“வன்னி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வுகளை வழங்காது நிரந்தரமாக குடிநீர் திட்டமொன்றை உருவாக்கிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று(28) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
“வடமாகாணத்தில் குறிப்பாக மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வுகளை வழங்காது நிரந்தரமாக குடிநீர் திட்டமொன்றை உருவாக்கிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது வரையில் 45 வீதமானவர்களுக்கே சுத்தமான குடிநீர் கிடைக்கின்றது. அதுவும் மழைநீர் அல்ல, நிலத்தடி நீரே அவ்வாறு குடிநீராக வழங்கப்படுகின்றது. இந்த நிலத்தடி நீர் சிறுநீர நோயாளர்களை உருவாக்குகின்றது.
நாட்டில் சிறுநீரக நோயாளர்கள் அதிகமாக உள்ள மாவட்டத்தில் வன்னி மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே குடிநீரை வழங்கவும் தூய்மையாகவும் நோய்கள் இல்லாத வகையிலும் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்லாறு, பாலியாறு ஆகிய ஆறுகளின் ஊடாக அதிகளவினால நீர் கடலுக்கு செல்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வரும் மண்டைக்கள் ஆறு ஊடாகவும் அளவுக்கு அதிகமான நீர் கடலுக்கு செல்கின்றது. எனவே இந்த மூன்று இடங்களை மையப்படுத்தி நீர் தேக்கங்களை அமைத்து எமது பகுதி மக்களுக்கு குடிநீரை வழங்க முடியும்.
குடிநீர் எமது மக்களுக்கு அத்தியாவசியமானதாகும், அதேபோல் எமது மக்கள் சிறுநீரக நோயாளர்களாக மாறுவதை தடுக்கவும் வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.