பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்க முடியாது: யாழ். எம்.பி் பத்மினி

patmini.jpgபறவைகள் சரணாலயம்’ என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள இராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்’ என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷ. ஆனால், “ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது” என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பரநாதன்.

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்தியேக பேட்டி.

ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன?

“இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்து வருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் அது புலிகளாகவே பாவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை இராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக’ இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.

ஈழத்தின் வன்னிப் பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய உணவுப் பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.

தமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள இராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது. இதுதான் இலங்கைப் போரின் இப்போதைய நிலை.”

கிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே?

“அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்.”

மக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

“அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள இராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.

மன்னார் பகுதியில், சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் கிட்டத்தட்ட இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள இராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்?”

ஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

“இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.”

`பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

“ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க, யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற இந்தியாதான் உதவி புரிய வேண்டும்.”

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே?

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகம அறிவித்திருந்தாரே!”

தமிழர் பகுதியில் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக் கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

“அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது.”

பிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே?

“கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள இராணுவத்தின் குண்டுமழையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு இலட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது.”என்றார் பத்மினி சிதம்பரநாதன்.
 
நன்றி:குமுதம்

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • CGC SJC & U Of JAFFNA
    CGC SJC & U Of JAFFNA

    பத்மினி அக்காக்கு, உங்கடை கணவரிடை தினசரி நாடக நடிப்பை விட உங்கள் நடிப்பு இப்ப மேலே போட்டுது. இப்ப 2 பேரும் பணக்காரர். வாழ்க உங்கடை நடிப்பு தொழில்.

    யாழ்ப்பாண MP யாயி ஒன்றும் இது வரை செய்ததாய் இல்லை. இன்னும் என்ன நாடகம் ஆட போறியலோ 2 பேரும்?

    Apply for another P.hD Scholarship fund and you will get it?

    kulanthai

    Reply
  • chandran.raja
    chandran.raja

    “பிள்ளைத்தாச்சி” வேஷத்தில் பிரபாகரன் நாட்டை விட்டு தப்பிஓடிவிட்டார் என ஒரு கதை அடிபடுகிறது உண்மையா ? அல்லது ருமேனியா- செய்ஷஸ்கோ ஈராக் சதாம் குசேயின் போன்றவர்களுக்கு ஏற்பட்டநிலை ஏற்படுமா? பல ஆயிரம் உயிர்களையும் பல நுhறு கோடிசொத்துக்களையும் நாசகாரம் செய்த குற்றம்மல்லவா?இவரை நோக்கியுள்ளது!.

    Reply
  • anathi
    anathi

    பிள்ளைத்தாச்சி” வேஷத்தில் போயிருந்தால் சரத் பொன்சேகாவின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டல்லவா போக வேணும்?

    Reply
  • palli
    palli

    அவர்களது நோக்கமும் அதுவல்ல.இலங்கை பூரா அரசின்(சிங்கள) கட்டுபாட்டில் இருக்க வேண்டுமென்பதுதான்.ஆம் அவை பிடிக்க புறப்பட்டது பிரபாவையல்ல தம்மிடம் இருந்து பறிபோன பிரதேசங்களைதான். அதில் வெற்றியும் அடைகின்றனர். இதுகூட தெரியாமல் சினிமாக்களில் எம்ஜிஆர் ஒருபோதும் சாகமாட்டார் நம்பியார்தான் இறுதில் அடிவாங்கி சாவார் என்பது போல் பேசுவது ஒரு எம்பிக்கு நல்லாவா இருக்கு. அதுசரி பானையில் இருந்தால் தானே கரண்டியில் வர.
    பல்லி.

    Reply
  • damilan
    damilan

    எப்படி பிடிக்க முடியும் கூட்டணி எம்பிகளையே நாட்டில பிடிக்க முடியாத போது பிரபாகரன் எம்மாத்திரம்? சிறு திருத்தம் உயிருடன்தானே பிடிக்க முடியாது ?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பத்மினி அக்கா சும்மா சொல்லக் கூடாது நன்றாய்த் தான் கதைக்கிறீங்க. சரி சரி இனி கதைக்கச் சந்தர்ப்பம கிடைக்காது. அதாலை கிடைச்ச இறுதிச் சந்தர்ப்பத்திலை நல்லாய் கதையுங்கோ. உப்பிடிக் கதைச்சால்த் தானே குமுதம் விகடன் போன்றவற்றில் உங்க படம் போட்டு செய்தி போடுவாங்க……………………..

    Reply
  • kanapathi
    kanapathi

    ஆர்.சம்பந்தன் மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இணைந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் அவதி ஒவ்வொருநாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தனர்.

