வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல

kili-04.jpgஎமது பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து கிளிநொச்சியைக் கைப்பற்றியது தமிழ் மக்களுக்கோ சிறுபான்மை இனத்தவர்களுக்கோ எதிரான வெற்றியன்றி அனைத்து மக்களுக்குமான தேசிய வெற்றியாகும். அன்று தெற்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தெற்கு மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல அதுபோல் இன்று வடக்கின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. இன்று வடபகுதியில் இடம்பெறுவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளின் போராட்டமன்றி நாட்டின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், தேசியத்தைக் காப்பாற்றுவதற்கான தேசிய போராட்டமாகும் என மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

மேல் மாகாண பிரதம செயலாளர் பணிமனையின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை இடம்பெற்ற கிளிநொச்சியை வெற்றிகொண்ட பாதுகாப்புப் படையிரைப் பாராட்டி ஆசீர்வதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

நாட்டின் சுதந்திரம் ஐக்கியத்தைக் காப்பதற்காக கிராமப் புறங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களின் புத்திரர்கள் உயிர்த் தியாகம் செய்கின்றனர். பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கின்றனர். எமது படையினரின் வெற்றி அன்று போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்து 500 வருட கால ஆக்கிமிப்பிலிருந்து நாடு பெற்ற வெற்றிக்குச் சமனாகும். வெற்றி பெற முடியாது எனக் கூறப்பட்ட முப்பதாண்டு கால யுத்தத்தைத் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் ஜனாதிபதி தேசத்தின் அரச பரம்பரையில் உருவான ஒரு அரசனாவார். தீவிரவாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கு அடிபணியாத ஜனாதிபதியை நாம் பாராட்டல் வேண்டும்.

நாடொன்றின் அபிவிருத்திக்கு பொருளாதாரக் கொள்கைகள் மாத்திரம் போதாது. தேசப்பற்றும் அபிமானமும் அவசியமுமாகும். உலக பொருளாதார நெருக்கடியால் தற்போது உச்ச நிலையிலிருந்த நாடுகள் கூட கீழ் நோக்கி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எம்முடைய நாடு என்ற சித்தாந்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானதாகும். பொருளாதார சிந்தனைகளுடன் தேசாபிமான சிந்தனைகளால் தான் தேசமொன்றை அபிவிருத்தி செய்ய முடியும். பல உலக நாடுகளும் இவ்வாறு தான் அபிவிருத்தியடைந்துள்ளன என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *