இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது! : த ஜெயபாலன்

Protest_01_16Jan09‘Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ –  ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஓங்கி ஒலிக்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக  இடம்பெற்ற கண்டனப் போராட்டத்திலேயே இலங்கை அரசின் மீதான கடுமையான கண்டனம் ஓங்கி ஒலிக்கப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற், கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேர்க் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ஜனவரி 15 பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கும் தேசம்நெற் தனது முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது தெரிந்ததே.

சண்டே லீடர் அசிரியர் லசந்த விக்கிரமதுங்கா உட்பட இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்! ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்! தமிழ் சிங்கள் முஸ்லிம் மலையக மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! சாதாரண மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்! ஏனைய சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும்! என்பவற்றை முன் வைத்து இப்போராட்டம் நடாத்தப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தில் தமிழர்கள் அல்லாத பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தங்கள் குரல்களை ஓங்கி ஒலித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இனங்களுக்கு இடையேயான நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பினரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். ‘நாங்கள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் லண்டன் விஜயத்தைக் கண்டித்து இடம்பெற்ற போராட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட பதாகைகளை இப்போராட்டத்திற்கும் எடுத்து வந்தோம். அன்றும் சரி இன்றும் சரி மகிந்த அரசு தனது பாசிசப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது’ என்று அவ்வமைப்பின் உறுப்பினர் சபா நாவலன் தெரிவித்தார். ‘ஆறு மாதங்களுக்கு முன் அந்த வசனங்களை எழுதும் போதிருந்த மகிந்த அரசின் ஒடுக்குமுறைகள் இன்னும் இன்னும் மிகுதியாகிச் சென்று இன்று லசந்த போன்றவர்களின் கொலைகளில் முடிந்து உள்ளது என்று தெரிவித்தார் சபா நாவலன்.

எஸ்எல்டிஎப் அமைப்பினரும் இக்கண்டனப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்த எஸ்எல்டிஎப் முக்கியஸ்தர் ஒருவர் கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனலின் பனரை கழற்றி அநாகரீமாகச் செயற்பட்டதாக கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் அமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனை சொலிடாரிற்றி போர் பீஸ் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

‘Stop! War on Journalists’ என்ற பிரசுரமும் அங்கு விநியோகிக்கப்பட்டது. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, சுயாதீன ஊடக இயக்கம், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேக் ஆகிய அமைப்புகள் இப்பிரசுரத்தை வெளியிட்டு இருந்தன.

ஜனவரி 08  கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை – அத்துருகிரிய வீதியில்  காலை 10:30 மணியளவில் சண்டே லீடர் பிரதம ஆசிரியர்லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் கடுமையான காயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்துள்ளார். அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க இருந்தார்.

Protest_02_16Jan09சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘மிக்’ விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக அவதூறான செய்திகள் வெளியிட்டதால் தனக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்த கோதபாய ராஜபக்ச லண்டே லிடர் வெளியீட்டாளர்களுக்கும் அதன் ஆசியிரயர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் கோதாபய ராஜபக்ஷ பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாதென “சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில், 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் நேரடியாக தமது கருத்துக்களுக்காக கொல்லப்பட்டமை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக War of Words : Freedom of Expression in South Asia – May 2005 அறிக்கையில் Article 19 என்ற ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு நாடுகளை பத்திரிகைச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. 167 நாடுகளைக் கொண்ட 2005ம் ஆண்டு வரிசைப்படுத்தலில் இலங்கை 115வது இடத்தில் உள்ளமை இலங்கையில் ஊடகங்களின் நிலையை விளங்கிக் கொள்ள உதவும்.

லசந்த விக்கிரமதுங்க தனது படுகொலைக்கு இரு வாரங்களுக்கு உள்ளாகவே மற்றுமொரு ஊடகவியலாளரான சோனாலி சமரசிங்கவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் சிறந்த ஊடகவியலாளருக்கான சர்வதேச விருது ஒன்றினை சோனாலி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசுக்கு எதிரான லசந்தாவின் எழுத்துக்களுக்கு இவரும் உறுதுணையாக இருந்தவர். இவர் இன்றைய மகிந்த அரசின் கடுமையான விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லசந்தவின் மரணம் இலங்கை ஊடகவியலாளர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லசந்தவின் படுகொலைக்கு 24 மணிநேரத்திற்கு முன் ஜனவரி 6 அன்று மகாராஜா நிறுவனத்தின் சிரச தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் கடந்த ஆண்டு சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும் தெரிந்ததே.

லசந்தாவின் கொலைக்கான சூத்திரதாரியாக மகிந்த அரசு நோக்கியே விரல்கள் நீள்கின்றன. ஆனால் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய விதத்தில் செயற்படும் சக்திகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ஜனவரி 14 அன்று அலரி மாளிகையில் தன்னைச் சந்தித்த சட்டத்தரணிகளைக் கேட்டுள்ளார். இலங்கையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அன்று ஜனாதிபதியைச் சந்தித்தனர். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் கட்டத்துக்கு படைத்தரப்பு முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் சில தீய சக்திகள் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறியிருக்கும் ஜனாதிபதி எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்ககூடிய பலம் அரசுக்கு இருப்பதாகவும்  மிரட்டல் தொனியில் குறிப்பிட்டு உள்ளார். இது மகிந்த அரசு தன் மீது வரும் விமர்சனங்களைத் எவ்வாறு திட்டமிட்ட முறையில் கையாளப் போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவே உள்ளது.

Show More
Leave a Reply to Poddu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Poddu
    Poddu

    The long list of assassination of media personnel include RK Ratnasingam in 1985, M. Amirthalingam and I. Shanmugalingam in 1986, Nithyananthan in 1987, Rajani Thiranagama and K. S. Rajah in 1989, Richard de Zoysa in 1990, Rohana Kumara and Nadarajah Atputharajah in 1999, Mylvaganam Nimalarajan in 2000, Aiyathurai Nadesan and Balanadarajah Iyer in 2004, Dharmaretnam (Taraki) Sivaram, Arasakumar Kannamuthu, Relangi Selvarajah, Manickam Kamalanathan and Yogakumar Krishnapillai in 2005, Subramaniam Sugirtharajan, Bastian George Sagayathas, S. Ranjith, Suresh Kumar, Rajiv Kumar, Sampath Lakmal de Silva, Mariathas Manojanraj, Sathasivam Baskaran and Sinnathamby Sivamaharajah in 2006, S. T. Gananathan, Chandrabose Suthaharan, Selvarajah Rajivaram and Sahathevan Deluxshan in 2007, and P. Devakumaran, Mahendran Varadhan, and Rashmi Mohamed in 2008.

    by Lionel Bopage

    Reply
  • nada
    nada

    I think. Mahinda will give a good solution for everything.

    Reply
  • rohan
    rohan

    I think. Mahinda will give a good solution for everything.

    புல்லரிக்க வைக்கிறீங்க,நடா.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    முழு ஆதரவையும் வழங்கிய தேசம்நெற் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது.

    //…. சண்டே லீடர் பிரதம ஆசிரியர்லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது…..//
    சிறிய திருத்தம்…லசந்தா மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதலில் தெரிய வந்த போதும் விசாரணைகளின் பின்னர் ாவர் மரணம் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டதாலேயே நிகழ்ந்ததாக தெரியவந்தது. இதனை வெளிக்கொணர்ந்ததாலேயே அவரது மனைவி நாட்டைவிட்டு வெளியேறி சிலகாலம் இருந்தார். அப்போது அவர் வழங்கிய செவ்விகளிலும் இதனைத்தெரிவித்திருந்தார்.

    ///….அங்கு வந்திருந்த எஸ்எல்டிஎப் முக்கியஸ்தர் ஒருவர் கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனலின் பனரை கழற்றி அநாகரீமாகச் செயற்பட்டதாக …//
    இவர்கள் எல்லாம் பெயருக்குத்தான் ஜனநாயக வாதிகள். இவ்வளவும் சொல்லி விட்டு யார் அந்தப் புண்ணியவான்(ள்) எனச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?

    Reply