புலி ஆதரவு இலங்கை எழுத்தாளர்களும் தமிழக எழுத்தாளர்களும் கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக கையெழுத்துப் போர்!

அடுத்த ஆண்டு ஜனவரி கொழும்பில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மாநாடு அதற்கு எதிராக எழுத்துள்ள எதிர்ப்பலையால் தேவைக்கு அதிகமான விளம்பரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஆதரவாகவும் எதிராகவும் இணைய வலையில் கடந்த ஆறு மாதங்களாக பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

தற்போது கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக 130 பேர் வரை கையெழுத்திட்டு உள்ளனர். இவர்களில் நூறுக்கும் அதிகமானவர்கள் தமிழக எழுத்தாளர்கள். ஏனையவர்கள் 30ற்கும் குறைவானவர்கள் இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்கள். இவர்களில் ஒருசிலர் தவிர பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களுடைய அரசியலையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள்.

இது தொடர்பாக தேசம்நெற்றில் பதிவிடப்பட்ட கட்டுரை: ( யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு )

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுடைய கலை கலாச்சாரப் பிரிவில் இயங்கிய அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மென்போக்குடைய கி. பி. அரவிந்தன், இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து; அருள் எழிலன், இந்தியா; பிரான்ஸ் மு. புஷ்பராஜன், காலம் செல்வம், கனடா; யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து; கண. குறிஞ்சி, இந்தியா; கீற்று நந்தன், இந்தியா.போன்றோரால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டறிக்கையை தேசம்நெற் விவாதக் களத்திற்குப் பதிவிடுகிறோம்.

தேசம்நெற்

._._._._._.

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, “அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு” எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.

படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். “வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது” என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.

தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம். நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா.

க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர், இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர், இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர், இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் : மு. புஷ்பராஜன், இங்கிலாந்து; காலம் செல்வம், கனடா; கி. பி. அரவிந்தன், பிரான்ஸ்; யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து; இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து; கண. குறிஞ்சி, இந்தியா; அருள் எழிலன், இந்தியா; கீற்று நந்தன், இந்தியா.

Show More
Leave a Reply to ashroffali Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

37 Comments

  • indiani
    indiani

    யதார்த்தம் புரியாத இத்தனை எழுத்தாளர்கள் எமது தமிழ் உலகில் இருக்கிறார்கள் என்பது வெட்கத்துக்குரிய விடயமே

    Reply
  • மாயா
    மாயா

    //indiani- யதார்த்தம் புரியாத இத்தனை எழுத்தாளர்கள் எமது தமிழ் உலகில் இருக்கிறார்கள் என்பது வெட்கத்துக்குரிய விடயமே//

    இவர்களை யார் எழுத்தாளர்கள் என்கிறது. வால்கள். புலி வால்கள். இவர்கள் அறிஞர்களில்லை. முட்டாள்கள்.

    Reply
  • Saleem
    Saleem

    தயவுசெய்து கோட்பாட்டாளர்கள் என்றால் என்ன? என்று யாராவது சொல்ல முடியுமா? தனிப்பட்டவர்கள் தமது அல்லது தான் சார் குழுவினரின் சுய நலங்களில் பாதிப்பு ஏற்ப்படும்போது இப்படியாக பலரிடம் கையெழுத்து வாங்கி விடுவார்கள் கையெழுத்து கொடுப்பவர்களும் கொடுத்து விடுவார்கள் இவைகள் பின்னாளில் தவறு என்றாகும்போது இளிப்பார்கள் இவைகள் எம் தமிழர்களின் வாழ்வில் உதாரணங்கள் இவையே இவர்களுக்கும் நடக்கும்.

    இவர்கள் புலிகளின் பின்னால் ஒருகாலத்தில் நின்றவர்கள் புலிகளின் கொலைகளை ஆதரித்தவர்கள் இதில் முக்கியமாக யமுனா புலிகளின் கொலைகளை புலிகளின் அடாவடித்தனங்களை ஆதரித்தவர். பத்மநாப ஜயர் முஸ்லீம்களின் வெளியேற்றததை அதரித்தவர். செழியன் இன்னுமொரு ஊடகவியலாளனை கடத்தி கப்பம் கேட்டவர். இவற்றிக்கொல்லாம் எங்கே பதில் இந்த ஊடகவியலாளர்கள் இளித்துக்கொண்டா கையெழுத்து கொடுத்தனர்.

    இங்கே கையெழுத்து போட்ட பல ஊடகவியலாளர்கள் புலிகள் தமிழர்களை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்து போனபோது ஏன் குரல் கொடுக்கவில்லை. இவர்கள் பலர் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் பல நூறாக கொலை செய்தாலே தான் உலக நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்கும் என்றெல்லாம் பேசியவர்கள் கருத்து வெளியிட்டவர்கள். இவற்றிக்கெல்லாம் எங்கே பதில்.

    Reply
  • palli
    palli

    இத்தனை புருடாக்களையும் தள்ளி வைத்து விட்டு மகாநாட்டை நடத்தினால் அதுவே எழுதாளர் மகாநாடு; இல்லையேல் அது புகழ்விரும்பிகள் பண நாடாக மாறிவிடும், அருள் எழிலன் இலண்டனில் நடந்த மகாநாட்டில் தான் புலி தவிர யாருக்கும் விலை போக மாட்டேன் என வாக்குமூலமே கொடுத்துள்ளார்; ஆக இதன் பின்னணியில் இருப்பது புலியின் கறுப்பு பணமே தவிர கொள்கையோ அல்லது பண்போ அல்ல:

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    இதுவும் தமிழ் பேசும் இந்தியர்களின் மாபியாத் தனம் தான்..அவர்கள் வராமல் இருப்பது பற்றியல்ல பிரச்சனை..அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பங்குபற்றாமல் இருக்கலாம் ஆனால் நடக்கக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? இன்று மனித உரிமை இல்லை என்று கையொப்பமிட்ட எத்தனை பேர் இந்தியப் படைகளும் ஆயுதங்களும் அப்பாவித் தமிழ்மக்களைக் கொன்று குவித்த போது குரல் எழுப்பினார்கள்? அல்லது விடுதலைப் புலிகள் பத்திரிகையாளர்களையும் , எழுத்தாளர்களையும் கொன்ற போது அதைக் கண்டித்தார்கள்? 500 கோடியில் செம்மொழி மாநாடு நடந்த போது வயிற்றுக்கில்லாத இந்தியப் பிரஜையின் மனித உரிமை குறித்து இவர்கள் ஏன் கவலைப் படவில்லை?

    இன்று ஈழத் தமிழ் மக்கள் தமது எழுத்தின் மூலம் தான் தமது பிரச்சனையைச் சொல்ல முடியும்.. அதற்கு அவர்களுக்கு இத்தகைய மாநாடுகள் , பயிற்சிகள் நிறைய வேண்டும்.. அதனால் இதுபோன்ற மாநாடுகள் நிறைய நடக்க வேண்டும்.. தமிழ் நாட்டவரின்- இந்தியரின் விருப்பு வெறுப்புக்கு ஆடி நாம் எம்மையே அழித்துக் கொண்டது போதும்..

    புலம் பெயர்த்தவர்களை விட்டு விடுங்கள்… அவர்கள் புறம்போக்கு நிலம் போன்றவர்கள்…அவர்களுடைய எழுத்தோ அல்லது இலக்கிய முயற்சியோ புலிக்கு வக்காலத்து வேலையைத் தான் செய்தன ஆனால், தமிழ் நாட்டவருக்கு ஒரு வேண்டுகோள்… ஈழத்தில் இப்போதுள்ள மக்கள் உங்களை நம்பி மோசம் போனவர்கள்… தயவு செய்து அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுங்கள்..நீங்கள் அக்கறை கொள்வதற்கு உங்கள் ஊரில் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன..

    Reply
  • Nadesan
    Nadesan

    புலி தனியாக வேட்டைக்கு போகும் ஆனால் புலிசார்பு எழுத்தாளர்கள் இப்படி மந்தைக்தனமாக இருக்கிறார்களே? இலங்கை தமிழனை கோவணத்தோடு கொண்டுவந்து விட்டபின் ஈழத்து எழுத்தாளன் உயிர் பிழைத்திருப்பது அய்யருக்கும் செல்வத்தும் பிடிக்கவில்லை. புலி இருந்தால் இந்த மகாநாடு நடத்துபவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க சொல்லி இருப்பார்கள். இல்லாததால் மந்தைகளாக கையெழுத்து வைக்கறாரன்கள்.

    உங்கட மனுவில் உள்ள கோசங்களை நீங்கிவிட்டால் கோதுதான் மிஞ்சும்
    உதாரணம் –
    குருதி தோய்ந்த மண் மற்றும் சிங்கள மேலாதிக்கம்
    புலி பொங்குதமிழ் கொண்டாட்டம் நடத்தியதும் கிளிநோச்சியில கலைவிழா மானிடத்தின் ஒன்று கூடல் இப்படி எல்லாம் நடந்தபோது இந்த கோசங்கள் எங்க போயிற்று.
    இப்ப பொறாமையில பொசுங்கிறேங்கடா

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன./,

    /சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது./–

    அருள் எழிலனைப் பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை, ஆனால் யமுனா ராஜேந்திரனின் எழுத்துக்களை பல ஆண்டுகளாக அவதானிக்கும்போது, ஜெயபாலனின் கருத்துதான் ந்ஜாபகம் வருகிறது, “தமிழ்நாட்டிச் சேர்ந்தவர்கள், விடுதலைப் புலிகள் மீது ஒருவித மென்மைப் போக்கு உடையவர்களான முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக பிரதிபலிப்பது எதிர்க்கக்கூடிய ஒன்று அல்ல” என்பது!.
    முதல் பந்தி கருத்துப்படி இலங்கை அரசாங்க நடவடிக்கை எதிர்க்கப்படவேண்டும். இரண்டாம் பந்தி கருத்துப்படி இந்தியர்கள் கருத்து தெரிவிப்பது அவரவர் கருத்துரிமை,இதை விமர்சனம் செய்வது இலங்கைத்தமிழர்களுக்கு அறிவுடைமை ஆகாது!.இலங்கையில்,தற்போது இந்தியாவுக்கு தமிழ் பொதுமக்களிடையே ஆதரவு இல்லை, இலங்கை அரசாங்கத்திற்கும்,இராணுவத்திற்கும் ஆதரவு உள்ளது.புலிகளின் அழிவை பெரும்பாலான இலங்கைத்தமிழ் பொதுமக்கள் அங்கீகரிக்கின்றனர்!. இதை இலங்கை அரசாங்கம் “மேனிப்புலேட் செய்யக்கூடாது”. இதற்கு, இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு என்று பெயரிடவேண்டிய காலம் வந்துள்ளது. “உலகத்தமிழ்” என்ற பதத்திற்கு மங்குகாலம் ஆரம்பாமாகியுள்ள யதார்த்தத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்!.

    Reply
  • Kumar
    Kumar

    இந்தக’ கூட்டறிக்கையை வாசிக்கும் முருகபூபதி இனிமேலாவது விழித்தெழுந்து இந்திய மாயையிலிருந்து விலகிவந்து ஈழத்துத் தமிழ் படைப்பாளியாக தனித்துவமாக இயங்குவாராக. இனிமேலும்> ஒவ்வொரு கட்டுரையிலும் இன்றளவுவரை தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு விசுவாசியாகவும்> அவர்களை அறிந்து தொடர்புகொள்வதே பேரின்பம் என்றிருந்தவருக்கு தமிழ்நாடே எதிர்த்து அறிக்கைவிட்டிருப்பது சீரணிக்க கஷ்டமாகத்தான் இருக்கும். சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா என்றிருப்பதை> சர்வதேச ஈழத்தமிழ் எழுத்தாளர் விழா என்று மாற்றியிருந்தால் இந்த இந்திய தலையீடு ஏற்படத் தேவையிருந்திருக்காது.

    Reply
  • மாயா
    மாயா

    //யமுனா ராஜேந்திரனின் எழுத்துக்களை பல ஆண்டுகளாக அவதானிக்கும்போது, ஜெயபாலனின் கருத்துதான் ந்ஜாபகம் வருகிறது, “தமிழ்நாட்டிச் சேர்ந்தவர்கள், விடுதலைப் புலிகள் மீது ஒருவித மென்மைப் போக்கு உடையவர்களான முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக பிரதிபலிப்பது எதிர்க்கக்கூடிய ஒன்று அல்ல” //

    இவர்கள்தான் முற்போக்கு சிந்தனாவாதிகளா? சுத்தம்.

    // அருள் எழிலன் இலண்டனில் நடந்த மகாநாட்டில் தான் புலி தவிர யாருக்கும் விலை போக மாட்டேன் என வாக்குமூலமே கொடுத்துள்ளார்.//

    அதாவது புலிகளிடம் காசு வாங்குகிறார் என்பதை அருள் எழிலன் ஒத்துக் கொண்டுள்ளார்.

    Reply
  • aathav
    aathav

    கொழும்பில் நடைபெறவுள்ள எழுத்தாளர்கள் மாநாட்டிற்கு> பிரபல இரு வில்லிசைக் கோஸ்டி “வில்லிசை” நிகழ்துகின்றார்கள்! இதற்கு
    மு. புஷ்பராஜன் இங்கிலாந்து; காலம் செல்வம் கனடா; கி. பி. அரவிந்தன் பிரான்ஸ்; யமுனா ராஜேந்திரன் இங்கிலாந்து; இ. பத்மநாப ஐயர் இங்கிலாந்து; கண. குறிஞ்சி இந்தியா; அருள் எழிலன் இந்தியா; கீற்று நந்தன் இந்தியா.பின்னாலிருந்து ஆமாப் போடுகின்றார்கள்! கோட்பாளர்கள் கோவை ஞானி>எஸ்.வி.ராஐதுரை>தமிழவன் போன்றோர் பக்கவாத்தியக்காரர்கள் ஆகியுள்ளனர்! மற்றையோர்கள் எல்லாம் முன்னாலிருந்து தலையாட்டி ஆமாப் போடுகின்றார்கள்! இதற்குள் “அசை” அசோக்கும்! வில்லிசையின் தலைப்பு> “மாநாட்டாளர்களை மதிக்கின்றோம்>அரச ஆதரவாளகர்கள் ஆகிடுவரோ என அஞசுகின்றோம்” இந்த கலைக்குழு குழாம் கூட்டத்தின் நவீன கண்டுபிடிப்பு எப்படியிருக்கிறது?