    விடுதலைப்புலிகள் முற்றிலுமாக பலமிழந்தபிறகு தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று இந்தியா நினைக்குமானால் அது தவறான அணுகுமுறை என்றும் ஏனெனில் அத்தகைய சூழலில் அப்படிப்பட்ட தீர்வுக்கு மஹிந்த அரசு முன்வராது என்றும சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

    எங்கள் நாட்டுப் பற்றாளர்கள் இந்தியாவில் குடியும் குடித்தனமுமாக இருந்துகொண்டு விடும் அறிக்கைள் எங்கள் மக்கள் இருப்பதற்கும் நிற்பதற்கு இடம் இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டு இருக்கும் நேரம் இவர்களின் சொகுசு வாழ்க்கை பற்றி யார் கேட்கப் போகினம். இவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியது யாழ்ப்பாண மக்கள் ஆனால் இவர்கள் இப்போது கவலைப்படுவது முல்லைத்தீவில இருக்கும் புலிகளைப்பற்றி அவர்களுக்காக இவர்கள் இந்தியாவில் நின்றுகொண்டு இந்தியா பற்றி பேசுவது இன்னும் வியப்பாக தான் இருக்கிறது. இத்துடன் பராளுமன்ற கதிரைகள் காலி என்ற பயம் இவர்களுக்கு என்ன செய்வது எல்லாம் எம் தலையெழுத்து

    Reply
  • chandran.raja
    chandran.raja

    “முறிந்தபனை” ஒரு கலப்படமில்லாத வரலாற்று ஆவணம்.அதை முழுமையாக வாசித்தவர்களுக்கே தெரியும் அதன் அருமையும் பெருமையும். உண்மையான பெண் போராளி என்றால் ரஜணி திரணமாவைச் சொல்லலாம் வரும்காலத்தில் இலங்கை மக்களுக்கு ரஜணி ஒரு தேவதையாகவே வலம் வருவா. இந்த தேவதையை சமகாலத்தில் காட்டிகொடுத்ததும் கொலைக்கு காரணமாகயிருந்தவர்கள் பத்மினி சிதரம்பரநாதன்……
    சம்பந்தனே மாவையோ சிவாஜிலிங்கமோ பத்மினியோ மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அல்ல புலிகளின் அதிகாரத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இவர்கள் வாழ்வில் தமது வாழ்வில் ஆசை கொண்டவர்களே ஒழிய மக்கள் மீது பற்றுக்கொண்டவர்கள் அல்ல.

    Reply
  • ashroffali
    ashroffali

    வன்னி மக்கள் மீது அக்கறையிருந்தால் ஒரு தடவையாவது அந்த மக்களைப் போய்ப் பார்த்து வர முயற்சித்திருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள புலிகள் தேவையாக இருப்பதால் புலிகள் பற்றித் தான் கரிசனை காட்டுவார்கள். மக்கள் மீது எங்கே கரிசனை இருக்கப் போகின்றது. அது தான் இப்படி தொடர்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சிங்கள எம். பி. யான ஜயலத் ஜயவர்த்தனவோ வன்னிக்குப் போகத்துடிக்கிக்கிறார். அப்படிப் பார்த்தால் யாருக்கு மக்கள் மீது கரிசனை இருக்கின்றது என்பது தெரிகின்றதல்லவா?

    Reply
  • thurai
    thurai

    பிரபாகரனால் தமிழீழத்தை,பெற்றுத்தர முடியாதென்பதனையும் உலகத்தமிழர்களிற்கு திடமாகக் கூறமுடியுமா?

    துரை

    Reply
  • palli
    palli

    துரை உங்கள் எனக்கு புரியவில்லை. ஆனால் சுபாஸுக்கு பயந்துதான் வெள்ளையர் காந்தி தாத்தாவிடம் நாட்டை ஒப்படைத்ததாக சுபாஸ் சந்திரபோஸின் தோழர்கள் சொல்லுகிறார்கள் அல்லவா,,?? பிரபகரன் போல் மகிந்தா & கோ வும் ஆட்ச்சி(பவர்) இல்லாத காலத்தில் நாட்டில் இருந்தால் கல்லெறி வேண்ட்டுவது நிஜம்.. ஒரு காலத்தில் பிரபாவும் மகிந்தாவும் ஒரேநாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டி வந்தாலும் வரலாம் உலகம் உருண்டைதானே.
    பல்லி.

