தமிழ் நாட்டில் தொங்கும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் : விமல் குழந்தைவேல்

Vimal_Kulanthaivelஇலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் தனது நாவல்கள் மூலம் அறியப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இவர் தொடர்ந்தும் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். இவர் 2002 யூனில் தேசம் சஞ்சிகையின் இதழ் 8ல் எழுதிய இக்கட்டுரையை மீள்பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை மீள்பிரசுரம் செய்கிறோம். கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக தமிழக எழுத்துலகின் இலக்கியத் தசைகளாகத் தொங்கும்  புலம்பெயர் எழுத்தாளர்களின் கையெழுத்துப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் பொருத்தம் கருதி இக்கட்டுரை மீள்பதிவிடப்படுகிறது.

._._._._._.

Vimal_Kulanthaivelமருத்துவர்களாகவும் பொறியியலாளராகவும் இன்னும் பல துறை படிப்பாளிகளாகவும் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுள் எழுத்தாளர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிக் கூறியவர் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

ஈழத்திலும் சரி புலம்பெயர் நாட்டிலும் சரி எப்படிப்பட்ட திறமையான எழுத்தாளனையும் அங்கீகரிக்கவோ முன்மொழியவோ தமிழ்நாட்டு இலக்கிய வாதிகளையே அன்றிலிருந்து இன்றுவரை நம்பி இருக்க வேண்டிய கட்டாய நிலையிலேயே ஈழத்து இலக்கியம் இருக்கின்றது. எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் நம் இலக்கியச் சிங்கங்களிடம் இன்னும் இல்லாததே இதற்குக் காரணம்.

டொமினிக் ஜீவா, சிவத்தம்பி போன்றோர் கூடத்தங்களை அங்கீகரித்துக் கொள்ள தமிழ் நாட்டைத் தான் நாடியிருக்கின்றார்கள். அந்த நாடல் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி, பாலுமகேந்திரா, சுந்தரராமசாமி, அனுராதா ரமணன், வைரமுத்து, மேத்தா ரகுமான், சிவசங்கரி இன்னும் இவர்களைப் போன்ற தமிழ் நாட்டில் பிரபல்யம் ஆனவர்களின் முன்னுரைகளைப் பெற்றுத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இன்று வரை அறியப்படாமலும் அறிமுகப்படுத்தப்படாமலும் அங்கீகாரம் பெறாமலும் இருக்கும் புலம் பெயர் எழுத்தாளர்களை தமிழ்நாட்டு இலக்கியம் அறியத் தேவை இல்லை. தாய் நாட்டுச் சகோதரர்களாவது கண்டு கொள்ளலாமே.

தமிழ் நாட்டில் அரசியலும், இலக்கியமும், சினிமாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிக் கொள்ளாமல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தவரை அப்படியல்ல. எழுத்தாளனாகப் பெயர் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு தானும் ஆதரவாளனென்று ஆட்டுமந்தை பின்னால் ஓடும் குட்டி ஆடு போல ஓட வேண்டி இருக்கின்றது. வேற்று மொழி எழுத்தாளர்களின் பெயர்களை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது. தமிழ் நாட்டு எழுத்தாளர்களை இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடு வதை கண்டு ரசிக்க வேண்டி இருக்கின்றது. ஈழத்து இலக்கியத்தைக் கட்டிக்காக்க வந்த இந்த இலக்கி யக் காவலர்களை எத்தனை நாளைக்குத் தான்  ஒத்தூதிச் செல்ல முடியும்.

இலக்கியவாதிகள் போகட்டும் புலம்பெயர் சஞ்சிகைகள் மட்டுமென்ன. அவர்களுக்கும் இந்திய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தான் தேவைப்படுகின்றன. அல்லது மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கட்டுரைகளும் தான் தேவைப்படுகின்றன. இல்லையெனில் தங்களுக்குப் போட்டியான இன்னொரு சஞ்சிகையினரின் வாழ்க்கை அந்தரங்கங்களை கொஞ்சக் காலத்துக்கு விமர்சனம் செய்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம்  செய்து அவர்களை சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதை கொழும்புப் பத்திரி கைகள் (தமிழ்) விரும்புவதில்லையாம் என்பதே தனிச்சோகமான செய்தி. என்ன செய்வது அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் அப்படி. தமிழ்நாட்டு சினிமா பற்றிய கவலையைத் தவிர அந்த வாசகனுக்கு வேறென்ன கவலை?

சரி இவைகள் தான் இப்படியென்றால் புலம்பெயர் எழுத்தாளனின் இன்னொரு புலம்பல் தன்னை சக புலம்பெயர் எழுத்தாளனே கண்டு கொள்வதில்லை என்பது தான். இதற்கு பல காரணங்கள் உண்டு. புலம்பெயர் எழுத்தாளர்களுள் மூத்த எழுத்தாளர்கள் என்றொரு வர்க்கம் உண்டு. அவர்களில் சிலர் தங்களுக்கென்றொரு வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வைத்திருக்கின்றார்கள். தாங்கள் எழுதுவதையும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் எழுதுவதையும் தவிர இவர்கள் வேறு எதுவுமே வாசிப்பதில்லை. ஜனரஞ்சக பத்திரிகைகள் வாசிப்பதில்லை என்பார்கள். தங்கள் வீட்டுமேசையில் எப்போதும் அந்தப் பத்திரிகைகள் இருக்கும். குறிப்பிட்ட சில பத்திரிகைகளில் தங்களின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கும். கேட்டால் தாங்கள் அனுப்பவேயில்லை எப்படியோ வந்திருக்கின்றது என்பார்கள். இந்தப் பின்கதவு கௌரவ இலக்கியவாதிகள் புதிய எழுத்தாளர்களிடம் நெருங்கிப் பழகுவதை கௌரவக் குறைவாக எண்ணுகின்றார்கள். இந்த நிலையில் புலம்பெயர் புதிய எழுத்தாளனின் ஆக்கத்தை இன்னொரு புதிய புலம்பெயர் எழுத்தாளன் கண்டும் காணவில்லை என்று கூறினால் இதை யாரிடம் சொல்லி அழுவது.

 ‘உன்னுடைய கதையொன்று பத்திரிகையில் வந்திருக்கே தெரியுமோ?’
 ‘ஆ……அப்பிடியே எப்பிடிக் கதை’
 ‘நேரமில்லை நான் வாசிக்கவில்லை’
 இது தான் புலம்பெயர் எழுத்தாளனுக்குரிய பண்பு.

இவைகள் எதுவும் தேவையில்லை. ஒரு எழுத்தாளன் அறியப்பட நல்ல விமர்சனம் ஒன்றே போதுமானது. அதற்குக் கூட ஆளில்லை. விமர்சனம் என்று அழைத்தால் மேடைச் சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாகவும் முகஸ்துதிக்காகவும் எழுத்தாளனை புகழ்ந்து தள்ளிவிட்டு மேடையில் இருந்து இறங்கி கூட்டம் சேர்த்து குறைசொல்வதற்கு என்றே நமது விமர்சகர்கள் பலர் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் பயம்.

குறைகளைச் சொல்லி விமர்சனம் செய்தால் விளம்பரமாகி சல்மான் ரூஷ்டியாகி விடுவானோ என்ற காழ்ப்புணர்ச்சிப் பயம். இந்த விதிகளைத் தாண்டியும் துணிந்து விமர்சனம் செய்பவர்கள் என்றால் லண்டனில் ஜமுனா ராஜேந்திரனையும், மு.நித்தியானந்தனையும் மட்டுமே குறிப்பிட வேண்டும். ராஜேந்திரனைப் பொறுத்தவரை சத்தியஜித்ரேயையும், பத்மா சுப்பிரமணியத்தையும் தவிர வேறு யாரையும் படைப்பாளிகள் என்றே சொல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் நிற்கிறார். ஆனாலும் அவரின் விமர்சனம் காத்திரமானதும், தேவையானதும் என்பது உண்மை. மு.நித்தியானந்தன் அப்படியல்ல. நல்ல படைப்பாளிகளை இனம்கண்டு அவர்களிடத்தில் உள்ள குறைகளை நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் சுட்டிக்காட்டிவிட்டே செல்வார். என்ன பயமோ பயமுறுத்தலோ தெரியாது. எந்தக் குளிரிலும் முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட உணர்ச்சிவசப்பட்டு இவர் குறைகளைக் கூறி விமர்சனம் செய்வதே ஒரு தனி அழகு தான்.

ஒரு விமர்சனம் படைப்பாளியை வெளிக்கொணரும் விளம்பரம் என்பது உண்மையே. அதற்காக அது புகழ்ச்சி விமர்சனமாக மட்டும் இருந்துவிடக் கூடாது. புகழ்ச்சியை விட படைப்பாளியின் படைப்பில் உள்ள குறைகளைக் குற்றம் கூறியும் கருத்துக் கட்டுடைப்புச் செய்தும் செய்யும் விமர்சனத்துக்கு வலு அதிகம். அந்த சம்பிரதாயங்கள் கூட ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தில் மிகமிகக் குறைவு.

அரவிந்தனின் கவிதைத் தொகுதி வெளியீட்டுக் கூட்டத்தில் அரவிந்தன் கழுத்தில் விழுந்து கொண்டிருந்த புகழ்ச்சி மாலையை தடுத்தாட்கொணரவும் கவிதைத் தொகுதியின் கருத்தைக் கட்டுடைப்புச் செய்யவும் சபையிலிருந்து எழுந்த சேனன் அருகிலிருந்தவர்களால் தடுத்தாட் கொள்ளப்பட்டார் என்பது தான் உண்மை.

புலம்பெயர் ஈழத்து இலக்கியத்தில் விமர்சனச் சுதந்திரம் இல்லை. சபைப்பேச்சுச் சுதந்திரம் இல்லை. தப்பித்தவறி சேனன் போன்றவர்கள் எழுந்தால் சபைகுழப்பி, தறுதலை என்ற பெயர்களுடன் தான் உட்காருகிறார்கள். தமிழ் இலக்கியம் என்ற வகையில் தமிழ் நாட்டைத்தான் நாம் உதாரணத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அங்கு இலக்கிய விமர்சனச் சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது. எழுத்தாளனின் படைப்பை எரிக்கவும் எதிர்க்கவும் அவனை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் கூட விமர்சனம் என்ற வழிமுறை உதவுகின்றது. புலம்பெயர் இலக்கியத்தில் அப்படியல்ல. இருந்தும் விதிவிலக்காக பிரான்ஸில் மட்டும் வருடத்துக்கு ஒரு தடவை நான்கு பெண்களாவது சந்தித்து குய்யோ முய்யோ என்று விமர்சனக் கத்தல் செய்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோசம்.

ஈழத்திலிருந்து அடிக்கடி எழுத்தாளர்களென்றும் இலக்கியவாதிகளென்றும் பலர் வருகின்றார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களை அவர்கள் அறிந்தவர்களும் இல்லை. அவர்களை புலம்பெயர் எழுத்தாளர் பலர் அறிந்திருப்பதும் இல்லை. அவர்கள் கூட வந்ததும் வராததுமாக

நீங்கள் எல்லாம் ஏன் இந்தியாவுக்குப் போய் எங்கள் இலக்கியத்தை விற்கின்றீர்கள் என்கிறார்கள். சரி உங்களிடமே வருகிறோம் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்றால் ஆழம் தெரியாமல் காலைவிட்டு எங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள். காரணம் அவர்களிடத்தில் அறியப்படவில்லை. அறியப்படாததற்கு காரணம் ஈழத்து இலக்கிய விமர்சகர்களின் காழ்ப்புணர்ச்சி.

விமர்சனம் எழுத்தையும் எழுத்தாளனையும் வெளிப்படுத்தும், தெரியப்படுத்தும். அதற்குரிய ஆட்கள் தான் நம்மிடத்தில் இல்லை. விமர்சனமும் ஓர் இலக்கியம் தான். அந்த இலக்கியம் ஈழத்தில் குறைவு. தன்னை அங்கீகரிக்காத ஒருவரை மேடையேறி பூதம் என்று சொல்லி அவரின் உருவ அமைப்பை கேலி செய்யும் விமர்சனப்பாணியை கைவிட்டுவிட்டு நல்ல விமர்சனம் மூலம் புதிய புலம்பெயர் எழுத்தாளர்களை வெளிப்படுத்தும் பரந்த மனம் வேண்டும். இல்லையேல் கடந்த காலங்கள் போல் இனிவரும் காலங்களிலும் தமிழ் நாட்டின் பிரபல்யமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டு தான் அலைய வேண்டும்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Kumar
    Kumar

    ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகள் தமிழகத்தை முற்றுமுழுதாக நிராகரித்துவிடமுடியாது. தமிழகத்தின் சனத்தொகை விகிதாசாரத்துடன் ஈழத்துத் தமிழ் படைப்பாளிகளை தமிழகப்படைப்பாளிகளுடன் ஒப்பிடுவது எம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் செயல். அவர்களிடம் எமது படைப்பகள் சென்றடையவேண்டுமென்று விரும்புவதில் தவறில்லை. ஆனால் அவர்களிடம் அடிமையாவதும் அவர்களை எமது ஆபத்பாந்தவர்களாக ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ள முடியபது.

    ஈழத்துப் படைப்பாளிகளையும்> ஈழத்து எழுத்தாளர்களையும் அவரவர் கொள்கைகளில் நின்று வளரப் புலம்பெயர் தமிழர் நிதிரீதியாகவும்> படைப்புகளை ஆதரித்தும் உதவிவசய்யவேண்டும்.
    சாத்தியமாகும் வழிகளில் எல்லாம் எமது படைப்புக்களை இலங்கையில் அச்சிட முன்வரவெண்டும். சில நூல்களை அதன் உள்ளடக்கம்கருதி இலங்கையில் அச்சிட முடியாது அவற்றை வேண்டுமானால் தமிழகத்தில் அச்சிட்டுப் பெற்றுக்கொள்ளலாம். ஏன் மலேசியாவில் சிங்கப்பூரில் கூட அச்சக்ஙகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் அவர்கள்கூட தமிழகத்தை நாடுவது கவலைக்குரியதே.

    ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை இங்பக வருவித்து வாசித்து விமர்சனங்களை மேற்கொள்ள எந்தவொரு எழுத்தாளரல்லாத சாமானிய வாசகன் முன்வருவானா? இன்று வாசிப்பவர்கள் எல்லாரும் தாமும் எழுத்தாளர்களாகலாம் என்றிருப்பதால் வாசகர்களைவிட எழுத்தாளர்களே அதிகமாகி வருகிறார்கள்.
    இந்நிலை மாறவேண்டும். பல முனைப்புகளில் ஈழத்துப் படைப்பிலக்கியவாதிகளை நாம் அறிமுகம் செய்ய முன்வரசவண்டும். குடத்துள் விளக்காக இருக்கும் அவர்களை குன்றின் மேல் தீபமாக்கும் மனஉணர்வு புலம்பெயர் தமிழனுக்கு வராதவரை விமல் குறிப்பிடுவதுபோல தமிழ்நாட்டின் வேட்டிக்கரைகளில் தொங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

    தமிழக்ப் படைப்பாளிகளை விட்டால் யாரும் உலகில் எழத்தாளர்கள் இல்லை என்று திரியும் பத்மநாப ஐயர் போன்ற தமிழக ஏஜன்டுகள் திருந்தவேண்டும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    இலங்கயிலும் தமிழகத்திலும் “எழுத்து” மூலம் வாழ முடியாதநிலைமை உள்ளது. ஜெயகாந்தன் அதற்கு விதிவிலக்கு!

    இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் தங்களுக்கு எழுதுவதை ஒரு குஞ்சமாகவே கருதுகிறார்கள். எழுதுவதை ஒரு “அடிஷனல்” குவாலிபிகேஷனாகவே கருதுகிறார்கள். புலம் பெயர்ந்தவர்கள் இலக்கியம் என்ற பெயரில் புலிப்புராணமே பாடுகிறார்கள். தமிழ் ஈழம் “சரி” என்ற கருத்தின் அடிப்படையிலேயே எழுத்துக்கள் அமைகின்றன. இன்று அந்த “ஈழம்” பொய்த்துப் போன பின்னரும் விடாக் கண்டன்களாக அதே சூனியத்தை நோக்கியே எழுத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் நடைபெறும் எந்த “யதார்த்த” நிகழ்வினையும் எழுத்துக்களில் காணாத போது வாசகனுக்கு எரிச்சலே உண்டாகிறது.

    வெளினாடுகளில் இலவசமாக பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளில் இன்றுள்ள உண்மை நிலமைகளை பூதக் கண்ணாடி கொண்டு தேடவேண்டிய அவலமாக உள்ளது.

    விமர்சனம் என்பது தமிழர்களுக்கு எப்பொழுதும் பிடிக்காத விஷயம். கம்பியூட்டர் மூலம் ஒரு புத்தகத்தை தயாரித்து வெளியீட்டு விழா நடத்துவதோடு அந்தப் புத்தகத்தின் கதை முடிந்துவிடுகிறது. புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கி வாசிக்கும் ஒருவன் அந்த எழுத்தாளரின் தொலைபேசியைக் கண்டு பிடித்து ஏதாவது பேசத் தொடங்கினால் “நான் இப்ப பிஸி, பிறகு கதைப்பம்” என்ற கதையோடு புத்தகத்தின் கதையே முடிந்து விடுகிறது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களில் “2ஆம் பதிப்பு” என்பதைக் காணுவது வெகு கஷ்டம்!

    கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக “புலிகளின் இராணுவ யுக்திகள்”, “புலிகளின் இராஜதந்திரம்”, “தமிழ் துரோகிகள்” என்றெல்லாம் “யவனராணி” பாணியில் பரணி பாடியவர்கள் திடீரென்று காணாமல் போயுள்ளதுடன் பாடிய பரணியை என்ன செய்வது என்று அல்லாடுகிறார்கள். கனடாவில் “பிரபாகரன் ஆண்டு” என்று காலத்தை காண்பித்து வியாபரம் நடத்திய “பிரதம ஆசிரியர்” மே 19 க்கு அடுத்த வெள்ளி வரவேண்டிய பத்திரிகையையே மூடி விட்டு இப்பொழுது “வீடு” விற்பனையில் இறங்கியுள்ளார். முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எந்தப் பத்திரிகை ஜாம்பவானும் வாய் திறக்கக் காணோம்!

    இந்த பத்திரிகை வியாபாரிகளின் கொள்கைகள் மாறாத வரையில் “ஈழத்து” இலக்கியம் என்பது கானல்நீரே!

    இந்தப் புத்தகங்களைப் படிப்பதை விட ஒரு டாலருக்கு மம்முட்டியின் அல்லது மோகன்லாலின் அல்லது ஜெயராமின் மலையாள சினிமாவை பார்ப்பது எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது! குறைந்தது ஒரு “கதை” யாவது ரசித்த திருப்தி கிடைக்கும்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அதேபோல இந்த புத்தகங்களை அச்சடிக்க ஏன் இந்தியா போறீங்கள் என்று புலம்பெயர் தமிழர் அச்சகங்கள் கேட்கின்றன! இந்தியாவில் மலிவு என பதில் கதை சொல்வார்கள் ‘எழுத்தாளர்கள்’

    Reply
  • N.Selvarajah, Noolthettam
    N.Selvarajah, Noolthettam

    இந்தியாவில் புத்தகம் அச்சிடுவது மலிவு என்பது ஒரு பிரமை மட்டுமே. இந்தியாவில் நீங்கள் அச்சிடும் புத்தகத்திற்கு முழுக்காசும் கொடுத்தாலும்> புத்தகங்கள முழுமையாக தாயகத்திற்கோ புலம்பெயர் நாடுகளுக்கோ எடுப்பிக்கும் செலவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இலங்கையில் அச்சிடப்படும் புத்தகங்கள் தொடர்பாக பதிப்பகங்களின் நிலைப்பாட்டைப் பாருங்கள்:

    குமரன் பதிப்பகத்திடம் அறிவுசார் இலக்கியங்களை (ஆக்க இலக்கியங்களான கதை கவிதை நாவல் அல்லாத) வழங்கினால் அவர்கள் அதனைத் தமது செலவில் அச்சிட்டு நூலகங்களுக்கு விநியோகிக்கிறார்கள். அதில் ரோயல்டியாக உங்களுக்கு 50 பிரதிகள் தருவார்கள். அவர்களிடம் மேலதிகமாக காசு கொடுத்து- அதுவும் கோஸ்ட் பிரைசில் (நிகர விலையில்) வாங்கலாம்.

    ஆக்க இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்து நூல்களையும் அச்சிட்டு அவர்களே கணிசமான ஒரு பகுதியையும் நூலகங்களுக்கு விநியோகித்து விடுவார்கள். இத்தகைய பல வசதிகள் உள்ளன. சோகம் என்னவென்றால்> எவரும் இலங்கைப் பதிப்பகங்களிடம் புத்தகம் அச்சடிப்பது பற்றிக் கதைத்தபின் இந்தியப் பதிப்பகங்களின் விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முன்வருவதில்லை. எம்மிடையே உள்ள ஏஜன்டுகளின் வாய்ப்பந்தல்களை நம்பி தமிழகத்தில் அச்சிடுவது தமது பிரசுரத்திற்கு பெருமை என்று நம்புவொரும் எம்மிடையே இருக்கிறார்கள்.

    சேமமடு பொத்தகசாலை (பத்மசீலன்)> சிந்தனை வட்டம் (பீ.எம்.புன்னியாமீன்)> யுனி ஆர்ட்ஸ் போன்றவர்கள் தமக்கென சில வசதிகளை வைத்திருக்கிறார்கள். அதனை நாம் பயன்படுத்தலாம்.

    Reply