிரான இவ்விளம்பரம் பாரிய சட்டச் சிக்கலுக்கு உள்ளானதாகலாம். ஜோர்ஜ் ஸ்மிதர்மன் இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட பாலியல் சமூகத்திற்கு எதிரான இவ்விளம்பரம் ஒரு அலையை ஏற்படுத்தும் என்பதில் வியப்பில்லை. ஒத்த பாலுறவுச் சமூகத்தை பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற ‘எக்ஸ்ரா’ என்ற அமைப்பு ஏற்கனவே இவ்விளம்பரத்தை கடுமையாகக் கண்டித்து உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று சிரிபிசி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட விளம்பரம்:
‘முதலாமவர்: மணியன்னை மேயர் எலக்சனில யாருக்கு உங்கள் வோட்டுக்கள்?
இரண்டாமவர்: (நளினச் சிரிப்புடன்) இதென்ன கேள்வி. நான் தமிழனடா. எங்களுக்கு சமயம், கலாச்சாரம் என்று இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ அவற்றை மனுசி ஒரு பொம்பிளை.
அதுமட்டுமல்ல வீடு வேண்டேக்க மாற்று வரி மற்ற வரிகளையும் குறைப்பாராம்.

முதலாமவர்: அப்ப இமிகிரேசன்?
இரண்டாமவர்: (மீண்டும் நளினச் சிரிப்புடன்) அது பெடரல் கவுமன்ற் விசயம். வெள்ளையன்ர வோர்ட்டை எடுக்க வாக்கும்.
முதலாமவர் அப்ப நானும் ரொப் போரட் க்குத் தான் போடப்போறன்.’

இந்த விளம்பரத்தில் ரொறன்ரோ மேயர் ஆவதற்கு வேட்பாளரின் ‘அவற்றை (றொப் போர்ட் இன்) மனுசி பொம்பிளை’ யாக இருப்பது முக்கிய தகுதியாகக் காட்டப்படுகின்றது. ஏனெனில் எதிராக நிற்கின்ற வேட்பாளர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஒத்தபாலுறவுடையவரை மணந்து ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கின்றார்.

வலதுசாரியான றொப் போர்ட்டை ஆதரிக்கின்ற அதே வலதுசாரிக் கருத்துக்களைப் பரப்புகின்ற சிரிபிசி வானொலி ஜோர்ஜ் ஸ்மிதர்மன் யை ‘அலி’ எனவும் விமர்சித்துள்ளார். ஒருவருடைய பாலியல் தன்மை தொடர்பாக மெலினத் தன்மையைக் கடைப்பிடித்த இவ்வானொலி, மேற்படி விளம்பரம் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை. அதேசமயம் இவ்வாறான ஒரு விளம்பரம் ஒரு கிறிஸ்தவ அமைப்பினரூடாக தங்களுக்கு வந்ததாகவும் அதனை விளம்பரப்படுத்த தாங்கள் மறுத்துவிட்டதாகவும் சிரிஆர் வானொலியின் சார்பில் ராகவன் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக தேசம்நெற் சிரிபிசி வானொலியுடன் தொடர்பு கொண்ட போதும் எமது அழைப்பிற்குப் பதில் இல்லை.

‘வெள்ளையன்ரை வோர்ட்டை எடுக்கவாக்கும்’ போன்ற இனவாதமான கருத்துக்களும் வெளியிடப்பட்டு உள்ளது. வெள்ளையர்கள் குடிவரவாளர்களுக்கு எதிரானவர்கள் என்பதை கட்டமைத்துக் கொண்டே அவ்வாறு குடிவரவாளர்களுக்கு எதிரானவருக்கே வாக்களிக்குமாறு அத்தமிழ் விளம்பரம் கோருகின்றது. அண்மையில் கனடாவிற்கு கப்பலில் வந்த நூற்றுக் கணக்காண தமிழர்களுக்கு எதிராக றொப் போர்ட் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் றொப் போர்ட் கோரி உள்ளார். அவ்வாறு இருந்தும் அண்மையில் குடியேறிய தமிழ் சமூகத்தின் வானொலி குடிவரவுக்கு எதிரானவரை ஆதரிக்குமாறு விளம்பரப்படுத்தியது முரண்நகையாக உள்ளது.

அதற்கு முக்கியமாக எதிர்த்தரப்பு வேட்பாளரின் பாலியல்தன்மை காரணமாகி உள்ளது. வட அமெரிகாவிலேயே ஒத்தபால் திருமணங்களை ஏற்றுக்கொண்ட நாடு கனடா. பாலியல் தொடர்பாக லிபிரல் கருத்துக்களை உடையநாடு. அங்கு ஒருவருடைய பாலியல் தன்மை அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது சட்டத்திற்கு முரணாணது. உள்ளுணர்விற்கு ஒவ்வாதது.

இந்த விவகாரம் தொடர்பாக வானொலி, தொலைக்காட்சியை கண்காணிக்கின்ற சிஆர்ரிசி அமைப்புக்கு குற்றச்சாட்டுக்கள் சென்றுள்ளது. சிஆர்ரிசி அமைப்பும் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் எனத் தெரிய வருகின்றது.

இவ்விளம்பரத்துக்கு எதிராக கனடிய தமிழர்கள் மத்தியில் பரவலான எதிர்க் கருத்துக்களும் கிளம்பி உள்ளது. இவ்விளம்பரத்தை வெளியிட்டமை இனவாதமானது, ஒத்த பாலுறவுக்கு எதிரானது, எவ்வாறான அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் இவ்வாறான மோசமான விளம்பரங்களை வெளியிட முடியாது என பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply to maran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • kadavul
    kadavul

    இவ் விடயம் கடும் கண்டனத்துக்குரியது. கடந்த மாதம் இதே வேட்பாளரை அலி எனவும் இதே வானொலியில் குறிப்பிடப்பட்டது வேதனைக்குரியது. இறுதியாக கிடைத்த தகவல்களின் படி ரொப் போரட் வெற்றி பெற்று விட்டார். சிமிர்தமனின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று நிச்சயமாக சிமிர்தமான் ஒரு பாலியலாளர் என்பது.
    ரொரண்ரோ மாநகரில் போடடியிட்ட அனைத்து தமிழர்களும் தோல்வியடைந்து விட்டனர். இடது சாரி வேட்பாளர் நமோ பொன்னம்பலம் (வி.பொன்னம்பலத்தின் மகன்) 500 வோட்டுகளே கிடைத்துள்ளன. (இறுதி முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை)
    மார்க்கம் நகரில் போட்டியிட்ட லோகனும் கல்விச் சபைக்கு போட்டியிட்ட ஜெனிட்டாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

    Reply
  • நந்தா
    நந்தா

    சீ எம் ஆர் டீ வீ ஐ போன்ற புலி புழுகள் வானொலிகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்காத கனடிய சட்டம் இந்த விஷயத்திலும் ஒன்றும் செய்யப் போவதில்லை!

    ஆயினும் ரொப் fஒர்ட் மேயராகி விட்டார்.

    கணவன் மனைவியாக உள்ள ஆணும் பெண்ணும் ஊர்வலம் போவது கிடையாது. ஆனால் ஓரின சேர்க்கையாளர்கள் மாத்திரம் வருடா வருடம் ஊர்வலம் போகிறார்கள். அந்த ஊர்வலத்தை ரொப் Fஒர்ட் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது வெற்றி இந்த “பால்” விவகாரம் சம்பந்தப்பட்டது அல்ல. மக்களின் வரிப்பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதன் விளைவாகவே இந்த மாற்றம்.

    Reply
  • Information
    Information

    கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் ஒலிபரப்பபட்ட ஒருபால் உறவினருக்கு எதிரான கட்டண விளம்பரம் அடிப்படை மனித உரிமைக்கு எதிரான செயல்

    தேடகம்.

    Reply
  • naanee
    naanee

    இதற்குள்ளும் நான் புலிகளை கொண்டுவர விரும்பவில்லை ஆனால் அதுதான் உண்மை. எதுவித அரசியல் அறிவோ அல்லது அடிப்படை மனிதத்துவமோ இல்லாத மனிதர்களெல்லாம் பல இட்ங்களில் பொறுப்புகளில் தலைமைகளில் வந்துவிட்டார்கள். அப்ப அதை பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் கேனையர்களோ என நீங்கள் கேட்கலாம். நாட்டில் நடந்த எமது ஆயுதபோராட்டம் எவரையுமே எதுவும் செய்ய முடியாதவர்களாக்கி விட்டது. இதன் தாக்கம் எம்மைவிட்டு போக இன்னமும் பல வருடங்கள் செல்லும்.
    இந்த தேர்தலில் பார்த்தீகளானல் வெற்றி பெற்றவர்களும் சரி வெற்றி பெறாமல் அதிக வாக்குகள் பெற்றவர்களோ சரி இன்னமும் தேசியம் என்று வாய் கிழிய போலியாக கத்திக் கொண்டிருப்பவர்கள். தமிழ்நாட்டைவிட ஒரு பிற்போக்கான அரசியல் நிலைபாட்டையே புலம்பெயர் தமிழன் நடாத்திக் கொண்டிருக்கின்றான்.

    Reply
  • karuna
    karuna

    சாதித்தடிப்புக்கொண்ட தமிழன் இதை விட இன்னும் கேவலமாயப் போவான்!

    Reply
  • maran
    maran

    தமிழர் வகைதுறைவள நிலையம்
    Tamil Resources Centre

    ஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்

    ஒக்டோபர் 25, 2010
    கடந்தவாரம் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் மாநகரசபை தேர்தல் தொடர்பான விளம்பரம் ஒன்று ஒலிபரப்பப்பட்டுள்ளது. இவ் விளம்பரம் Gay-Lesbian மக்களுக்கும், தற்போது மாநகரசபை முதல்வருக்கு போட்டியிடும் ஜோர்ச் சிமித்தமன் அவர்களுக்கும் எதிராகவுமே வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் தேடகம் இவ் விளம்பரத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழர் மத்தியில் தொடர்ச்சியாக நிலவி வரும் சாதிய, வர்க்க, இன, பெண், பாலியல் அடக்குமுறைக்கு எதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம். குறிப்பாக Gay-Lesbian மக்களின் போராட்டங்களுக்கு நாம் எமது ஆதரவை தெரிவித்து வந்திருப்பதோடு, தெற்காசிய Gay-Lesbian அங்கத்தினரின் செயற்பாடுகளில் பங்காற்றியும் வந்திருக்கின்றோம்.
    அனைத்து மக்களும் சமமாக நோக்கப்படவேண்டும், அவர்களது மனிதவுரிமைகள் மதிப்பளிக்கப்படவேண்டும் என கனேடிய சாசனம் வலியுறுத்துகிறது. சமூகத்தில் ஒருவரது பாலியல் தெரிவுக்காக அவரது அனைத்து உரிமையும் மறுக்கப்படுவது மானிடத்துக்கு எதிரானது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் Gay-Lesbian சமூத்தினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், கேலி என்பனவற்றால் பல இளைஞர்கள் தற்கொலை செய்த பரிதாபங்கள் இடம்பெற்றுள்ளன.
    இன்னமும் தெற்காசிய சமூகத்தில் உள்ள Gay-Lesbian மக்கள் தம்மை மூடி மறைக்கும் நிலையிலேயே உள்ளனர். Gay-Lesbian மக்களின் உரிமை குறித்தான விழிப்புணர்வை எம் மத்தியில் ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளது. Gay-Lesbian சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் மிகவும் ஆழமாக செயலாற்ற வேண்டிய காலமிது. குறிப்பாக மதத்திற்கூடாக இச் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறை கண்டிக்கப்படவேண்டியது. மனிதத்துவத்தை மேம்படுத்தவே மதம் படைக்கப்பட்டதாக போதிக்கும் சமயவாதிகள் தமது அடிப்படைவாதத்திலிருந்து இன்னமும் மீண்டு வரவில்லை. எல்லாப் படைப்பும் இறைவனது என்று சொல்லிக் கொள்பவர்கள் சமத்துவத்தை பேணுவதில்லை. மதம் என்பது தத்தமது தேவைகளுக்காக மட்டும் பாவிக்கும் ஆயுதமாய் மக்களை அடக்கி ஆளும் தன்மையிலேயே நிலைத்து நிற்கிறது. மனித மேன்மைக்காய், மானுட நீதிக்காய், மானிட சமுத்துவத்துக்காய் எம்மைச் சூழவுள்ள மத எண்ணக் கருத்தோட்டங்களை நாம் கேள்விக்குள்ளாக்கவேண்டிய தேவை இருக்கிறது.
    இந்த பிற்போக்குத்தனமான விளம்பரச் செயற்பாட்டுக்கு கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுடன், இவ் விளம்பரத்தால் மனத்தாக்கத்துக்கு உற்படுத்தப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்பையும் கோரவேண்டும். ஊடக அறத்தை மீறிய இச் செயற்பாட்டை நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
    இந்த அற்பத்தனமான விளம்பரத்திற்கும், அதன் பின்னால் நின்று செயலாற்றும் பிற்போக்கு வலதுசாரி அரசியலுக்கும் எதிராய் குரல்கொடுக்கும் அனைத்து சக்திகளுடன் நாமும் இணைந்து கொள்ளுகிறோம்.
    நன்றி

    Reply
  • thurai
    thurai

    //சாதித்தடிப்புக்கொண்ட தமிழன் இதை விட இன்னும் கேவலமாயப் போவான்!//கருணா

    தமிழன் என்னும்போது எல்லோரையுமே பாதிக்கின்றது. சாதிதடிப்புடையோரே ஈழத்தமிழனின் இனறைய நிலமைக்கு காரணம். இவர்களே தமிழர்கள் உலகமெங்கும் அடிவாங்கும் நிலைமைக்கும் கொண்டுவருவார்கள். சிங்களவர்களிடமிருந்து தமிழர்களைக் காக்கவேண்டிய அவசியமில்லை தமிழரினுள்ள விசக்கிருமிகளிடமிருந்தே காப்பாற்ர வேண்டும்.– துரை

    Reply
  • thurai
    thurai

    //தமிழர் மத்தியில் தொடர்ச்சியாக நிலவி வரும் சாதிய, வர்க்க, இன, பெண், பாலியல் அடக்குமுறைக்கு எதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம்//மாறன்

    வாழ்த்துக்கள்.

    துரை

    Reply