புலிகளை தோற்கடித்து கிளிநொச்சி நகரை மீட்டெடுத்த படையினருக்கும் இராணுவத் தளபதிக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பொரளையிலுள்ள சோலிய மண்டபத்தில் அக்கட்சி சனிக்கிழமை காலை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி வெற்றியானது புலிகள் சந்தித்த பாரிய தோல்வியாகும். இந்த வெற்றியானது இந்த நாட்டிலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். இதனை ஈட்டித் தந்த படையினருக்கும் இராணுவத் தளபதிக்கும் ஜே.வி.பி. நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றது. மக்கள் தமது பொருளாதார சுமையை கூட பொருட்படுத்தாது புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டுமென தமது ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். புலிகளை வெல்ல முடியாது என்பது பொய் என ஜே.வி.பி.யே கூறியதுடன் எமது படையினரால் வெற்றிபெற முடியுமென்று தெரிவித்தோம்.
படையினரின் நடவடிக்கைக்கு ஜே.வி.பி. முழு ஒத்துழைப்பை வழங்கி சக்தியளித்தது. ஐ.தே.கட்சி, பொ.ஐ. முன்னணி ஆகிய கட்சிகள் இயலாதவிடயமென்று தெரிவித்தன. ஜே.வி.பி. மட்டுமே யுத்தம் மூலம் தோல்வியடையச் செய்ய முடியும் என்று கூறியது. ஐ.தே.கட்சி யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்து புலிகளுக்கு ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கியது. இதனை எதிர்த்து இல்லாமல் செய்வதற்கு உடன்படிக்கையை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றம் வரை நாம் சென்றோம். அதேபோல வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்று அதனை பிரித்தோம் என்பதை அரசுக்கும் மக்களுக்கும் ஞாபகப்படுத்துகின்றோம். யுத்தம் மூலம் புலிகளுக்கு எதிராக வெற்றி பெற்று வருகின்ற நிலையில் பேச்சுக்கு செல்வதை நாம் எதிர்க்கின்றோம். குறிப்பாக தமிழ் மக்கள் புலிகளின் இரும்புச் சப்பாத்தின் கீழ் துன்பங்களை அனுபவித்தனர். இந்த வெற்றி உண்மையில் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். எனவே, அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.