“ஒக்ரோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது” – ஈ.சரவணபவன்

“ஒக்ரோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது” என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (22.10.2020) அறுதிப்பெபும்பான்மையுடன் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில்  20ஆவது திருத்தம் தொடர்பாக ஈ.சரைவணபவன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஒக்ரோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கொடுத்து , ஜனநாயக ரீதியில் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும் 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் 91 மேலதிக வாக்குகளால் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நேற்று நிறைவேறியுள்ளது.

ஜனநாயகத்தின் பேரைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ராஜபக்சக்களின் சதியை திட்டமிட்டபடி நிறைவேற்றியுள்ளனர். இதன் விளைவை ஒட்டுமொத்த இலங்கையர்களும், எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது.

இந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து முதுகில் குத்தி விட்டு கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே முக்கியமான காரணம்.

அவர்களில் 6 பேர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரவிந்தகுமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா ஆகிய எட்டுப்பேரே இந்தத் துரோகத்தைப் புரிந்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி மலர துணைபோயுள்ளனர்.

20 ஆவது திருத்தம் நிறைவேறிவிட்டதே என்ற துயரை விடவும், இந்த எட்டுப் பேரும் செய்த துரோகமே இன்னும் அதிக வலியை மக்களிடம் உண்டாக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் முஸ்லிம் மக்களை ஈவிரக்கம் இல்லாமல், ஐந்தறிவு ஜந்துக்கள் போல நடத்துவதற்கும், கலவரங்களைத் தூண்டி விட்டு இழப்புக்களை ஏற்படுத்துவதற்கும் சூத்திரதாரிகளான ராஜபக்சக்களுக்கு , அதே முஸ்லிம் இனத்தின் பிரதிநிதிகள் தோள் கொடுக்க எப்படி முடிந்தது?.

அவ்வளவு எளிதில் தங்கள் இனத்துக்கு ராஜபக்சக்கள் இழைத்த கொடுமைகளை மறந்துவிட்டு, சுயநலத்துக்காக ஓடிப்போய் ஒட்டிக்கொள்ளபவர்களை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என அழைக்கமுடியுமா? அதேபோன்றுதான் அரவிந்தகுமாரும் , 20 ஆம் திருத்தத்துக்காக ராஜபக்சக்களுக்கு அடிமையானதன் மூலம் தனக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னமும் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க மனமில்லாமல் நாடகமாடும் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததம் மூலம் தன் மீது பெரும் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தைப் படுகுழிக்குள் தள்ளியுள்ள 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்ற துணைபோனதன் மூலம் இந்த எட்டுப் பேரும் செய்த துரோகத்தை மக்கள் மன்னித்தாலும், வரலாறும், காலமும் அவர்களை மன்னிக்கப் போவதில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *