இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து சபாநாயகர் அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்துக்கொண்டார்.
சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரை சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்மொழிந்ததுடன். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை வழிமொழிந்தார்.
புதிய சபாநாயகரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் அக்கிராசனத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி மாத்தறை பிரதேசத்தில் பிறந்த மஹிந்த யாப்பா அபேவர்தன 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் அனுபவம் மிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்து வருகிறார்.
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாகப் பாராளுமன்றத்துக்குச் சென்ற இவர் 23 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வருகிறார்.
2020 பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனையை பிரதிநிதித்துவப்படுத்தி மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 80,895 விருப்பு வாக்குகளுடன் இவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்
1993,94 ஆண்டில் தென்மாகாண சபையின் முதல்வராக இருந்ததுடன், 1994-2001 ஆண்டு காலப் பகுதியில் மீண்டும் அப்பதவியை வகித்திருந்தார்.
இவர் சுகாதாரம், கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரியம், நீர்ப்பாசனம் மற்றும் ஊடக வளர்ச்சி, தொழில் மற்றும்வர்த்தகம், பாராளுமன்ற விவகாரம் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் இவர் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டில் கோப் குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியிருந்தார்
மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற அமைதிக்கான ஆசிய பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 50 வது சீ.பி.ஏ மாநாட்டிலும், 2005ஆம் ஆண்டு பீஜிங் நகரில் இடம்பெற்ற மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்
மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது 75 ஆவது வயதில் இலங்கையின் 21 ஆவது பாராளுமன்ற சபாநாகராக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தெரிவானார்.