வவுனியாவில் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவும் எயிட்ஸ் – ஓரினச்சேர்க்கையே காரணம் ! – பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் எச்சரிக்கை !

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையினால், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

வவுனியா வைத்தியாசாலையில் நேற்று (30.11.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கே.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது,

“உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். 11 நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.

பொதுவாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்றபோது தொற்றுகிறது. அதேபோல நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும் போது கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக இருக்கின்றது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் தமக்கு தெரியாதவர்களுடன் இருக்கும்போது பாலியல் தொடர்பான தொடர்பை வைத்திருக்க கூடாது.

வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பாலியல் தொழிலாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை என்றாலும் அவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொற்று கடத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.

ஆகவே, முற்றுமுழுதாக இலங்கையில் இருந்து எயிட்ஸ் தொற்றுனை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை எச்.ஐ.வி.பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனையாக இருக்கிறது. இந்த கொவிட் காலத்தில் விழிப்புணர்வுகளைச் செய்வதில் சிரமம் இருப்பதால் ஊடகங்கள் ஊடாக இதனைச் செய்ய விரும்புகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *