பாகிஸ் தானில் இந்திய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் பாராளுமன்ற சபை பரிந்துரை செய்துள்ளது. செய்தி ஒலிபரப்புத் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இக் கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் ஹெரி ரெகிமான் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் தொலைக்காட்சி சேவைகளை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு இந்திய அரசு தடை செய்துள்ள நிலையில், பாகிஸ்தானிலும் இந்திய தொலைக்காட்சி சேவைகளின் ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டுமென எம்.பி.யான தாரிக் அஜீம் கோரியுள்ளார்.
இதேவேளை, மற்றொரு எம்.பி.யான ஹாஜி அஜீல் தெரிவிக்கையில்; இந்தியாவின் பொழுதுபோக்கு சேவை தொலைக்காட்சிகளைத் தான் தடை செய்ய வேண்டும். செய்திச் சேவைகளைத் தடைசெய்தால் இந்தியாவின் பிரசாரங்களை அறியமுடியாதெனத் தெரிவித்தார். ஆனாலும், மின்னியல் மற்றும் தொலைத் தொடர்புகள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து இந்திய தொலைக்காட்சி சேவைகளிற்கு தடை விதிக்கப்படுமென ஊடகத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.