    Reply
  • Nadchathran Chev-Inthian
    Nadchathran Chev-Inthian

    பத்திரிகையாளர் லசந்தவைக்கொன்றது ராஜபக்ச றெஜீம் என்றால் அக்குற்றத்திற்கு உடந்தைபோனவர்கள் இதில் கையொப்பமிட்டுள்ள
    கவிஞர் சேரன் இரவி அருணாச்சலம் யமுனா ராஜேந்திரன் பத்மநாப அய்யர் மு புஸ்பராஜன் கி பி அரவிந்தன் இன்குலாப் தமிழ்நதி பா செயப்பிரகாசம் தா பாலகணேசன் பிரான்ஸ் வாசுதேவன் நடராசா முரளிதரன் முதலிய புலிகளின் பாசிசத்திற்கு நிபந்தனையற்ற அடிமைச்சேவகம் செய்தவர்களே. ஏனெனில் ராஜபக்சவை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் தமிழ்மக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்து அவரை ஆட்சியில் ஏற்றியதே மேற்கூறிய எழுத்தாளர்களின் எஜமான் ஆகிய புலிகளே.

    சேரன் பிரபாகரனுக்கு “தளராத போர்வலு படைத்திறன் என்பவற்றின் மீது உறுதியாகக் கட்டப்பட்ட நம்பிக்கையோடும் பெருமிதத்தோடும்” தேசியத்தலைவர் மாவீரர் தின உரையை வாசித்தார் என்று பிரபாகரனுக்கு வழிந்தமாதிரி முருகபூபதி எக்காலத்திலுமே ராஜபக்சவிற்கு வழிந்து பிழைக்கவில்லை.

    எனவே எனது ஆதரவு இச்சர்வதேச மாநாட்டுக்கு உண்டு.

    -நட்சத்திரன் செவ்விந்தியன்.

    Reply
  • Saleem
    Saleem

    //தமிழ் நாட்டவரின்- இந்தியரின் விருப்பு வெறுப்புக்கு ஆடி நாம் எம்மையே அழித்துக் கொண்டது போதும்//தாமிரா

    இந்தியர்கள் அரவணைத்தார்கள் எமக்கு உதவ என்று இருந்தோம் ஆயுதங்கள் தந்தனர் எமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தோம் ஒப்பந்தம் எழுதினார்கள் எமக்கு என்றிருந்தோம் எம்மை அடிபட வைத்தார்கள் பொறுத்திருந்தோம் ஏதோ வரும் என்று-இன்று கையெழுத்திட்டுள்ளார்கள் இந்த இந்தியர்கள் இது நிச்சயமாக எமக்காக அல்ல தமது சுயநலத்திற்காகவே தான் அது தமது இந்தியாவை மீறி எதுவும் யாரும் செய்க்கூடாது என்ற நோக்கத்திலேதான்.

    வெட்கம் கெட்ட இந்த எழுத்தாளர்கள் முள்ளிவாய்க்காலில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்தும் என்ன செய்தார்கள் – நீங்கள் எல்லாம் உங்கள் பிழைப்புக்கே எழுதுகிறீர்கள் மானிடத்திற்காக அல்ல

    Reply
  • tharmu
    tharmu

    எழிலன் அன்றும்(பாலசிங்கம் காலத்திலிருந்து) புலி இன்றும் புலி என்று காட்டிவிட்டார்.
    எழிலன்+ இனியொரு நாவலன் + யமுனா கூட்டு.
    புலிப்பாணியில் கட்டைப்பஞ்சாயத்து.
    இனியொருவில் புலிக்கு சரித்திரம் எழுதுகினம்.
    புதியதிசையில் நாவலனும் ஒருவர்.
    புதியதிசை+ பிரிஎவ் இணைந்து பீரிசுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
    சேர்த்தப் பார்த்தால் நாவலன் புலிக்கோ வேலை செய்கிறார்??.இனியொரு புலிகளின் குரல் எனலாமா?.

    Reply
  • Londonboy
    Londonboy

    லண்டனில் லசந்தாவின் கொலைக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றன. இந்த கையெழுத்திட்ட இங்கிலாந்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் அந்தநேரம் எங்கே போயிருந்தீர்கள்?? இன்று லசந்தா பற்றியும் மற்றைய ஊடகவியலாளர்கள் பற்றியும் இப்போது என்னத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.?

    தங்களின் சுயநலத்திற்காக இந்தியர்கள் இலங்கைத் தமிழரை, தமிழர் பிரச்சினைகளைப் பாவிக்கிறார்கள்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    செவ்விந்தியன் ஒரு இளம் தலமுறைக் கவிஞர் மற்றும் கட்டுரையாளர். பல புலம் பெயர்ந்ததுகளைப்போல் எதையாவது எழுதி விட்டு நானும் எழுத்தாளன் எனக்கும் இயல் விருது அடுத்த வருடம் ஐயர் மூலமாக கிடைக்கப் போகிறது என்று தம்பட்டம் அடித்து திரிபவரல்ல. மாநாட்டுக்கு பகிரஙமாக ஆதரவு கொடுக்கும் இளையவர் அவர்.. அவரது மன உறுதியையும் தைரியத்தையும் பாராட்டுகிறேன்.. அதுவும் எஸ். பொ. வின் ஆதரவுகள் உலாவித்திரியும் சிட்னியில் இருந்து இப்படி எல்லோராலும் பகிரங்கமாகச் சொல்ல முடியாது..

    ஈழத்தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டுள்ள அனைத்து தமிழ் எழுத்தாளர்களும் செவ்விந்தியனைப் பின்பற்றி தமது ஆதரவை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.. எமது மக்களின் பிரச்சனையை வெளியே கொண்டுவர அவர்களுக்கு எழுத்தாளர்கள் உதவ வேண்டும்!

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்த நபர்களில் பலரை யாருக்கும் தெரியாது. தெரிந்தவர்களில் பலர் “புலிவால்கள்”. புலம் பெயர்ந்த தமிழர்களை “முட்டாள்களாக்க” புலிப் பத்திரிகைகளில் எழுதி “எழ்த்தாளர்” பட்டம் பெற்றவர்கள்.

    இந்தநபர்கள் புலிகளின் கொடுங்கோல் ஆட்சிக்கு வக்காலத்து வாங்கியது மாத்திரமின்றி புலிகளால் தமிழர்கள் வதைபட்டதைக்கூட “சிங்கள” அரசு செய்கிறது என்று எழுதி வால் பிடித்தவர்கள்.

    உதாரணத்துக்கு:
    னடராஜா முரளிதரன் என்பவர் சுவிற்சர்லாந்தில் புலிகளின் “உண்டியல்” கோஷ்டியில் இருந்து பல சண்டித்தனங்கள், சல்லாபங்கள் செய்துவிட்டு பணத்தோடு கனடாவுக்கு ஓட்டம் பிடித்து கனடா புலிகளொடு மோதி புலி அங்கீகாரம் கிடைக்காமல் அலந்து கொண்டிருப்பவர். இவர் தொடங்கிய “நாளை” என்ற பத்திரிகைநின்று போய் பல மாதங்களாகிவிட்டது.

    கனடாவில் “பேப்பர்” கிடைக்கமல் உள்ள இந்த ஆளும் ஒரு எழுத்தாளர் என்றால் தமிழர்களின் அறிவையும், கோமாளித்தனத்தையும் எண்ணிச் சிரிக்கத்தான் முடிகிறது.

    காகம் திட்டி மாடு சாகாது.

    பல தசாப்தங்களாக எழுதும் லெ.முருகபூபதி பற்றி அல்லது அவர் செயல்படுத்த விரும்பி பொறூப்பேற்றுள்ள மானாடு பற்றி “பெட்டீச” அந்தஸ்துக்குக் கூட எழுதமுடியாதவர்கள் கையெழுத்துப் போட்டு சாதிக்க எதுவும் கிடையாது.

    எட்டாப் பழம் புளிக்கும் என்பதுதான் இந்த பெட்டீசக்காரர்களின் பிரச்சனை.

    Reply
  • Hira
    Hira

    எழுத்தாளர்கள் பட்டியலில் உள்ள எத்தனைபேர்கள் புலிகளின் பணத்தில் இன்றும் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுகிறார்கள் என்ற பட்டியல் வரும்போது எழுத்தாளர்களின் கேவலம் விளங்கும் கிபி அரவிந்தன் முள்ளிவாய்க்காலில் மக்கள் பலிக்கடாக்களாக்கப்படும்போது ஜபிசியில் பேசியது என்ன? போராட்டம் என்றால் மக்கள் சாவார்கள்… மக்கள் செத்தால்தான் புரட்சி வெடிக்கம்… ஈழம் பிறக்கும்… இவர் ஒரு எழுத்தாளர் ?? அண்ணாந்து பார்த்துக்கொண்டு துப்பாதேங்கோ.

    Reply
  • ranjith
    ranjith

    //சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன// இந்திய எழுத்தாளர் கையெழுத்து கூட்டம்.

    இந்திய இராணுவம் செய்தது பற்றி ஏன் உங்களுக்கு கண்ணுக்கு தெரிந்ததில்லையா? அதன்போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை எப்போ குறிப்பிட்டீர்கள்……ஓ ..ஓ… அது இந்திய இராணுவம் தானே செய்தது. அது உங்கட இராணுவம். இலங்கைத் தமிழரை கொன்றாலும் சரி உங்கட இராணுவம். காஸ்மீரில கொன்றாலும் சரி உங்கட இராணுவம். பங்களாதேஸ்ல கொன்றாலும் சரி அது புரட்சி சூறாவளி தான்

    Reply
  • மூர்த்தி
    மூர்த்தி

    தாமிரா மீனாஷிக்கு பதில்போல எழுதுகிறேன்…

    தமிழக எழுத்தாளர்களின் தமிழ் இன உணர்வை நாம் நன்றியுடன் மதிக்க வேண்டும். இன்றைய நிலையில் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் இவர்கள்தான்.. வைகோ வேறு.. இவர்கள் வேறு… இவர்கள் குறித்து மதிப்புக் குறைந்த வகையில் கருத்துக்கள் தெரிவிப்பது நல்லதல்ல. புலியோ எலியோ… தமிழக எழுத்தாளர்களின் தமிழ் இன உணர்வை நாம் நன்றியுடன் மதிக்க வேண்டும். இன்றைய நிலையில் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் இவர்கள்தான்.. அவர்கள் காட்டும் அக்கறை குறித்து மதிப்புக் குறைந்த வகையில் நாம் கருத்துக்கள் தெரிவிப்பது நமக்கு அழகல்ல.. நல்லதுமல்ல.

    ஒன்று நிச்சயம்.. தாய்த் தமிழகத்தோடு இலங்கைத்தமிழ்ப் பகுதிக்கான நெருக்கமான தொடர்புகளை பேணுவதை அணுக்கமாக ஆரம்பிக்க வேண்டிய அடுத்த கட்டம் வந்துகொண்டே இருக்கிறது.. (சன்டிவியோடு அல்ல..) இனிமேல்தான் – குறைந்த பட்சம் அடுத்த இருபத்தைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு – “ஈழத்தமிழுக்கு”… அதன் காத்திரமான “தமிழ் வளர்ச்சிக்கு” தமிழக ஆதரவு முன்னெப்போதையும் விட அதிகம் தேவை! (பின்னை என்ன சீனாக்காறனோ வந்து கை கொடுக்கப் போறான்..?) அப்படி ஒரு பலவீனமான நிலை… புலம் பெயர்ந்தோர்..?? பொகட் இற் ஐஸே.. (30ற்கும் குறைவான புலம் பெயர்ந்தோர் ஒரு மாநாட்டை எதிர்க்கக்கூட நூறுக்கும் அதிகமான தமிழக எழுத்தாளர்கள் ஆதரவுதானே தேவைப்படுகிறது..)

    இந்தியாவில் வாழ்ந்துகொண்டே எதிர்ப்பிற்கான ஆதரவு (?) நிலையில் தமிழக எழுத்தாளர்கள் குரல் கொடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் மற்றவர்களால் சொல்லப்படலாம்.. இருந்துவிட்டுப் போகட்டுமே.. “அந்த ஆதரவை” சாதாரணமாக எடுத்துக் கொள்வது இன்றைய நிலையில் நன்றன்று. (இப்ப எங்கட ஐங்கரன் எடுக்கப்போன எந்திரன் யாழ்ப்பாணத்தில வெற்றிகரமா ஒடுது..! இதுதான் யதார்த்தம்.!! எது மேல்??)

    ஆனால் தமிழக எழுத்தாளர்களும் தம் எதிர்ப்புக் கோசத்தை தவறாகவே முன்வைக்கிறார்கள் என்றே எனக்குப்படுகிறது. “மாநாட்டை கொழும்பில் வைக்காதே.. யாழ்ப்பாணத்தில் கொண்டுபோய் வை” என்று இவர்களில் யாராவது தார்மீகக் கோபத்தோடு சொல்லியிருந்தால் அது நியாயம்..! மாறாக “மாநாட்டையே வைக்காதே” என்று தமிழக எழுத்தாளர்களும் சொல்வது காழ்ப்புடன் சொல்லப்படுவது போலவே மற்றவர்களுக்கு தோன்றும் என்பது.. பாவம்… அவர்களுக்கு இன்னும் புரியவில்லையோ தெரியவில்லை….

    மாநாட்டை எதிர்க்கும் பல ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் நிலை நன்கு புரிகிறது. எதிர்ப்பவர்களில் பலர் விரும்பியோ விரும்பாமலோ “இலங்கைக்கு விடுமுறைக்குப் போவதற்கு கூட பயந்து நடுங்குபவர்கள்” என்ற பட்டியலில் தங்களை வைத்துக்கொண்டிருப்பவர்களே..!! (எஸ் பொ உட்பட) சிங்கத்தின் குகைக்குச் செல்ல அவர்களுக்குத் தயக்கம்.. அதற்கு வலுவான காரணங்களும் உண்டு; அதையும் மறுப்பதற்கில்லை. இதுதான் எமது சாபக்கேடு..

    “நீ வரேல்லை… சரி… அப்ப ஆர் குத்தியெண்டாலும் இப்ப கொஞ்சமாவது அரிசி வரட்டுமே… அரிசி வரேல்ல எண்டா நீயும் குத்துடா என்ரை ராசா.. பசிக்குது..”

    கனடா மூர்த்தி

    Reply
  • மாயா
    மாயா

    காஸ்மீரில் இந்திய இராணுவம் செய்யும் அட்டுழியங்களை எதிர்த்து இந்த புண்ணாக்கு இந்திய எழுத்தாளர்கள் இணைந்து ஒரு போராட்டம் நடத்தட்டும். அதைச் செய்ய மாட்டார்கள். வங்க தேசத்தில் நடத்தியதை நாம் அறிவோம். இலங்கையில் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளை நாமறிவோம். அனைத்து மக்களும் அறிவார்கள். இலங்கை இராணுவமும் மோசம்தான். ஆனால் இந்திய இராணுவம் போலில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

    //படையினர் வெறுமனே சண்டையிடுபவர்களாக மட்டும் இல்லாது நாட்டின் சமூக பொரு ளாதார செயல்பாடுகளிலும் ஈடு பட்டுள்ளார்கள். இந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தின் பெரும் பகுதித் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் படையினர் இருந்து வருகின்றார்கள்.- யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க (செய்தி)//

    இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்து உள்ளே தள்ள இந்திய அரசு முயன்று வருகிறது. அதற்கு எதிராக இந்த இந்திய எழுத்தாளர்கள் என்ன செய்தார்கள்? அதைச் செய்ய முதுகெலும்பு இல்லை. காரணம் இவர்களையும் உள்ளே தள்ளி விடுவார்கள். யாரும் சம்திங் கொடுக்க மாட்டார்கள். இலங்கை தமிழரை பற்றி பேசினால் ; அந்த மக்கள் வாழ்வு சிறக்கிறதோ இல்லையோ: இந்த மாக்களின் வாழ்வு சிறக்கும். தம் வாழ்வுதான் குறியாக உள்ளது.

    தமிழன் ஒருவன் ஏதாவது செய்ய சிங்களவனிடம் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும். இதுதான் தமிழர் விதி. இது என்று மாறுமோ? அன்றுதான் தமிழன் சுதந்திர மனிதன் ஆவான்.

    Reply
  • ashroffali
    ashroffali

    என்னைப் பொறுத்தவரை மாநாடு நடைபெறுவது நல்லது என்றே படுகின்றது.

    அதன் மூலம் எமது நாட்டு எழுத்தாளர்கள் பலருக்கு வெளிநாட்டில் உள்ளவர்களுடைய தொடர்புகள் கிடைப்பதுடன் நலிவுற்ற கலைஞர்களுக்கு யாருடையதேனும் ஆதரவுக் கரம் கிட்டவும் கூடும்.

    அரசாங்கம் பலன் அடைந்து விடும் என்பதற்காக நம்மவர் பலன் அடையாமல் விடுவது கூடாது. அதற்காகவேனும் மாநாடு நடைபெறட்டும்.

    ஆனால் மாநாட்டின் பணியும் பங்களிப்பும் தமிழ் எழுத்துத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருந்தாக வேண்டும்.சுய விளம்பரம் நாடியதென்றால் தயவுசெய்து விட்டுவிடுங்கள்.

    Reply
  • aathav
    aathav

    இம்மாநாட்டை “தமிழீழ எழுத்தாளர் மாநாடு” என அறிவித்திருந்தால்> இந்த வில்லுப்பாட்டுக் கூட்டம் எல்லாம் வெகுண்டிருக்க மாட்டாது! மகிந்தாவும்> கே.பி.யும் வாறார் என்றாலும் கவலைப்பட்டிருக்காது! இப்போ இவர்களுக்கெல்லாம் நாடு கடந்த>கடக்காத ஈழம் என்றொரு “போட்-அல்லது பானர்” தொங்கினால் காணும்! போற போக்கைப் பார்த்தால்> அருள் எழிலன்-ம.க.இ.க-தலைமையில்> நாவலன்> யமுனா “அசை” அசோக் எல்லாம்> கி.பி.அரவிந்தனுடன் தமிழ்ஈழம் காண புறப்பட்டு விட்டார்கள்! நல்ல கூட்டு! நல்ல “மாக்சிசக் கலவை”!

    Reply
  • மாயா
    மாயா

    //மாநாட்டின் பணியும் பங்களிப்பும் தமிழ் எழுத்துத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருந்தாக வேண்டும்.சுய விளம்பரம் நாடியதென்றால் தயவுசெய்து விட்டுவிடுங்கள். -ashroffali //

    சுயநலமில்லாமல் எதுவுமேயில்லை. அதை உலகம் முழுவதும் பார்க்காதவர்கள் இல்லை. அந்த சுயநலத்துக்குள் நாலு பேருக்காவது நல்லது நடக்க வேண்டும். புலங்களில் வாழ்வோருக்கு பணம் இருப்பதால் எதையாவது செய்யலாம். இலங்கை வாழும் பல நல்ல எழுத்தாளர்களும் ; கலைஞர்களும் கனவுகளோடு வாழ்வோர் மட்டுமே. இங்கே அரசியல் இல்லாமல் அனைவரும் பங்கு கொள்ளும் ; ஆகக் குறைந்தது பார்வையாளராகவாவது வந்து போகும் நிலை வேண்டும். இதற்கு அண்மையில் நடந்த ஒரு விடயத்தை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

    அதாவது அண்மையில் புளொட் சர்வதேச சந்திப்பொன்றை நடத்தியதாக செய்தி வந்துள்ளது. ஆனால் அது குறித்த செய்திகள் முடிவடைந்த பின்தான் பலருக்கு தெரிய வந்தது. சில நண்பர்கள் என்னிடம் தெரியாதா எனக் கேட்டார்கள். தெரியும் ; ஆனாலும் அழைப்பு வரவில்லை எனச் சொன்னேன். புளொட்டின் அடிப்படையே தெரியாதவர்கள் எல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டு வந்திருந்தனராம். என்ன நடந்தது என எந்த விபரமும் இதுவரை வெளிவரவில்லை. வரதராச பெருமாளும் வந்து சென்றுள்ளார். அனைத்து அடிமைத்தனங்களையும் உடைத்தெறிவோம் என பஞ்சு டயலாக் மட்டும் போதாது. நடந்தும் காட்ட வேண்டும். அப்போதான் புளொட் . இல்லையென்றால் பிளெட்.

    இதுபோல இந்த மாநாடும் முறையாக நடக்காவிடில் ; சம்பந்தப்பட்டவர்களை வார நாங்கள் தயாராக இருக்கிறோம். இது சுயநலமாக இருக்கட்டும். நாலு பேருக்காவது நல்லது செய்யுங்கள். இல்லையென்றால் நாறுவீர்கள்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    மூர்த்தி அண்ணாவுக்கு

    எனது கருத்தைப் படித்து பதில் எழுதியமையும் பதிலில் இருந்த பண்பும் உங்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது..மிக்க நன்றி..

    இந்தியத் தமிழ் எழுத்தாளகளின் ஆதரவுடன் தான் ஈழத்தமிழ் வளர வாய்ப்புண்டு என்ற தொனியில் எழுதியிருந்தீர்கள்.. இந்த தாய்நாடு-சேய்நாடு தத்துவம் தான் இலக்கிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் (சினிமா முதகொண்டு) கலாசார ரீதியாகவும் ஈழத்தமிழரான எமது பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்பது எனது எண்ணம்..

    அது கிடக்கட்டும்… இந்த எதிர்ப்புக் கோஷம் எப்படி எழுந்தது என்று கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு சரியான உண்மை புலப்படும்..எஸ். பொ. என்ற தனிமனிதர் தமிழ் நாட்டில் தனது பணத்திற்கும், பதிப்பகத்திற்கும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கான பிரயத்தனமே இந்த பகிஷ்கரிப்பு அல்லது எதிர்ப்பு நாடகம்..இதற்காக அவர் மாநாட்டு ஏற்பாட்டாளர்களை சீனக் கம்யூனிஸ்டுகள் என்றுகூட எழுதினார்..( அப்போதுதானே இந்தியர்களின் தேசபக்தியை உசுப்பேத்தலாம்.) அதன் பின்னர் கூட்டறிக்கைக்காக காரணங்கள் வலிந்து தேடப்பட்டன..

    ராஜபக்ச அரசை விட்டு விடுங்கள்… இன்று உலகில் மனித உரிமைகளுக்கோ அல்லது சிறுபான்மை மக்களது,பழங்குடி மக்களது உரிமைகளுக்கோ 100% மதிப்பளிக்கும் ஒரு நாட்டையாவது காட்டமுடியுமா? முடியாது போனால் அப்படியானால் ஓரளவுக்கு மதிக்கும் நாடுகள் என்று சமரசம் செய்து கொள்ளலாம்..

    புலம் பெயர் தமிழர்களுக்கு இன்று சுற்றுலா செல்வதற்கும், வியாபார விஸ்தரிப்புக்கும் ஓட்டல் புக்கிங் ஏனைய இத்தியாதி விஷயங்களுக்கும் இந்திய தமிழர்களின் உதவி தேவை..அதன் நிமித்தம் தமிழ் நாட்டில் தொடர்புகளை ஏற்படுத்துவது மிக முக்கியம்.. (இதற்காக எத்தனை புலம் பெயர் எழுத்தாளர்கள் பொதுப் பணத்தில் தமிழ் நாட்டில் வாசம் செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும் தானே?) லண்டனில் உள்ள பெரும்பான்மையான தமிழ் வர்த்கர்கள் ஈழத்தமிழ் அகதி இளைஞரை விட தமிழ் நாட்டிலிருந்து வருபவர்களுக்கே வேலை கொடுக்க விரும்புவதும் இந்த தொடர்பாடல் முயற்சியின் ஒரு வடிவமே!

    எஸ்.பொ. ஒரு எழுத்தாளர் என்பதை விட இத்தகைய ஒரு ஏஜெண்டு என்பதுதான் பொருத்தம்..இந்தியாவில் உள்ள தனது அச்சகத்தில் மலிவு விலையில் அச்சிட்டுத்தருவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழ் பொழுதுபோக்கு கவிதாயினிகளுக்கு ஆசை காட்டி கிராக்கி பிடிப்பதை நான் நேரில் கண்டேன்..அது அவரது பிஸினஸ் முயற்சி என்று சொல்வீர்கள்… அப்படியானால் மாநாட்டை அவர் எழுத்தாளர் என்ற வகையில் எதிர்க்கிறாரா அல்லது தமிழரது எழுத்தில் பிழைப்பு நடத்தும் பிஸினஸ்காரர் என்ற வகையில் எதிர்க்கிறாரா?

    ஈழத்தமிழ் மக்கள் இனிமேல் இந்தியாவையோ அல்லது இந்தியத் தமிழரையோ நம்புவது என்பது உடனடியாக நடக்கக்கூடிய ஒன்றல்ல.. புலம் பெயர் தமிழரது ஏக்கங்களும் அடிபட்டு இன்று குற்றுயிராக இருக்கும் ஈழத்தமிழரின் எதிர்பார்ப்பும் ஆதங்கமும் ஒன்றல்ல என்பதுதான் யதார்த்தம்..

    தாமிரா மினாஷி

    Reply
  • நந்தா
    நந்தா

    தாமிரா மீனாட்சியின் கருத்துக்கள் பலருக்கு விளங்கப் போவதில்லை. எங்கள் தமிழீழ வியாபாரத்தில் “இந்திய எதிர்ப்பு” செய்த பல புலிகள் தமிழர்களிடம் கொள்ளையடித்த பணத்தை தமிழ்நாட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். போலிப்பத்திரங்கள் தமிழ்நாட்டில் தாராளமாக தயார் செய்யலாம்.

    எஸ்.பொ வின் மகனும் ஒரு புலி என்று எப்பொழுதோ படித்த நினைவு உண்டு.
    பிரேமதாஸா “ஐயா”
    பிரபாகரன் “மல்லி” என்று இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட்ட புலிகள் இப்பொழுது “தொப்புள் கொடி” என்ரெல்லாம் மானம் கெட்டு எழுதுகிறார்கள்.

    இப்பொழுது இந்தியர்களை “மகிழ்வூட்ட” சீனா பற்றி இதே புலிகள் கதறுவதற்குத் தவறுவதில்லை.

    இந்த இந்தியத் தமிழ் பற்று திடீரென்று பிரவகித்து வெள்ளம் போல ஓடக் காரணம் இந்தியாவில் உள்ள முதலீடுகள் என்பதுதான் காரணமே ஒழிய தமிழும் இல்லை, இலங்கையும் இல்லை என்பதே உண்மை.

    வீரகேசரி மூர்த்தி எழுதும் கனடிய பத்திரிகைகள் “கடல் கடந்த ஈழம்” என்று புலிப் புராணம் பாடும் பத்திரிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Reply
  • Vimukthi
    Vimukthi

    இவ்விடயத்திற்கு தேசம் கொடுத்திருக்கும் தலைப்பும் பின்னூட்டமிட்ட பலரது கருத்துக்களும் இம்மாநாடு பற்றியதாகவோ அங்குள்ள மக்கள் பற்றியதாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. மறுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒப்பமிட்டவர்கள் பற்றியதாகவே தெரிகிறது.

    புலிகளுடையதும் அரசாங்கத்துடையதும் மூர்க்கத்தினால் உறவுகளையும் இழந்து வாழ்வையும் தொலைத்து அல்லல்பட்ட மக்களுடைய மீள்குடியேற்றம் பூர்த்தியாகவுமில்லை. அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவுமில்லை.

    இந்நிலையில் அரசாங்கம் தான் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் மூடி மறைத்து தமிழ் மக்களுக்கு நீதி வழங்கி விட்டதாகக்காட்டத் தான் இம்மாநாட்டை அரசாங்கம் பயன்படுத்தும்.

    தமது விடுதலைக்காக விடுதலைப்புலிகளிடம் அனைத்தையும் பறிகொடுத்து இறுதியில் தமது மகன்களதும் மகள்களதும் உயிரையும் கொடுத்துவிட்டு எதுவுமேயில்லாது எஞ்சிய தமதும் பிள்ளைகளதும் நல்வாழ்க்கைக்காக ஏங்கி நிற்கும் மக்களை ஏமாற்றி இந்த அரசாங்கம் அம் மக்களை நியாயமாக நடாத்துவதாகக்காட்ட இம்மாநாட்டைப் பயன்படுத்தும் என்பது தான் உண்மை. மற்றும்படி அரசாங்கம் பணம் கொடுத்து நடாத்துவது என்பது இதுவரை வெறும்புரளியாகவே இருக்கிறது.

    பாதிக்கப்பட்ட மக்களின் நலனிலிருந்து இப்பிரச்சினையைப் பார்ப்பது தான் அம்மக்களுக்குப் பயன்தரும். மற்றெல்லாம் அவரவர் நலனுக்குத் தான்.

    Reply
  • vanavil
    vanavil

    // இவ்விடயத்திற்கு தேசம் கொடுத்திருக்கும் தலைப்பும் பின்னூட்டமிட்ட பலரது கருத்துக்களும் இம்மாநாடு பற்றியதாகவோ அங்குள்ள மக்கள் பற்றியதாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. மறுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒப்பமிட்டவர்கள் பற்றியதாகவே தெரிகிறது. //

    மக்களின் பிச்சினை வேறு. மாநாட்டின் பிரச்சினை வேறு. இந்த கையெழுத்து குழுவின் பிரச்சினை வேறு. மக்கள் பிரச்சினை இங்கு தேவையில்லை. மாநாட்டைப் பற்றிப் கதைப்போம். இந்த மாநாடு தேவையா? தேவையில்லையா?

    Reply
  • Sripathy Sivanadiyan
    Sripathy Sivanadiyan

    மாநாட்டு நோக்கத்தை திசை திருப்பாதீர்

    தமிழ் உணர்வு என்பது எல்லோருக்குமே பொதுவான விசயம்தான். அதை வெளிப்படுத்துகிற விதமும் அணுகுமுறையும் சற்று மாறுபடலாமேதவிர எங்களுக்குத்தான் இன உணர்வு இருக்கிறது என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது.

    இலங்கையின் இப்போதுள்ள யதார்த்த நிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி நமது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதே நமது நோக்கம். அந்த மண்ணில் தமிழ் இலக்கியத்தின் தடமே இல்லாமல் போகுமோ என்கிற அச்சத்தில் இருக்கும்போது, மீண்டும் அதற்கான களம் அமைக்கும் வாய்ப்புதான் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு. இது, இலங்கை அரசை வாழ்த்தி பாடுகிற மாநாடு அல்ல.

    எப்படியாவது ஒரு வகையில் நமது மக்களின் மறுவாழ்வுக்கு வழி தேடலாமே என்கிற ஆதங்கத்தில் ஒரு முயற்சிதான் இந்த மாநாடு. இப்படி ஆளுக்கு ஆள் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு பிழை ஏதும் கிடைக்காதா என்று தேடி அலைவதும் அதையே பெரிதுபடுத்தி பிரட்சினையாக்குவதும் புத்திசாலித்தனம் அல்ல.

    உலகம் முழுவதும் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் பரவி இருக்கிறார்கள். அதில் பல நாடுகள் விடுதலை புலிகளை ஒழித்து கட்டுகிற காரியத்தில் இலங்கை அரசோடு இணைந்து கரம்கொடுத்த நாடுகள்தான். ஆனாலும் அந்த நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இதே வீரத்தோடும் ரோசத்தோடும் இதுவரை அங்கிருந்து வெளியேறவில்லை. அப்படி வெளியேறவேண்டும் என்பது நமது நோக்கமும் அல்ல.

    இலங்கையில் இனிமேல் கால்வைக்கவே முடியாது என்கிற சூழ்நிலையில் அங்கேபோய் நாம் கலந்து பேசுகிற வாய்பை இலக்கியம் ஏற்ப்படுத்தி கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான். இலக்கியங்கள் என்பது வெறும் எழுத்துக்களின் தொகுப்பு அல்ல நண்பர்களே. இனத்தின் அடையாளங்கள்.
    அதை நமது கருத்து பரிமாற்றத்தின் கூட்டு சிந்தனையோடு இலக்கியத்தில் பதிவு செய்வதன் வழியாக நமது கலாச்சாரத்தித்கும் பண்பாட்டுக்கும் மீண்டும் புத்துயிர் கொடுக்கிறோம் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ள வேண்டும்.

    ஆயுதம் ஏந்தி போராடி அந்த அரசாங்கத்தை தோற்கடித்து அதன்பிறகுதான் தமிழ் மக்களின் வாழ்வை தாங்கி பிடிப்போம் என்பதெல்லாம் காகித கத்திகளை வீசுகிற தற்காலிக விளம்பரங்கள்தான்.. சினிமாவை சேர்ந்த சிலரையும் சிற்றிதழ் பத்திரிக்கையாளர்கள் ஒரு சிலரையும் மட்டுமே வரிசைப்படுத்தி கொண்டு ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகளின் கருத்தாக பதிவு செய்வது, நம்மை நாமே ஏமாற்றிகொள்கிற வேலை. பேனா பிடித்த எல்லோருமே எழுத்தாளர்கள் என்று சொல்லுவது வில்லை எடுத்தவன் வில்லன் என்பதுபோல் ஆகிவிடும். அது வேண்டாம்.

    மனித நேயத்தோடு இந்த விசயத்தை அணுகுகின்ற, மாநாட்டுக்கு ஆதரவு கொடுக்கின்ற படைப்பாளர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்..
    அதையெல்லாம் விளம்பரமாக்கி அரசியல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட நமது மக்களுக்கு உலக நாடுகள் எதுவும் இனிமேல் உதவ போவதில்லை. நாம்தான் கரம் கொடுக்க வேண்டும். நமது கரங்கள்தான் ஒருமித்த கருத்தோடு ஒரே அணியாக சேர வேண்டும். தீர்வே சொல்லாமல் பிழைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான அணுகு முறையாக எமக்கு தெரியவில்லை..

    எதிர் கருத்து மட்டுமே சொல்பவனும் யதார்த்தத்தை உணராமல் ஒரே கருத்தில் உடும்பு பிடியாக நிற்பவனும் போர்குணம் கொண்டவனும்தான் நல்ல எழுத்தாளன் என்பதைப்போல வேடிக்கையான விளக்கம் தருவதைஎல்லாம் கொஞ்சம் நிறுத்துங்கள்.. மனித சமூகத்திற்கு உதவாத அமைதிக்கு வழி காட்டாத எழுத்துக்களை இனி இலக்கிய உலகம்கூட ஏற்றுக்கொள்ளாது. கவனத்தில் வையுங்கள் நண்பர்களே..இந்த மாநாடு தேவை.
    ஸ்ரீபதி சிவனடியான்

    Reply
  • chandran .raja
    chandran .raja

    திருவாளர் சிறீபதி சிவனடியார் அவர்களே! கோழியின் கழுத்தை திருகி சட்டிக்குள் வைப்பது போல தமிழ்மக்களின் கழுத்தை திருகி ஆதாயம் கண்டவர்களில் நீங்களும் ஒருவர். இதை மறுக்க முடிமா?.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /நந்தா on November 1, 2010 7:19 pm
    தாமிரா மீனாட்சியின் கருத்துக்கள் பலருக்கு விளங்கப் போவதில்லை. எங்கள் தமிழீழ வியாபாரத்தில் “இந்திய எதிர்ப்பு” செய்த பல புலிகள் தமிழர்களிடம் கொள்ளையடித்த பணத்தை தமிழ்நாட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள்./–
    நந்தா சொல்லும் இக்கருத்தை நான் அப்படியே ஆமோதிக்கிறேன். இது ஒரு ஆபத்தான போக்கு!.இதன் அடிப்படையிலேயே அனைவரும் எழுத வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியிலிருந்து, ஊடகங்களை, காப்பாற்றவேன்டும் என்று பிரிட்டிஷ் ராடிக்கல் லேபர் பார்ட்டி சொல்லுவதைவிட, நாம் “தலப்பாய் கட்டி விடப்பட்டவர்கள்” (கார்ப்பரேட் அடிமைகள்)களின் அடியாளாக புலிகள்? செயல்பட்டு, “வன்னிமக்களை” அழித்தார்கள். அதேபோல் ,மீண்டும் அதே “தலப்பாய் கட்டி விடப்பட்டவர்கள்” களின் அடியாளாக ம.க.இ.க. வினர் செயல்பட்டு, எழிலன் மூலமாக?,கன்யாகுமாரி மக்கள் அழியப்போகிறார்கள்?, என்று சொல்ல வேண்டும்!.

    Reply
  • Hira
    Hira

    //அதேபோல் இமீண்டும் அதே “தலப்பாய் கட்டி விடப்பட்டவர்கள்” களின் அடியாளாக ம.க.இ.க. வினர் செயல்பட்டு, எழிலன் மூலமாக?, கன்யாகுமாரி மக்கள் அழியப்போகிறார்கள்?, என்று சொல்ல வேண்டும்!.// டெமோகிரசி

    இல்லை இது மீண்டும் இலங்கை மக்களை நாவலன் இனியொரு புதிய திசைகள் மூலமாக தொடர உள்ளன போல் தெரிகிறது.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //பாதிக்கப்பட்ட நமது மக்களுக்கு உலக நாடுகள் எதுவும் இனிமேல் உதவ போவதில்லை. நாம்தான் கரம் கொடுக்க வேண்டும். நமது கரங்கள்தான் ஒருமித்த கருத்தோடு ஒரே அணியாக சேர வேண்டும். தீர்வே சொல்லாமல் பிழைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான அணுகு முறையாக எமக்கு தெரியவில்லை..//

    “நமது மக்களுக்கு உலக நாடுகள் எதுவும் இனிமேல் உதவ போவதில்லை. நாம்தான் கரம் கொடுக்க வேண்டும்.” என்ற இந்த வரிகளை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஐயா பெரியவரே, நீங்கள் எப்போது சிறீலங்காவுக்கு போய் வந்தீர்கள்? யுத்தம் நடக்கும் போதும் சரி , இன்றும் சரி , அங்குள்ள மக்களுக்கு அதிகம் உதவுவது யார் என்று தெரியுமா? உலக நிறுவனங்கள்தான். அங்கே நம்மவர்களில் எத்தனை பேர் சென்று உதவுகிறார்கள்? உலக நிறுவனங்களோடு ஒப்பிடும் போது நம்மவர் உதவி , தூசு. வார்த்தை ஜாலங்கள் வேண்டாம். இப்படி பேசுவது என்னவோ மனோகரா வசனம் போல் உள்ளது.

    தயவு செய்து யதார்த்தங்களை மட்டும் பேசுங்கள். அவை பயனுள்ளதாக இருக்கும். இதில் தீர்வே சொல்லாமல் பிழைகளை சொல்வது தவறாக உங்களுக்கு படுகிறது. பிழைகளை ஆராயாமல் தீர்வொன்றை நோக்கிச் செல்ல முடியாது. எல்லாமே தெரிந்தது என நினைத்ததால் , எல்லாவற்றையும் இழக்க வேண்டி வந்தது. அவை இனியும் தொடர்வது தவறு.

    சிறீபதி சிவனடியார் அவர்களே! உங்கள் உதவி எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது என சொல்வீர்களா?

    Reply
  • மாயா
    மாயா

    //இது மீண்டும் இலங்கை மக்களை நாவலன் இனியொரு புதிய திசைகள் மூலமாக தொடர உள்ளன போல் தெரிகிறது.//

    ஒரே மதத்தில் இருப்பவர்கள் யதார்த்தமாக இருப்பார்கள். மதம் விட்டு மதம் மாறியவர்கள் தொல்லை தாங்க முடியாது. உதாரணத்துக்கு கத்தோலிக்கரை யதார்த்தவாதிகளாகவும் அல்லேலூயாகாரர்களை குதர்க்கம் கதைத்து தொல்லை கொடுப்போராகவும் நான் சொல்வேன். இப்போது அதை மாற்றிவிட்டேன். உண்மையான புலிகள் நிலமைகளை புரிந்துள்ளார்கள். வேறு இயக்கங்களில் இருந்து புலிகளோடு இணைந்தவர்கள் தொல்லை தாங்க இயலவில்லை சாமி.

    இனி இன்னொரு இடத்தில் தொங்க முடியாததனால்> இப்படி நடந்து கொள்கிறார்கள் போல இருக்கிறது. பச்சோந்திகள்.

    Reply
  • h.virumandi
    h.virumandi

    இந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் பக்க சார்புடையவனாகவே இருக்கின்றன.

    Reply
  • மாயா
    மாயா

    //இந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் பக்க சார்புடையவனாகவே இருக்கின்றன. – h.virumandi //

    உண்மைதான். எங்களுக்குத் தெரிந்ததைத்தானே எங்களால் எழுத இயலும். உங்கள் கருத்தையும் எழுதுங்க. பாலன்சாகிடும்.

    Reply
  • BC
    BC

    விருமாண்டியின் பழக்க தோசம். புலிக்கு ஆதரவாக மட்டுமே எழுத முடியும். சில சமயம் கௌரவமாக அதை தேசியத்துக்கு ஆதரவாக எழுதுவது காலத்தின் கட்டாயம் என்பார்கள்.

    Reply
  • மாதவன்
    மாதவன்

    நண்பர்களே கோபம் கொள்ளாதீர்கள் உங்கள் விஷயங்களில் அத்து மீறி தலையிடும் உரிமை எனக்கு இல்லை. ஒரு தமிழகத் தமிழனாகச் சொல்கிறேன். எழிலன், யமுனா, செயப்பிரகாசம் உள்ளிட்ட தமிழக ஆட்களின் எண்ணம் என்பது இந்த மாநாட்டை முருகபூபதி சர்வதேச எழுத்தாளர் மாநாடு என்று நடத்தக் கிளம்பியதுதான். இந்த மாநாட்டில் நீங்கள் எப்போது தமிழக எழுத்தாளர்களையும் இதனுள் அடக்குகிறீர்களோ அப்போதே இந்த எதிர்ப்பு நியாயமாகப்படுகிறது. பெரியண்ணன்கள் ஈழப் பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று நீங்கள் 100 சத உண்மை. ஆனால் பெரியண்ணன்களின் பிராண்டட் வேல்யூவ்களை முருகபூபதி பயன்படுத்த நினைப்பது சரியா? இப்ங்கு வந்த பின்னூட்டங்களிலெயே நேர்மையான பின்னூட்டம் இதுதான் // //Kumar on October 31, 2010 7:40 pm இந்தக’ கூட்டறிக்கையை வாசிக்கும் முருகபூபதி இனிமேலாவது விழித்தெழுந்து இந்திய மாயையிலிருந்து விலகிவந்து ஈழத்துத் தமிழ் படைப்பாளியாக தனித்துவமாக இயங்குவாராக. இனிமேலும்> ஒவ்வொரு கட்டுரையிலும் இன்றளவுவரை தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு விசுவாசியாகவும்> அவர்களை அறிந்து தொடர்புகொள்வதே பேரின்பம் என்றிருந்தவருக்கு தமிழ்நாடே எதிர்த்து அறிக்கை விட்டிருப்பது சீரணிக்க கஷ்டமாகத்தான் இருக்கும். சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா என்றிருப்பதை> சர்வதேச ஈழத்தமிழ் எழுத்தாளர் விழா என்று மாற்றியிருந்தால் இந்த இந்திய தலையீடு ஏற்படத் தேவையிருந்திருக்காது.// சர்வதேச ஈழத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று அறிவித்து செய்த பிறகு எழிலனோ, யமுனாவோ, செயப்பிரகாசமோ தலையிட்டு இதை எதிர்த்தால் அவர்களை கண்டிக்கலாம்தானே? அதுவன்றி இப்போது அவர்கள் இதை எதிர்ப்பதில் என்ன தவறு?

    Reply