“அரசாங்கம் நீதிமன்றங்களை தமிழர்களின் உரிமைகளை அடக்குகின்ற கருவியாக பயன்படுத்தப்படுவதாக” பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“கடந்த வாரம் 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தமிழர்களின் விடுதலைக்காக, உரிமைக்காக தனது உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்கின்ற ஒரு புனிதமான காலமாகும். குறித்த காலப்பகுதியில் அரசாங்கம் பொலிஸாரையும் உளவுத்துறையினரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி மிகவும் மோசமான அடக்குமுறையின் ஊடாக ஜனநாயக உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக இன்று நீதிமன்றங்களை மாற்றி தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை மறுத்து இருக்கின்றது. அதற்காக எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், போரால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல் எவ்வளவு முக்கியம் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக புரியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்துகின்ற செயற்பாடுகள், உங்களுடைய அரசாங்கம் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சி புரிந்தபோதோ,அதற்கு பின்னரோ அல்லது கடந்த வருடம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னரோ உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், மனதளவில் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அத்தகைய இடத்தில் அவர்களது உறவுகளை நினைவு கூர்வது என்பது அவர்களது மனதை ஓரளவேனும் ஆறுதல்படுத்தும். மருத்துவ தன்மையில் யோசித்தாலும் கூட நினைவேந்தலுக்கு அனுமதித்திருக்க வேண்டும். இலட்சக்கணக்காக மக்களை வீடுகளுக்கு 7 நாட்கள் சிறைப்பிடித்த நிலைமை போன்றுத்தான் மீண்டும் உருவாக்கப்பட்டு உளரீதியான தாக்குதலுக்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.