முகமாலை, கிளாலி முன்னரங்கு நிலைகள் படையினரின் கட்டுப்பாட்டில்

_army.jpgமுகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலு ள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதியை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 53 வது மற்றும் 58 வது படைப்பிரிவினர் இந்தப் பகுதியிலுள்ள முன்னரங்கு நிலைகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள படையினர் இங்கிருந்து தென்பகுதியிலுள்ள பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார, கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் உதய நாணயக்கார இங்கு மேலும் தகவல் தருகையில்:- யாழ்ப்பாணம், முகமாலை மற்றும் கிளாலி பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்குவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 500 தொடக்கம் 600 மீற்றர் வரையான முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளை படையினர் மீட்டெடுத்துள்ளனர். தற்பொழுது முன்னெடுக்கும் படை நடவடிக்கையின் போது படையினரை இலக்கு வைத்த புலிகளின் பதில் தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும், புலிகள் பின்வாங்கிச் செல்லும் நிலைகள் காணப்படுவதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

ஆணையிறவுக்கு தெற்கு மற்றும் அதன் கரையோரப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் தட்டுவான் கட்டு மற்றும் தமிழ்மடப் பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தியுள்ளனர். ஆணையிறவுக்கு தெற்கை கைப்பற்றியதை அடுத்து தெற்கு பகுதியில் அமைந்துள்ள புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது முல்லைத்தீவு பகுதியிலுள்ள கிழக்கு கடற்கரை பிரதேசமும் அதனை அண்மித்த பகுதிகளும் மாத்திரமே புலிகளின் விநியோக பாதையாக உள்ளது. ஒலுமடுவுக்கு கிழக்கேயும், ஒட்டுசுட்டானுக்கு மேற்கேயும் நிலைக்கொண்டிருந்த இராணுவத்தின் நான்காவது மற்றும் மூன்றாவது செயலணியினர் ஏ- 32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் மற்றும் ஒலுமடு வரையான பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினர் ஒட்டு சுட்டானிலிருந்து முள்ளியவளை வரையான வீதியை நோக்கி தற்பொழுது முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை புலிகள் நாளுக்கு நாள் பாதுகாப்புப் படையினரிடம் இழந்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். முகமாலையிலிருந்து தெற்காகவுள்ள ஆணையிறவுக்கு 19 கிலோ மீற்றரும், அங்கிருந்து கிளிநொச்சிக்கு சுமார் நான்கு கிலோமீற்றர் தூரமும் உள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • one of tamilan
    one of tamilan

    well you getting land but what you going to do get tamil peoples mind & moral supports

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    is the ltte got tamil peoples mind & moral supports???

    Reply