”ஆறுமுகன் தொண்டமானும் தனது மக்களை எந்தக் காலத்திலும் கைவிடாது சேவை செய்தவர்” – எம்.ஏ சுமந்திரன்

”ஆறுமுகன் தொண்டமானும் தனது மக்களை எந்தக் காலத்திலும் கைவிடாது சேவை செய்தவர்” தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நான் திரு தொண்டமானுக்காக இரு தடவைகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தேன். ஒரு வழக்கு மிகவும் முக்கியமானது. மலையகத்திலும் தலைநகரிலும் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக உச்ச நீதிமன்றில்   தான் அமைச்சரவையில் இருந்த போதும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து என்னை நடத்துமாறு கேட்டிருந்தார்.

அந்த வழக்கிலே பல முக்கியமான நீதிமன்ற உத்தரவுகளை நாம் பெற்றிருந்தோம். கைதானவர்கள் விடுவிக்கப்படுவதற்கு மேலதிகமாக வீடுகள் சோதனை செய்யப்படும் நேரம், முறை என்பனவும் அந்த உத்தரவுகளிலே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எமது அரசியல் கட்சி உருவான வரலாறும் மலையக தமிழ் மக்களது பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது.

திரு ஜீ.ஜீ பொன்னம்பலம் அந்த வரலாற்று அநீதிக்கு துணை போனதற்கு எதிராகவே திரு எஸ். ஜே. வி. செல்வநாயகம் அ. இ. தமிழ் காங்கிரசிலிருந்து விலகி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்தார். திரு சொளமியமூர்த்தி தொண்டமான் தமிழர் ஐக்கிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

பின்னர் அமைச்சரான போதும் மற்ற தமிழ் தலைவர்களில் இணக்கப்பாடு இருந்தது. திரு.அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றிய போது அதை எதிர்த்தவர். ஆறுமுகன் தொண்டமானும் தனது மக்களை எந்தக் காலத்திலும் கைவிடாது சேவை செய்தவர்.

அவரது இறுதிக் கிரியைகளில் பங்குபற்றவதற்காக நான் கொட்டகலைக்குச் சென்றிருந்தபோது அந்த மக்களது துக்கத்தை நேரிலே பார்த்தேன். எனது கட்சியின் அனுதாபங்களையும் இந்த வேளையில் பதிவு செய்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *