பிரித்தானியாவில் ஒரு வேலைக்கு 1000 பேர் விண்ணப்பம்! அரசியல், பொருளாதார, கல்விக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்!!!

பிரித்தானியாவின் ஒரு பகுதியில் ஒரு வெற்றிடத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மார்ச் 2020இல் கொரோனா பன்டமிக் ஆரம்பித்த வேளையில் பிரித்தானியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வேலையற்றவர்களின் எண்ணிக்கை 1.35 மில்லியன்களாக இருந்தது. ஆனால் அடுத்த மூன்று மாதகாலத்தில் யூனில் வேலையில்லாமல் அரசு உதவிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 2.7 மில்லியன் பேர் வேலை இழந்தவர்களுக்கான அல்லது வருமான போதாமைக்கான உதவிகளைப் பெற்று வந்தனர். மார்ச் முதல் யூலை வரையான காலத்தில் மட்டும் 730000 பேர் சம்பளம் வழங்கப்படுவதில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்து இருந்தது.

கிழக்கு லண்டனில் உள்ள எனது நண்பரின் முடிதிருத்தும் நிலையத்துக்கு எப்போது சென்றாலும் காத்திருந்து முடிதிருத்த வேண்டும். அல்லது முன்னரே அவரிடம் நேரத்தை பதிவு செய்து செல்வது வழமை. மூன்று பணியாளர்கள் இருந்தாலும் 2 தொடக்கம் 5 பேர்வரை காத்திருப்பார்கள். சில தினங்களுக்கு முன் கார் MOT எடுக்கச் சென்றபோது சலூனில் மூன்று பணியாளர்கள் இருப்பதைப் பார்த்தேன். MOT எடுத்துவிட்டு அண்ணளவாக ஒரு மணிநேரத்திற்குப் பின் மீண்டும் முடி திருத்தச் சென்றேன். பணியாளர்களைத் தவிர யாரும் இல்லை. மார்ச் மாதமளவில் பொறுப்பாய் இருந்த நண்பரோடு உரையாடிய போது தானும் ஒரு சலூன் திறக்கப்போவதாகச் சொல்லி இருந்தார். புதிய சலூன் திறப்பது பற்றிக் கேட்டேன். ‘பயமாக இருக்குது அண்ணா’ ஆட்கள் வரவே பயப்படுகிறார்கள். எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது என்று சலிப்போடு கூறினார்.

அத்தியவசிய தேவைகளில் ஒன்றான முடிதிருத்தும் நிலையத்தின் நிலையே இப்படி என்றால் மற்றைய வேலைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பிரித்தானியாவில் ஒவ்வொரு நாளும் நிறுவனங்கள் எத்தினை பேரை வேலையால் நிறுத்துகின்றனர் என்ற விபரம் வெளிவந்த வண்ணமே உள்ளது. வீடுகளில் மிக அறியப்பட்ட நிறுவனங்களான பிபி – BP, பிரிடிஸ் ஏயர்வெய்ஸ், M&S – எம் அன் எஸ், ஜோன் லூயிஸ், பிஸா கட், தி கார்டியன், ஈவினிங் ஸ்ராண்டட் பத்திரிகைகள் என்று இந்தப் பட்டியல் மிகநீளமானது. ‘வைட் கொலர் ஜொப்’ என்று பிரித்தானியர்கள் பெருமைப்படுகின்ற பல தொழில்கள் தற்போது ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது.

நிறுவனங்கள் தொடர்ந்தும் வேலையில் பணியாளர்களை வைத்திருப்பதற்காக வழங்கும் பேர்லோ திட்டம் ஒக்ரோபரில் முடிவுக்கு வரும் போது, வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேலை நீக்கம் என்பது வெறுமனே கொரோனாவினால் ஏற்பட்டது மட்டுமல்ல. கொரோனாவிற்கு முன்னரேயே பிரித்தானிய வேலைமுறையில் மாற்றங்கள் வேண்டும் என்பதை நிறுவனங்கள் மிகத் திட்டமிட்டு தகுந்த நேரத்திற்காக காத்திருந்தன. கொரோனா வின் தாக்கம் இந்த மாற்றத்தை சடுதியாக துரிதப்படுத்தி உள்ளது.

பிரித்தானிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் முதலீடுகளைச் செய்துவருவதால் கூடுதல் லாபத்தை காண முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்படத் தொடங்கிவிட்டன. மனித வலுவுக்காக ரொபேட்களை கணணிகளைப் பயன்படுத்தும் முறை தற்போது தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மனிதர்கள் செய்யும் பணிகளை கணணிகளும் ரோபேட்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ரீற்றெயில் செக்ரரை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வருமானம் அதிகரித்தே உள்ளது. ஆனால் அவர்கள் ஒன்லைன் மூலமாக வருமானமீட்டுவது மிகையாக அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள் தங்களுடைய கல்லும் சீமேந்தும் கொண்டு கட்டப்படும் வியாபார நிலையங்களின் எண்ணிக்கையை மிக விரைவில் குறைத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் வங்கிகள் எமது ஹைஸரீற்றில் இருந்து காணாமல் போய்விடும். அடுத்த ஆண்டு முதல் பிரித்தானியா ஓட்டிகள் இல்லாத வாகனங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைக்கு அனுமதிக்க உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரக்ஸிகளும் ஊபர் ட்ரைவர்களும் வேலை இழக்க வேண்டி ஏற்படலாம். தற்போது நாங்கள் செய்கின்ற பல நடைமுறை வேலைகள் இன்னும் சில ஆண்டுகளில் வரலாறு ஆகிவிடும்.

தற்போதைய பொருளாதாரமானது மிக வேகமாக அறிவியல் பொருளாதாரமாக மாறி வருகின்றமையால் வேலைவாய்ப்பிற்கான சந்தையில் தங்களை விற்க விரும்பும் ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் கூட வெறும் சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு வேலைழயப் பெற்றுவிட முடியாது. அவர்கள் கடுமையான போட்டியயை சந்திக்க வேண்டி நேரிடும். சான்றிதள்கள் மட்டுமே அறிவாகி விடாது. ஏனைய திறன்களும் பரீட்சிக்கப்படும்.

பழையன கழிவதும் புதியன புகுவதும் இயல்பானாலும், இழக்கப்படும் வேலைகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பம் புதிய வேலைகளை உருவாக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமே மனித வலுவைக் குறைத்து அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தைக் குறைத்து அதீத லாபம் மீட்டுவது மட்டுமே.

அதனால் அரசு புதிய தொழில்சார் சட்டங்களை இயற்றி வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தை உயர்த்தி, அரச உதவித் திட்டங்களை உயர்த்த வேண்டும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வாரத்திற்கு 40 மணிநேர வேலைக் கணக்கு தற்போது தொழில்நுட்பம் அதன் உச்சத்தை தொட்டுள்ள இன்றைய காலகட்டத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானது. அதன் பலனை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

மக்கள் தனிமனிதர்களாக மட்டும் சிந்திக்காமல் சமூகம் சார்ந்தும் சிந்திக்க வேண்டிய அரசியல் சூழலில் நாம் வாழ்கின்றோம். மக்கள் கூட்டத்தை தனிமனிதர்களாக்கி தனிமனிதர்களிடையே போட்டியயை உருவாக்கி சமூக அக்கறையை இல்லாமல் செய்து வெறும் போட்டியயையும் பொறாமையயையும் உருவாக்கும் தற்போதைய அரசியல் பொருளாதார கல்விக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தங்களுடைய பட்டப் படிப்பிற்காக £50000 வரையான கடன் சுமையைப் ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களதும் யுவதிகளதும் எதிர்காலம் அரசின் கொள்கைவகுப்பிலேயே தங்கியுள்ளது. பெருநிறுவனங்கள் லாபமீட்டுவதற்காக தங்களைத் தயார்படுத்தும் இந்த இளைஞர் யுவதிகளின் கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *