”சிறுபையன் என்று என்னை தாக்கி பேசினர்” – கொட்டகலையில் ஜீவன் தொண்டமான்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளின் படி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற  தமிழ்வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ள நுவரெலிய தேர்தல் மாவட்ட வேட்பாளராக ஜீவன் தொண்டமான் அவர்கள் சாதனை படைத்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக களமிறங்கியிருந்த ஜீவன் தொண்டமான்  சுமார்  109,155 வாக்குகள் அபற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் கொட்டகலையில் வைத்து இன்று (07.05.2020) ஊடகங்களிடம் தன்னுடையை வெற்றி பற்றிய விடயங்களை முன்வைத்திருந்தார்.  இதன்போது “புதிய மலையகத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் எனக்கு பேராதரவை வழங்கியுள்ளனர். எனவே, மக்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனக்கு கிடைத்த வெற்றியை மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நுவரெலியா மாவட்டத்தையும் கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாக இருந்தது. தந்தையும் இதனையே கூறியிருந்தார். அந்தவகையில் மாவட்டத்தை கைப்பற்றி விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்த பெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாமை பெரும் கவலையளிக்கின்றது. ஆனால் எனது தந்தையை நேசித்த மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். அது போதும்.

தேர்தல் காலங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிறுபையன் என்றுகூட என்னை தாக்கி பேசியிருந்தனர். ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து இளைஞர்களும், மக்களும் பேராதரவை வழங்கியுள்ளனர்.

புதியதொரு மலையகத்தை உருவாக்க முடியும் என மக்கள் நம்பியுள்ளனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். சொல்லில் அல்லாமல் எனது சேவைகளை செயலில் காட்டுவதற்கே விரும்புகின்றேன்.

நான் முதல் முதலில் பாராளுமன்றம் செல்கின்றேன். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு. அதனை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரமும் செய்தேன். நுவரெலியா மாவட்ட மக்கள் மட்டுமல்ல வெளி மாவட்ட இளைஞர்களும் எமக்கு பேராதரவை வழங்கினர்.

இதனால்தான் கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஆசனங்களை பெறமுடியாவிட்டாலும் எமக்கான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எனவே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு வாக்களித்த அதேபோல் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொள்கை அடிப்படையிலேயே எமது அரசியல் பயணம் தொடர்கின்றது. கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு இடமில்லை. வெற்றியின் பங்காளியாக எமது மக்களும் மாறியுள்ளனர். எனவே, மாற்றத்தை நோக்கி பயணிப்போம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *