ஒரு லட்சத்தைக் கடந்தது பிரேசில் கொரோனா உயிரிழப்பு !

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது, நோய் தொற்று 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 13 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 543 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் 841 பேர் உயிரிழந்தனர், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

உலகளவில் உயிரிழப்பிலும், பாதிப்பும் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் 51.49 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.65 லட்சம் பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பிலும், பாதிப்பிலும் பிரேசில்  2-வது இடத்தி்ல் இருக்கிறது.3-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில்கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.52 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏறக்குறைய 4 மாதங்களில் பிரேசிலில் ஒரு லட்சம் பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாள்தோறும் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில் “ கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தாற் போல் 2-வது இடத்தில் இருக்கிறோம். நாட்டில் போதுமான அளவு பரிசோதனையை அதிகப்படுத்தாதது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதது உயிரிழப்புக்கு காரணமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரேசிலில் உள்ள தன்னார்வலர்கள், மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், ‘‘பிரேசிலில் கொரோனாவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தார்கள் என்பது மிக்ககுறைவாகும். உண்மையான தகவல்களை அரசு மறைக்கிறது’’ எனத் தெரிவி்க்கின்றனர்.

பிரேசில் ஜனாதிபதி  ஜெர் போல்சனாரோ கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கியமான முக்ககவசம் அணிவதில் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தார். இதனால் கரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் இல்லாமலேயே அதிபர் போல்சனாரோ பங்கேற்று வருகிறார்.

பிரேசிலில் கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது குறித்து அதிபர் போல்சனாரோ கூறுகையில் “ உயிரிழந்தவர்கள் அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். விரைவில் கரோனாவை தோற்கடிக்க வழியேத் தேடுவோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், மருத்துவ வல்லுநர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகையில் “ மருத்துவக் கட்டுப்பாடுகளுக்கு அரசு தரப்பிலிருந்தே போதுமான ஒத்துழைப்பு இல்லை. ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் விரைவாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள். கடைகள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டமாகச் செல்கிறார்கள்” எனக் கவலைத் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *