மலையகத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்த அனைவரும் எம்முடன் இணைய வேண்டும் – மனோ கணேசன் எம்.பி.

mano_ganesan_mp_.jpgநீண்ட காலமாக நாம் எதிர்பார்த்து நின்ற மலையகத்தை மாற்ற வேண்டிய அந்த வரலாற்று வேளை இன்று வந்துவிட்டது. அதில் கொழும்பு புறக்கோட்டையிலும் ஏனைய பகுதிகளிலும் புடவை , இரும்பு, நகை, உணவு மற்றும் ஏனையதுறைகள் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழர்களும் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று எமது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மனித உரிமை மீறல்களுக்கும் அநீதிகளுக்கும் எதிரான எமது போராட்டம் இன்று சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இராஜதந்திரிகளின் கவனத்தை எம்மை நோக்கித் திருப்பியுள்ளது. தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் எனக்கும் எமது கட்சிக்கும் கிடைத்துள்ள அங்கீகாரத்தையும் சக்தியையும் எமது மலையக உடன்பிறப்புகளுக்காக முழுமையாக பயன்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளேன். மிக அதிகமாக உழைத்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெறும் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. கொழும்பிலே ஆரம்பித்த எங்களது வெற்றிப்பயணம் இன்று சப்ரகமுவ மாகாணத்தின் ஊடாக மத்திய மாகாணத்தைச் சென்றடைந்துவிட்டது.

மத்திய மாகாணசபைத் தேர்தலிலே எமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கொழும்பு வாழ் மலையக மாவட்ட தமிழர்கள் செய்ய வேண்டியது இதுதான் . நுவரெலியா , கண்டி மாவட்டங்களைச் சார்ந்த கொழும்பிலே தொழில் ரீதியாக வசிக்கும் பெரியவர்களும், இளைஞர்களும், யுவதிகளும் ஜனவரி , பெப்ரவரி மாதங்களில் தமது சொந்த ஊர்களுக்கு ஒவ்வொரு வார விடுமுறையிலும் சென்று தத்தமது தோட்டப்பகுதிகளிலும் நகரங்களிலும் எனது மலையக மாற்றத்திற்கான செய்தியையும் பிரசாரத்தையும் மேற்கொள்ள வேண்டும். நுவரெலியாவிலும் , கண்டியிலும் வாழும் தமது உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எம்மை ஆதரித்து வாக்களிக்கும்படி தொடர்பு சாதனங்கள் மூலமாக எடுத்துக்கூற வேண்டும். பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தவறாமல் எமது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *