மரணித்த இரண்டு முற்றத்து மாமரங்கள் : யமுனா ராஜேந்திரன்

Scene_After_Schoolபாரிஸிலிருந்து உயிர்நிழல் இலக்கிய சஞ்சிகையைப் கொணரும், பிரான்ஸில் இயங்கும் ‘எக்ஸில் இமேஜ்’ அமைப்பு தயாரித்திருக்கும் இத்திரைப்படம், 2009 ஜனவரி ஜெர்மன் உலகத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வுபெற்றிருக்கிறது. தமிழகத்திலிருந்து வெளியாகும் உயிர்மை – ஜனவரி 2009 – இதழிலிருந்து இக்கட்டுரை நன்றியுடன் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது : தேசம்

I

ஈழச் சூழலை முன்வைத்து, போரில் குழந்தைகள் அல்லது குழந்தைப் போராளிகள் குறித்து நிறையக் குறும்படங்கள் வந்திருக்கின்றன. காலஞ்சென்ற இயக்குனர் ஞானரதன் இயக்கிய விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சிப் படமான காற்றுவெளி, தமிழகத்தைச் சேர்ந்த சகாதேவன் எழுதிய இயக்கிய சிலோன், கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த விமல்ராஜின் கிச்சான், மேற்கில் இயங்கும் ‘ஸ்கிரிப்ட்நெட்‘ அமைப்பின் அணுசரணையில் ஈழத்தின் வடக்கில் தயாரிக்கப்பட்ட ராகவனின் மூக்குப் பேணி மற்றும் கவுதமனின் செருப்பு என தொலைந்துபோன ஈழத்துக் குழந்தமை வாழ்வு குறித்து சொல்லப்படத்தக்க குறும்படங்கள் வெளியாகியிருக்கின்றன. மிகச் சமீபத்தில், 2008 ஆம் ஆண்டு இறுதியில் பிரான்சில் வாழும் பிரதீபன் எழுதி இயக்கிய என் வீட்டு முற்றத்தில் ஓரு மாமரம் எனும் குறும்படமும் வெளியாகியிருக்கிறது.

காற்றுவெளி போராளிச் சிறுவர்களுக்கும் பரந்துபட்ட ஈழத்துச் சமூக உறுப்பினர்களுக்கும் இடையிலான நேசமும் சந்தேகமும் பரிவுணர்வும் குறித்ததாக இருந்தது. சகாதேவனின் சிலோன் வானூர்தி எனும் குழந்தைகளுக்குச் சந்தோசமூட்டக் கூடிய ஒரு இயந்திரப் பறவை, எவ்வாறாக தமிழகக் குழந்தைகளுக்கு சந்தோசத்தையும் ஈழத்துக் குழந்தைகளுக்குக் கிலியையும் தருவதாக இருக்கிறது என்பதனைச் சித்தரிக்கிறது. கிச்சான் போரினால் பெற்றோரை இழந்த ஒரு சிறுவன் தொலைத்த கல்விப் பருவத்தைத் துயருடன் சித்திரிக்கிறது. பொம்மைத் துப்பாக்கிக்காக மூக்குப்பேணியை விற்கும் சிறுவனால் உயிர்துறக்கும் தாத்தாவின் அவலவாழ்வு குறித்துச் சொல்கிறது மூக்குப்பேணி திரைப்படம். செருப்பு ஒரு சிறுமியின் கனவாக இருக்க, அது கிடைக்கிறபோது அவளது கால்கள் கண்ணிவெடியில் சிதறிப்போவதனை செருப்பு படம் சொல்கிறது.

சிலோன்,கிச்சான்,மூக்குப்பேணி,செருப்பு என பெரும்பான்மையான குறும்படங்கள் போர்ச்சூழலால் இழந்துபட்ட குழந்தைமை குறித்துச் சொல்கின்றன. காற்றுவெளி மட்டுமே போராளிச் சிறுவர்களின் வாழ்வு பற்றி நேரடியாகப் பேசுகிறது. தவிரவும் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட இயக்குனர் ஜான் மகேந்திரனது தமிழகப் படமான ஆணிவேர் சிங்களப் படையினரிடம் சிக்கிப் பாலியல் வலலுறவுக்கு உள்ளாகும் பள்ளி மாணவியினது கதையை கிளைக் கதையாகக் கொண்டிருக்கிறது. என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் இழந்துபட்ட குழந்தமை, படையினரின் பாலியல் வல்லுறவு, போராளிச் சிறுமியின் அகால மரணம் என அனைத்தும் தழுவி தனது கதையைக் கொண்டிருக்கிறது.

