காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

israeli-aircraft.jpg
பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான வான் தாக்குதல்கள் மூலமான படுகொலைகளைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல் மீதும், உலக பொலிஸ்காரன் அமெரிக்கா மீதும் மிக உச்சக்கட்ட சீற்றம் கொண்டவர்களாக முஸ்லிம் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் தமது உணர்வலைகளை வெளிப்படுத்தினர். பாலஸ்தீன காஸாப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற கொடூர செயல்களையும் தாக்குதல்களையும் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கான குத்பா பிரசங்கங்கள் இடம்பெற்றன.

அதேவேளை, நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் காஸாவில் இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தால் உயிர்நீத்த மக்களுக்காக ஜனாஸாத் தொழுகை நிறைவேற்றப்பட்டது. நேற்று சுபஹு தொழுகையின் பின் பாலஸ்தீன காஸா மக்களின் இன்றைய இக்கட்டை நீக்கக்கோரிய விசேட துஆ பிரார்த்தனைகளும் பள்ளிவாசல்களில் இடம்பெற்றன.

நிந்தவூரில்…..

நிந்தவூரில் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இது தொடர்பாக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மௌலவி ஏ.எல். இமாம் தலைமையில், ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைக்கும் மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தன கொலைவெறியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மேலும், மௌலவி இமாம் காஸா மக்களுக்காக விசேட துஆ பிரார்த்தனை நடத்தியதுடன், மரணித்த மக்களுக்காக ஜனாஸாத் தொழுகையையும் நடத்தினார்.

கல்முனைக் குடியில்

இத்தகைய பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாகவும் இடம்பெற்றது. கல்முனைக்குடி முஸ்லிம் ஜனாஸா நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திலும் பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு சுலோக அட்டைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்ததுடன், உணர்ச்சிபூர்வமான கோஷங்களையும் எழுப்பினர். அத்துடன், இஸ்ரேல் தேசியக் கொடியும், இஸ்ரேல் பிரமதரின் கொடும்பாவியும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    அநியாயங்களும் அக்கிரமங்களும் உலகின் எப்பகுதியில் நடந்தாலும் அவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கான மன உறுதியை இஸ்லாம் தருவது போற்றப்பட வேண்டும். பலஸ்தீன மகக்ளுக்காக உலகின் ஒரு மூலையிலிருந்தேனும் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கும் முஸ்லிம் மக்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்த எதிர்ப்புணர்வில் இஸ்லாமிய சகோதரத்துவ அம்சம் உள்ளடங்கியிருந்த்தாலும் முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுடன், ஏகாதிபத்திய சக்திகளின் அக்கிரமங்களை எதிர்க்கும் அனைத்து தமிழ், சிஙகள முற்போக்காளர்களும் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். இலங்கைத்தீவின் சமூகங்களின் ஒற்றுமைக்கும் இதுவே வழிகாட்டியாக அமையும்.

    Reply
  • BC
    BC

    அநியாயங்களும் அக்கிரமங்களும் இஸ்லாம் மதத்தவருக்கு வேற்று மதத்தினரால் ஏற்பட்டால் மட்டுமே எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள்.மற்றும் படி ஒரு இஸ்லாம் அரசு தனது இஸ்லாம் மக்களை துன்புறுத்தினால் கண்டு கொள்ள மாட்டார்கள்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    அநியாயங்களும் அக்கிரமங்களும் உலகின் எப்பகுதியில் நடந்தாலும் அவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கான மன உறுதியை இஸ்லாம் தருவது போற்றப்பட வேண்டும். பலஸ்தீன மகக்ளுக்காக உலகின் ஒரு மூலையிலிருந்தேனும் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கும் முஸ்லிம் மக்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்த எதிர்ப்புணர்வில் இஸ்லாமிய சகோதரத்துவ அம்சம் உள்ளடங்கியிருந்த்தாலும் முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுடன், ஏகாதிபத்திய சக்திகளின் அக்கிரமங்களை எதிர்க்கும் அனைத்து தமிழ், சிஙகள முற்போக்காளர்களும் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். இலங்கைத்தீவின் சமூகங்களின் ஒற்றுமைக்கும் இதுவே வழிகாட்டியாக அமையும்.

    Reply