    Reply
  • padamman
    padamman

    பத்மினி அக்கா நிங்கள் எப்போது கடைசியாக வன்னி மக்களை சந்தித்திர்கள்? உங்கள் தலைவர் எப்போது சந்தித்தர்? நிங்களும் உங்கள் தலைவரும் இப்போது வன்னி மக்களுக்கு முன்னால் போய் நின்றல் தெரியும் உங்கள் நிலமை எப்படியென்று.

    Reply
  • அ. செல்வன்
    அ. செல்வன்

    இலங்கையில் தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் அங்குள்ள ஒட்டுமொத்த தமிழினமும் அழிந்து விடுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
    சென்னையில் நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அங்கு அவர்கள் மேலும் கூறுகையில்;

    தமிழினத்தை அடியோடு ஒழித்துவிட வேண்டுமென்ற ஒரே நோக்குடன், சிங்கள அரசு போர் நடத்தி வருகிறது. போரில் முல்லைத் தீவில் மட்டும் 53 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள், கோவில்கள், மருத்துவமனைகள், அகதி முகாம்கள் ஆகியவையும் விமானங்கள் மூலம் குண்டு வீசித் தகர்க்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் உடமைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும் முழு அளவில் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
    இன வெறியுடன் சிங்கள அரசு நடத்தி வரும் தாக்குதல் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். ஒருவேளை ஒரு சிலர் உயிர் பிழைத்திருந்தாலும், அவர்கள் வாய் மூடி அடிமைகளாக இருக்க வேண்டும். இது தமிழகத்திற்கும், இந்திய அரசுக்கும் பெரும் மானக்கேடாகும்.

    எனவே, இலங்கையில் போரை நிறுத்தி இந்திய அரசின் மேற்பார்வையில் தமிழக அரசு மூலமாக பேச்சு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற வழிவகை செய்யப்பட வேண்டுமென்றனர்.

    விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்காகத்தான் இந்தப் போர் நடத்தப்படுவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறி வருவது தொடர்பாக கேட்டபோது;

    இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் வீடுகள், கட்டிடங்கள், கால்நடைகள் மற்றும் சொத்துகளைச் சிங்கள அரசு அழித்து வருகிறது. தமிழர்களையும் படுகொலை செய்கிறது. இத்தனையையும் செய்துவிட்டு தமிழர்களை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று அவர்கள் கேட்டனர்.

    விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்து விட்டால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக பேச வேண்டியிருக்காது என இலங்கை அரசு கருதுகிறது. இலங்கை அரசின் உறுதிமொழிகளை நம்ப முடியாது.
    வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரிக்க மாட்டோம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார். ஆனால், ராஜீவ் காந்தி செய்த உடன்பாட்டை மீறி இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் இந்தியாவில் உறுதியளித்தார். ஆனால், தமிழர்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //போரில் முல்லைத் தீவில் மட்டும் 53 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள் கோவில்கள் மருத்துவமனைகள் அகதி முகாம்கள் ஆகியவையும் விமானங்கள் மூலம் குண்டு வீசித் தகர்க்கப்படுகின்றன//

    இவர் கடைசியாக எப்போது கிளிநொச்சிக்குப் போய் வந்தார்? வெறுமனே வாய்க்கு வந்தபடி பேசுவதாக இருந்தால் இவர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்று கருத முடியாது. முன்பும் இப்படித்தான் கிழக்கை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது கதிரவெளி விக்னேஸ்வரா கல்லூரியை இராணுவத்தினர் செல் வீசித் தாக்கி அழித்து விட்டதாகவும் வாகரை மருத்துவமனை இராணுவ எறிகணைத் தாக்குதலில் முற்றாக சேதமடைந்து விட்டதாகவும் இதே புலிகள் கூறினர்கள். வாகரையும் கதிரவெளியும் மீட்கப்பட்ட மறுநாளே நான் சர்வதேச ஊடகவியலாளர்களை அங்கு அழைத்துச் சென்றிருந்தேன். அதன் போது உண்மை நிலையை நேரில் கண்ட ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொய்ப்பிரச்சாரத்தை நன்கு விளங்கிக் கொண்டனர்.

    கிளிநொச்சியில் 53 ஆயிரம் வீடுகள் இருப்பதாக கூறும் பத்மினி அவை எந்தெந்தப் பகுதியில் எத்தனை வீடுகள் வீதம் அமைந்திருந்தன கிளிநொச்சியின் மொத்த சனத்தொகை மற்றும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை அவற்றில் வதியும் குடும்பங்களின் எண்ணிக்கை என்பவற்றை கொஞ்சம் விரிவாக கூறுவாரா?………………….. ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கொஞ்சமாவது உண்மை தெரிந்து பொறுப்புடன் கருத்துக் கூற வேண்டும். ….

    Reply