II

குழந்தைகள் எந்தச் சமூகத்திலும் பெரியவர்களின் பராமரித்தலுக்கும் பாதுகாப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் உரியவர்கள். வளர்ந்த மனிதர்களின் நியதிகளையும் மதிப்பீடுகளையும், அவர்களது புன்னகைக்கிற முகத்திற்குப் பின் மறைந்திருக்கும் கள்ளங்களையும் குழந்தைகள் அறிவதில்லை. நிலவும் நிறுவன மதிப்பீடுகள் சமூக வரையறைகள் குறித்து குழந்தைகள் அறிவதில்லை. அவர்களைச் சீக்கிரமே ஒருவர் ஏமாற்றிவிட முடியும். தூக்க நிலையிலேயே அவர்களை மரணத்தின் வாசலுக்கு, அவர்களது விரும்பத்துடனேயே அனுப்பி விட முடியும்.

தமது சொந்த வாழ்வின் இருப்பும் பாதுகாப்பும் மகிழ்வும் குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில், மனமுதிர்ச்சியற்ற கையறு நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். வெகு சாதாரணமான ஒரு சூழலிலேயே குழந்தைகள் தொடர்பான இந்தச் ஜாக்கிரதை உணர்வை ஒரு சமூகம் கொண்டிருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.

ஆயுத மோதல்களில், போர்க் காலங்களில், உள்நாட்டுக் கலவரங்களில், நிலைமை இன்னும் சிக்கலானது. ஆயுதமோதலில் இருக்கும் இரு தரப்பாரும், அரசு மற்றும் போராளிகள் என இருதரப்பாரும், தம்மால் சுயஉணர்வுடன் முடிவெடுக்கவியலாத குழந்தைகள் தொடர்பாகப் பொறுப்பான அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டுமென சர்வதேசியப் போர்ச் சட்டங்கள் கோருகின்றன.

இதனை மீறுகிற அரசுகளும் இருக்கின்றன. போராளிகள் அமைப்புகளும் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக ஈரான் ஈராக் போரில் ஈரானியச் சிறுவர்கள் தற்கொலைப் போராளிகளாக இருக்க ஊக்குவிக்கப்பட்டார்கள். ஹிஸ்புல்லா மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற போராளி அமைப்புகள் சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்துகின்றன. மதத்தின் பெயரில் குழந்தைகள் போரில் ஈடுபட்டு மரணமுற்றால் அவர்கள் சொர்க்கம் ஏகுவார்கள் என மத அமைப்புக்களாலும், இனத்தின் பெயரில் மரணமுற்றால் அவர்கள் அந்த இன மக்களின் வெகுஜன நினைவுகளில் வாழ்வார்கள் எனப் இனப் போராட்டப் போராளிகள் அமைப்பினராலும் சொல்லப்படுகிறது.

குழந்தைப் போராளிகளைப் பற்றிப் பேசுவதும், தடம்புரண்ட மூன்றாமுலக விடுதலை இயக்கங்களின் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவதும், இப்போது சர்வதேசப் பதிப்புத்துறைக்கு உகந்த விற்பனைக்குரிய, விடுதலைப் போராட்டம் குறித்த விமர்சனம் கொண்டவர்களுக்கு மேற்கத்திய அரசு மற்றும் அரசல்லாத அமைப்புகளுடன் உரையாட, ஒரு தந்திரோபாயமான களமாக உள்ளது என்பதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எரித்திரியா, ருவாண்டா, ஈழம் என குழந்தைப் போராளிகளின் எழுத்துக்கள் சர்வதேசப் பொதுப்புல இலக்கியத்தில் இன்று நுகர்வுக்குரிய ஒரு இலக்கிய வகையினமாகவும் ஆகியிருக்கிறது. முன்னாள் போராளியொருவர் தமது ஜனநாயக அமைப்பில், மாகாணத்தின் முதல்வராக முடிகிறது என இலங்கை ஜனாதிபதி சர்வதேசிய அமைப்புக்களுக்கு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘முன்னாள் குழந்தைப்போராளி’ எனும் அடையாளம் இன்னாளில் கொலைகளில் ஈடுபடுவதற்கான ஒரு அறம்சார் முகாந்திரமாக எந்நாட்டிலும் என்னாளிலும் ஆகிவிடமுடியாது.

வியட்நாம், ஈரான், ஈழம் போன்ற போராளி அமைப்புக்களதும், சதாம் குஸைன் போன்ற முன்னாள் அரசுத் தலைவர்களாயிருந்து மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் குறித்தும், சர்வதேசப் பொதுப்புலத்தில் இலக்கியங்களும் திரைப்படங்களும் வெளியாகி வெகுவாக வாசிக்கவும் பார்க்கவும் படுகிறது. ஸத்தாம் சிட்டி (ஸத்தாம் ஆட்சியின் சித்திரவதை அமைப்பு), அனில்ஸ் கோஸ்ட் (ஜேவிபி கிளர்ச்சியின் போதான மனித உரிமை மீறல்கள்) போன்ற நாவல்களும், டெரிரிஸ்ட் (ராஜீவ் காந்தி படுகொலை), டேன்ஸர் இன் அப்ஸ்டேர்ஸ் (ஸைனிங் பாத் கொரில்லா தலைவர் அபிமல் குஸ்மானின் கைது நடவடிக்கை) போன்ற படங்களையும் குறிப்பிடலாம்.

சமவேளையில் அமெரிக்க பிரித்தானிய அரசுகள் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானிய இயக்குனர் வின்டர்பாட்டம் ரோட் டு குன்டனாமோ என்றும் திரைப்படம் எடுக்கிறார். ஆயினும் ஆக்கிரமிப்பு அரசுகளால், பொஸ்னியாவில் கொல்லப்பட்ட அகதிகள் கூட்டத்தின் மேலான தாக்குதல் குறித்தும், ஈராக்கில் கொல்லப்பட்ட சிறுவர்கள் குறித்தும், சிங்கள அரசினால் ஈழத்தில் கொல்லப்பட்ட செஞ்சோலைக் குழந்தைகள் குறித்தும் சர்வதேசியப் பொதுப்புலத்தில் இலக்கியமும் இல்லை. திரைப்படமும் இல்லை என்பதனையும் ஒரு தரவாகவேனும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் போராளிகள் பற்றிய பிரச்சினையை வெறுமனே போராளி அமைப்புக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கான கருத்துருவமாகப் பார்க்காமல், அதனையொட்டி சிறுவர்கள் சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள், அரசுகள் குறிப்பிட்ட இனமக்களின் குழந்தைகள் மீது தொடுக்கும் வன்முறை, அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் அவசரகாலங்களில் பதினெட்டு வயதுள்ளவர்களையும் போருக்குப் பாவிப்பது என அனைத்தும் தழுவியதாவே எடுத்துச் செல்லப்பட வேண்டும். மரணமுற்ற இலங்கைப் படையினர் ஒரவரது வயது பதினேழு என வெளியாகியிருக்கும் செய்தியும் கவனத்தில் கொள்ளத்தாக்கது.

அரசின் வன்முறைக்கு ஆளாகி மடிவதை விடவும், குண்டுமழை பொழியும் விமானங்களின் பெருநெருப்பில் கருகி மடிவதை விடவும், சின்னஞ் சிறுவயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி மடிவதைவிடவும், போராடி மடிவது மேல் எனப் பெற்றோர்களோ அல்லது அவர்களது ஒப்புதலுடன் அரசியலை வழிநடத்துகிறவர்களோ தேர்ந்து கொள்வார்களானால், அந்த நிலைபாட்டையும் துப்புரவாக எவரும் நிராகரித்துவிடமுடியாது. இத்தகைய அவதானங்களிலிருந்துதான் குழந்தைப் போராளிகள் மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி மடியும் குழந்தைகள் குறித்தும் நாம் பேச வேண்டியதிருக்கிறது.

ஈழத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பும் சரி, பிற விடுதலை அமைப்புகளும் சரி பதின்ம வயது சிறுவர்களையும் சிறுமிகளையும் போரில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் பதியப்பட்டிருக்கிறது. இதனை எந்தப் போராளி அமைப்பும் மறுத்ததும் இல்லை. ஈழப் போராட்டம் சர்வதேசிய மயப்படுத்தப்பட்டதையடுத்து கொள்கை ரீதீயாக விடுதலைப் புலிகள் அமைப்பு குழந்தைப் போராளிகளைத் தமது அமைப்பு ஏற்பதில்லை என்பதனை அறிவித்தாலும் கூட, தொடர்ந்து உலக மனித உரிமை அமைப்புகள் அந்தப் பிரச்சினை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருப்பதாகவே அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறது.

மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் பாலான கடுமையான விமர்சகர்கள் தற்போது குழந்தைப் போராளி எனும் பிரச்சினையை உரத்துப் பேசுகிறார்கள். இதன் எதிரொலியாக குழந்தைப் போராளிப் பிரச்சினையை இலங்கை அரசும் தம்மை எதிர்க்கும் போராளிகளுக்கு எதிராகப் பாவித்து வருகிறது. இத்தகையதொரு அரசியல் அறம்சார் விவாதங்களின் மத்தியில்தான் பிரதீபன் எழுதி இயக்கியிருக்கும் ‘என் வீட்டு முற்றத்தில் ஓரு மாமரம்’ எனும் குறும்படமும் வெளியாகி இருக்கிறது.

III

என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் படம் தமிழகத்தின் தேர்ந்த திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கேற்பில் உருவாகி இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் அர்ஸ், ராஜ்குமார் முறையே கலை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்றவற்றினை ஏற்றிருக்கிறார்கள். தொழில்நுட்பப் பாவனையில் சிற்சில காட்சி அமைப்புகளின் ‘அசல்தன்மை’ குறித்து நாம் விமர்சனங்கள் எழுப்ப முடியுமேயொழிய, இசைநேர்த்தி உள்பட, படத்தின் காட்சியூடகச் சொல்நெறி சார்ந்து, அதிகமான விமர்சனங்களை நாம் கொள்ள முடியாத அளவில், நேர்த்தியாக இந்தக் குறும்படம் உருவாகி இருக்கிறது.

படத்தின் கதைச் சுருக்கம் இவ்வாறானது : பள்ளி சென்று வீடு திரும்பும் வழியில், போர்ச் சூழலில் வாழநேர்ந்த இரண்டு பள்ளிச் சிறுமிகள் வேறு வேறு வகைகளில் மரணமடைகிறார்கள். ஒரு சிறுமி அரசபடைகளின் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டுக் கொல்லப்படுகிறார். பிறிதொரு சிறுமி போராளி அமைப்பினால் குழந்தைப் போராளி ஆக்கப்பட்டுக் காவலரண் பாதுகாப்பில், அரச படைகளுடனான மோதலில் கொல்லப்படுகிறார். இரண்டு சிறுமிகளும் கொல்லப்பட, இதில் ஒரு சிறுமியின் தம்பி தன்னந்தனியே, தனியனாய் பள்ளிக் கூடம் போய் மீண்டுவருகிறான். ‘அவனது எதிர்காலம் என்ன?’ என பார்வையாளராக நமக்கு நாமே கேட்கவிட்டு படம் முடிகிறது.

இந்தத் திரைப்படம் கதைக் கரு எனும் அளவில் அல்லது அரசியல் பிரச்சினை எனும் அளவில் ஈழத்திற்கு மட்டும் பொருந்துவது இல்லை. எந்த விடுதலைப் போராட்டம் நடக்கும் நாடுகளிலும் இருக்கும் பிரச்சினைதான். ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து, சர்வதேசிய மனித உரிமைகள் அமைப்புகள் வரை அனைத்து நிறுவனங்களும் இதனால்தான், போராடும் அமைப்பு, ஆக்கிரமிப்பு அரசு என இருதரப்பாரின் மீதும் இப்பிரச்சினை சார்ந்து சம அளவில் கண்டனங்களை வைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் அந்த வகையில் இருவகையிலுமான கடுமையான, சாதகமான எதிர்விணைகளை நிச்சயமாகவே தூண்டும் தன்மையைப் பெற்றிருக்கிறது.

படம் துவங்கும்போது, தேங்கி நிற்கும் குளத்து நீரில் தெரியும் நீல நிற மேகம் நகரும் ஆகாயத்தில், குளத்தின் குறுக்கே ஒரு பறவை சிறகடித்துச் செல்கிறது. அமைதியான குளத்தில் நீர்ச்சுருள்கள் விரிகிறது. நெருக்கமான அடர்ந்த பனை மரங்கள். ஆளரவமற்ற செடிகொடிகள் அடர்ந்த வெளி. நகரத்தின் வெகுதூரத்தில் உள்ளொடங்கிய, வீடுகள் இன்னும் தட்டுப்படாத தார்ப்பாதையில் இரண்டு வெள்ளையுடை அணிந்த சிறுமிகளும் ஒரு சிறுவனும் நடந்து வருகிறார்கள். சிறுவன் பாதையை விட்டுக் கொஞ்சம் விலகி எதனையோ காலில் எத்தித் தள்ள – ஈழத்தில் எங்கெங்கும் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் நம் ஞாபகத்தில் வருகிறது – அவனது அக்கா அவனைப் பிடித்து இழுத்து, தனது பாதையில் அவனை வைக்கிறாள்.

சிறுமிகளுக்கு இடையில் உரையாடல் நடக்கிறது. தமது பள்ளித் தோழியொருத்தியின் தந்தை கடத்தப்பட்டது நமக்கொரு செய்தியாகிறது. சிறுமியர் இருவரும் தமது கையில் மாமரக் கன்றுகளை வைத்திருக்கிறார்கள். ஆசிரியை அவர்களை வளர்க்கச் சொல்லி, சிறப்பாக வளர்த்த மாமரக் கன்றுக்கு அவர் பரிசும் தரப் போகிறார். தாம் வளர்த்த மாமரக் கன்றுகளை பள்ளிக் கூடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டு, ஆசிரியையிடம் காட்டிவிட்டு, மறுபடி அவர்கள் வீட்டுக்குத் திரும்ப எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். மிகச் சிறப்பாக வளர்த்ததற்கு ஒரு சிறுமிக்கு பரிசு கிடைக்கும் என அக்காச் சிறுமி சொல்கிறாள். ‘இப்போது மாமரத்திற்குப் பயனில்லையா?’ எனக் கேட்கிறாள் மற்றவள். தன் வீட்டு முற்றத்தில் அதனை விதைக்கப் போவதாகச் சொல்கிறாள் அக்காச் சிறுமி. இதுவும் நமக்கொரு செய்தி. அடுத்த நாள் ராணுவம் பள்ளியை மூடச்சொல்லி உத்தரவிட்டிருப்பதால், அவர்களுக்கு நாளை பள்ளி இல்லை என்பதும் நமக்குச் சொல்லப்படுகிறது.

சந்தியில் இரு புறமும் பிரியும் பாதைகளில், அக்காவும் தம்பியுமாக ஒன்றிலும், தனித்த சிறுமியாக ஒருத்தி பிறிதொன்றிலும் பிரிகிறார்கள். குழந்தைகளின் கள்ளமின்மையும், அவர்களது திட்டமற்ற எதிர்காலமும் குறித்த நேசபூர்வமான காட்சிகள் இவை. சுற்றிலும் தனித்த வெளியில் இந்தப் பிஞ்சுகளின் உலகத்தை அதிர்ச்சிகரமாக ஊடறுப்பதாக ஒரு காட்சி நமக்கு இடைவெட்டாகக் காண்பிக்கப்படுகிறது.

சிறுமிகளின் முகம் அருகாமையில் வரும்போது, இந்த அடுத்த காட்சி உறைந்த பிம்பமாக நமக்கு முன் வருகிறது. அடர்ந்த பச்சை நிறத்தில் இரு ராணுவ வாகனங்கள். அதில் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருக்கும் படையினர். இரண்டு வாகனங்கள் பாதையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. தனது கால்களை அகட்டியபடி ஒருவன் பாதையோரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறான். அவன் சிறுநீர் கழித்து முடிய, வாகனம் புறப்படுகிறபோது, சிறுநீர் கழித்தவன் ஒரு முதியவயதுப் பெண்ணை, அவளது முதிய கணவனை பலவந்தமாக விளக்குப் பிடிக்கப் பண்ணியபின், வல்லுறவு கொண்டு அவளைக் கொன்ற செய்தியை ஒரு வழமையான செய்திபோல், எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இன்றித் தனது சக படையினனிடம் பகிர்ந்து கொள்கிறான்.

இரண்டு சிறுமியர் இப்போது தனிவழியே மரங்களடர்ந்த பாதையில் வீடு நோக்கிச் செல்கிறார்கள்.

தனித்துச் செல்லும் சிறுமியத் தாண்டும் இரண்டு ராணுவ வாகனங்களில் பின் வாகனம் சிறுமியைத் தாண்டியதும் நிற்கும்போது காட்சி முடிகிறது. இருளில் நிற்கும் வாகனத்தின் வெளிச்சம் பாய்ச்சப்பட, படையினனொருவன் சவக் குழி வெட்டிக் கொண்டிருக்கிறான். வெட்டி முடித்த சவக்குழியில் ஒரு உடல் இறக்கப்பட்டு மண்மூடியபின் ராணுவ வாகனம் கிளம்புகிறது. அதனது வெளிச்சத்தில் ‘வெடிமருந்து நிறைந்த இடம்’ எனும் பலகை நமக்குத் தெரிகிறது.

பிறிதொரு சிறுமிக்கு என்ன ஆயிற்று? தம்பியுடன் செடிகளுக்கிடையில் வீடு நோக்கி நடக்கும் சிறுமியிடம், அசையும் செடியின் வாதுகளின் பின்னிரிந்தொரு குரல், ‘தங்கச்சி இன்றைக்கு வருகிறேன் என்று சொன்னதை மறந்துவிட்டாயா?’ என வாஞ்சையுடன் அழைக்கும் ஒரு ஆண் குரலினையடுத்து, சிறுமி எந்தத் தயக்கமும் இல்லாமல் அந்தச் செடியின் மறுபக்கம் நோக்கி இறங்க, ‘தம்பி நேரத்திற்கு வீடு போய்ச் சேர வேண்டும்’ எனும் குரல் தொடர்ந்து கேட்கிறது.

கூந்தல் குறுகவெட்டப்பட்ட ஒரு காவலரண் போராளிச் சிறுமியாக நாம் அந்தச் சிறுமியை அடுத்த காட்சியில் பார்க்கிறோம். அருகில் துப்பாக்கியுடன், தரையில் வீட்டின் சித்திரம் வரைந்து அதில் மாமரத்தைப் விதைப்பதாய்க் கீறுகிறபோது, அவளது இருப்பிடம் நோக்கிப் படையினர் வரும் அரவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கிகள் இருபுறமும் வெடிக்கிற ஸப்தம் நமக்குக் கேட்கிறது.

இரண்டு சிறுமியரும் வேறு வேறு காரணங்களால் மரணமடைகிறார்கள். அடுத்த அருகாமைக் காட்சியில், புதைமேட்டிலும் கரிய வீட்டிலும் என இரு மாமரக் கன்றுகள் உலர்ந்த நிலையில் உருக்குலைந்து கிடக்கிறது. மறுபடி முதல் காட்சியின் தனிமை. முன்பொருபோது தனது அக்காவுடனும் அக்காவின் தோழிச் சிறுமியுடனும் வந்த அந்தச் சிறுவன் நடக்கிறான். சந்தியை நெருங்கும் தனித்த சிறுவனின் முதுகு நமக்குத் தெரியப் படம் முடிகிறது.

IV

திரைப்படம் முழுமையானதொரு காட்சிரூப வடிவம் என்பதனை உணர்ந்தவர்களால் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வன்முறை நிறைந்த கதைக் கருவைத் தேர்ந்து கொண்ட திரைப்படத்தின் சொல்நெறி அந்த வன்முறையின் தீவிரத்தைத் தனக்குள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அரவமற்ற, மனித சஞ்சாரமற்ற காட்டு வெளியில் தனித்து நடக்கும் சிறுமியர், இடைவெட்டி கால்களை விகாரமாக அகட்டியபடி சிறுநீர்கழிக்குகம் படையினன். பதற்றத்தில் பார்வையாளன் இருத்தி வைக்கப்படுகிறான்.

மிகக் குறைந்த வசனங்கள் எந்தச் சூழலில் அக்குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனை நமக்குச் சொல்லி விடுகிறது. இந்தத் திரைப்படம் இரண்டு சிறுமியர்களின் மரணங்களை அடுத்தடுத்த காட்சியில் ஒப்புநோக்கும் தன்மை கொண்டிருப்பதால், போராட்டத்தை உணர்ச்சிகரமாகப் பார்க்கிற பார்வையாளனிடம் கோபமூட்டும் தன்மையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

வன்முறையைத் தனது கதைப்பொருளாக எடுத்துக் கொள்ளும் சொல்நெறி இதனைத் தவிர்த்திருக்கவும் முடியாது. ஆனால், ‘தங்கச்சி’ என ஒரு சிறுமி அழைக்கப்படும்போது, திரைப்படம் சுட்டும் ஓப்புமையின் வன்முறை அங்கு தணிக்கப்பட்டு, திரைப்படம் பேசும் பிரச்சினையே மேலோங்கி விடுகிறது. கத்திமுனைப் பயணம் போன்ற இந்த ஒப்புமை, மிகுந்த விகாரமாகி விடக் கூடிய வாய்ப்பை காட்சிரூபச் சித்திரிப்பிலும் வசனத்திலும் திரைப்படத்தை உருவாக்கியவர்கள் கடந்து சென்றிருக்கிறார்கள்.

சிறுமிகளுக்கு நேரப்போகிற அனர்த்தம் குறித்த பதட்டம் படமெங்கும் நிரவி நிற்கிறது. திரைப்படம் நிஜத்தில் உண்மை வாழ்வோ, இல்லை யதார்த்தமோ இல்லை. வாழ்வைப் ‘போல’ அல்லது யதார்த்தம் ‘போல’, சம்பவங்களை நிகழத்திக் காட்டுவதுதான் திரைப்படம். இப்படியான ‘போலச்’ செய்கிற நிகழ்வுப் போக்கில், நிச்சயமான தொழில்நுட்பத்தைப் பாவித்து, நம்பகத் தன்மையை உருவாக்குவதுதான கலைஞனின் செயல்பாடு. படத்தின் மிக முக்கியமான காட்சி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் உடல் படையினனால் புதைகுழியில் இட்டு மூடப்படும் காட்சி. மனித உடலை இரு கைகளிலும் ஒருவர் தூக்குகிறபோது உடல் குழையும், உயிரற்ற உடலின் பாரம் தூக்குபவனை நிரம்பச் சிரமத்திற்கு உள்ளாக்கும். குறிப்பிட்ட அந்தக் காட்சியில் காண்பிக்கப்படும் உடல் ‘வெட்டையான’ உடல் என்பது தூக்கும் போதும், சவக்குழியினுள் படையினனால் ‘செத்தென’ வீசம்படும்போதும், பார்வையாளனாக அக்காட்சி நமக்கு மிகுந்த அசௌரிகயத்தை உருவாக்குகிறது. ‘அது மனித உடல் அல்ல’ என்கிற எமது எண்ணம் படத்தில் ஒன்றுவதிலிருந்து நம்மை விலக்கிவிடுகிறது.

அது போலவே இரண்டு மாங்கன்றுகளின் உலர்ந்து வதங்கிய அருகாமைக் காட்சி நமக்குக் காண்பிக்கப்படும்போது, புதைகுழி எனும் கலைந்த நிலப்பரப்பு, எரிந்து கருகிய வீட்டினிடையிலான சமனான நிலப்பரப்பு என இரு வேறு நிலப்பரப்புக்களுக்கு இடையிலான வித்தியாசம் நமக்குப் புலப்படாமல் போயிருக்கிறது. இரண்டு சிறுமிகளதும் மரணத்தை நிச்சயப்படுத்திக் கொள்ள நமக்கு முன்னால் இருப்பது இந்த அருகாமைக் காட்சிதான் எனும் போது, இக்காட்சி மிகுந்த சிரத்தையுடன் நிலவெளி வித்தியாசப்படுத்தப்பட்டு இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இதுவன்றி, கதை நிகழும் நிலப்பரப்பு தொடர்பான சில குறிப்புகளையும் பதிய விழைகிறேன். நிதர்சனம் தொலைக் காட்சியின் விவரணப் படங்களையும், தமது உறவுகளைப் பார்க்கத் தமது ஈழத்துக் கிராமங்களுக்குச் சென்று மீண்ட நண்பர்களின் தனிப்பட்ட ஒளிநாடாக்களையும் நான் நிறையப் பாரத்திருக்கிறேன். சிதிலமான வீடுகள், பெயர்ந்த தார்ச் சாலைகள், சுவரில் எழுதப்பட்ட தேய்ந்த வண்ணங்களிலான விளம்பரங்கள், குட்டிச் சுவர்கள், துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடையாகின வீட்டுச் சுவர்கள் எனவே ஈழத்தின் போர்க்காலக் கிராமங்களின் சித்திரம் இருக்கிறது. வன்முறையும் அழிவும் இடிபாடுகளும் நிறைந்த, மயான அமைதி கவிந்திருக்கும் கிராமங்களையே என்னால் காண முடிந்தது. ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ திரைப்படமும் இந்தத் தன்மையும், அச்சமும் மயானநிலையும் கலந்த ஒரு சூழலைத் தான் சித்தரிக்கிறது. ஆனால், அந்தச் சூழல் நிரைப்படத்தின் காட்சியாக்கத்தில் கொண்டுவரப்படவில்லை என்பதனையும் அவதானிக்க வேண்டியிருக்கிறது. வேறொரு நிலச்சூழலில் படமெடுக்கும் போது (திரைப்படம் தமிழக நிலவெளியில் எடுக்கப்பட்டிருக்கிறது) இத்தகைய நிலைமைகளைக் கடந்து போகிற சாத்தியங்களின் பொருளாதார நிலைமைகளையும் தாண்டி, ஒரு திரைப்படம் எனும் அளவில் அதனது அசல்தன்மையை இத்தகையை காட்சிகள் கொண்டிராதபோது, திரைப்பட அனுபவம் என்பது முழுமையடைவது என்பது தவறிப் போகிறது என்பதையும் நாம் சுட்டவே வேண்டும்.

V

நிச்சயமாகவே இந்தத் திரைப்படம் மிகுந்த சர்ச்சைக்குரிய, அரசியல் முக்கியத்துவமுடைய ஒரு சமகாலப் பிரச்சினையைக் கொண்டிருக்கிறது. குழந்தைப் போராளிகள் பிரச்சினை, குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலை என, போர் நிகழும் ஒரு சமூகத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளின் பற்பல பரிமாணங்களில், இரு பரிமாணங்களை இப்படம் பேசுகிறது. காற்றுவெளி திரைப்படம் போராளிச் சிறுவர்களாக இருக்கிறவர்களுக்கும் அவர்கள் இயங்க நேர்ந்த சமூகத்தவர்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளைப் பேசுகிறது. கிச்சான், செருப்பு, மூக்குப் பேணி, சிலோன் போன்ற படங்கள் தொலைந்துபோன குழந்தைமையைப் பேசுகிறது. என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் திரைப்படம் குழந்தைகளுக்கு வெளியில், அவர்களது சுயம் சார்ந்த தேர்வின்றி, அவர்களது பிரக்ஞைபூர்வமான பங்குபற்றுதலுக்கான மனமுதிர்ச்சியின்றி, அவர்களுக்கு வெளியிலான புறநிலைச் சக்திகளால், அவர்களது வாழ்வு தீர்மானிக்கப்படுவதைப் பற்றி, அவர்களது அகால மரணம் பற்றிப் பேசுகிறது.

பொதுவாகவே குழந்தைகள் தொடர்பான பிரச்சினை என்பது அவர்களைப் பெற்றவர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினை. அவர்கள்தாம் தமது வம்சவிருட்சத்தின் தொடர்ச்சி என்பதனைப் பெற்றோர் உணர்ச்சிகரமாக உணர்கிறார்கள். தமது குழந்தைகள் மரணமடைவதை எந்தப் பெற்றோரும் விரும்பமாட்டார்கள். குழந்தைகளை ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்படுத்தக் கூடாது என்பதனை போராளி இயக்கத்தவர்கள் ஏற்கிறார்கள். அவர்களால் குழந்தைகள் போராளிகளாக இழுத்துச் செல்லப்படுவதை நியாயப்படுத்த முடிவதில்லை. இதுவே இந்தப் பிரச்சினையின் தார்மீகத் தன்மையை நிறுவப் போதுமானதாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த பெற்றோர் தமது குழந்தைகளின் கல்வித் தகைமை மற்றும் சாதனைகளைக் பெருமிதத்துடன் கொண்டாடுகிற அதே போதில், கொல்லப்படும் குழந்தைப் போராளிகள் தொடர்பாக விமர்சனமற்ற வகையில் அவர்களைக் குட்டிக் கடவுள்களாக்கி, வணங்குவதற்கான பிம்பங்கள் ஆக்குவது என்பது ஒரு இருத்தலியல் முரண். பிரச்சினையின் பற்பல பரிமாணங்களையும் நாம் அலசினாலும் கூட, குழந்தைகளைப் பலிபீடத்திற்கு அனுப்புவது எனும் பெரியவர்களின் நிலைபாட்டை எதன் வழியிலும் நியாயப்படுத்த முடியாது. அந்த வகையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்புகளும், உலக மனித உரிமை அமைப்புகளும், போராளிகள் அமைப்புகளும் குழந்தைப் போராளிகள் பிரச்சினையில் கருத்தளவில் ஓருமையான நிலைபாட்டுக்கு வருகிறார்கள்.

இதனைத் தாண்டியும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாலியல் வல்லுறவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரு கொடுமையான பிரச்சினைகளையும் விகாரப்படுத்தாமல், எவர் மீதும் திட்டவட்டமான புகார் கூறாமல், ஒரு அறம்சார் மானுடப் பிரச்சினை எனும் வகையில், இப்பிரச்சினை சார்ந்த பரிமாணங்களை முன்வைப்பது நம் காலத்தின் கலஞர்களின் கடமையாகிறது. இப்படம் அந்த வெளியில் வேர்பிடித்து, நமக்குள் இனம் தெரிந்த பிரச்சினையின் பதட்டத்தைப் பரப்பியிருக்கிறது. கண்டனம் என அல்லாமல், கலையாக இது ஆகியிருக்கிறது.

இந்தப் படம் தோற்றுவிக்கும் விவாதங்கள் இச்சிறுமிகளைப் போன்றவர்களை மீளவும் நிர்மலமாக உயிர்ப்பிக்குமானால், அதுவே குழந்தைகளை நேசிக்கிறவர்களின் ஆகச் சிறந்த எதிர்காலக் கனவாக இருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

 • fiona
  fiona

  பிரதீபன் மிகத்தரமான படைப்பு ஒன்று சமூகத்திற்கு தரப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன் காரணம் சினிமா பற்றி ஒருமிக சரியான ஆய்வை அல்லது விமர்சனத்தை புலம் பெயர் சூழலில் வைக்க முடியும் என்றால் அது யமுனா ஒருவரால்த்தான் முடியும். எனவே அதிலிருந்து தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

  எமது புலம் பெயர் சமூகத்தில் சினிமா குறும் படங்கள் என பல மாயை விம்பங்களை எம்மால் அவதானிக்க்க கூடியதாக உள்ளது இந்த ஏமாற்று வித்தைகளில் முடக்கி விடாது ஆர்.புதியவன் போன்று தனித்து செயற்ப்படவும் மற்றவர்களை பயிற்றுவிக்கவும் தொடரந்து சமூகப்பதிவுகளை இடவும்.

  உங்கள் இந்த படங்களை எமது வாழ்வுப்பிரதேசங்களில் பார்க்க ஆவலாக உள்ளோம்

  Reply