“13வது மற்றும் 19வது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனத்தை செலுத்தவேண்டும் ” – அமெரிக்க தூதுவரிடம் இரா.சம்பந்தன்.

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina Teplitz) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று (26.08.2020) திருகோணமலையில் சந்தித்துள்ளார். தொடர்ந்து இருவருக்குமிடையில் நிகழ்கால இலங்கை அரசியல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது 13 மற்றும் 19ஆவது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து விரைவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “13வது மற்றும் 19வது திருத்தங்களில் அவர்கள் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் என்னவென்பது எங்களுக்கு தெரியாது. இந்த விடயம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். இந்த விடயம் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனத்தை செலுத்தவேண்டும்.

நீண்ட கால தேசியப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகள் காணப்படவில்லை. முன்னைய அரசாங்கம்கூட தனக்குள் ஏற்பட்ட பிளவினால் தீர்வை முன்வைக்க தவறிவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, நோர்வே, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது.

அரசாங்கம் அவர்களின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளை தோற்கடித்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. இதனை  அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்.

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடினேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் அடைந்த பின்னடைவுக்கான காரணங்கள் தொடர்பாக நாம் அவர்களுக்கு விளக்கங்களை அளித்தோம்.

தமிழ் கட்சிகள், தேசிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக நடந்துகொண்ட அல்லது மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட உதவிகள்,பண உதவிகள் ஏனைய நடவடிக்கைகள், அத்துடன் விருப்பு வாக்குகள் என்று சொல்லப்படுகின்ற வேட்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பெறுவதற்காக முயற்சி செய்ததன் காரணமாக அதிக வாக்குகள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் கட்சி கடந்த காலங்களைப்போல போதிய ஆசனங்களைப் பெற முடியவில்லை.

கட்சிக்குள் இருக்கின்ற ஒரு சில முரண்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியிலும் பாரிய பின்னடைவுக்கு காரணமாக இருந்த காரணத்தினால்தான் நாங்கள் கடந்த காலத்தைப்போல பாரிய வெற்றியை அடைய முடியாமல் போய்விட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.

அதேபோல இது தொடர்பாக எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தி இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *