“பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்காக தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள்” – பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

“பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்காக தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள்”  என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று(03.12.2020) பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது  விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களுடன் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருடன் பேசினேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம்.

மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்று பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. கடல் மார்க்கமாக அவர்களை மீட்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் அது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தால் அது தாமதமானது.

பின்னர், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்காட்சியில் அரசினால் அறிவிப்பு விடப்பட்டது.அதனை கேட்டு நான் அச்சப்பட்டேன். ஏனெனில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப்படியேனும் வெளியேற்றிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

போராட்டம் தொடங்கிய வேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால் 17 ஆயிரம் பொதுமக்களே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தனர் என அரசு கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர். ஆகவே இலக்கங்களில் அரசு பொய்களை கூறிக் கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164 ஆயிரம் மக்களை அரசு கணக்கில் எடுக்கப்படவில்லை.

4 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான விசா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு விசா வழங்கவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்கவேண்டும். ஆனால் அவர்கள் குற்றவாளிகள். அதனால் தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்படவேண்டும். இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சுக்கு பொறுப்பான சரத்வீரசேகர சற்று முன்னர் இந்தச் சபையில் ஒன்றை கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும். அதேபோல் மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் ஒன்றைக் கூறினார். பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளை அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது. இதுதான் போர் குற்றம். ஒரு நபரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றமையே போர் குற்றமாகும். இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்புத் தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு, கிழக்கிலேயே உள்ளன. இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களது நிலைப்பாடாகும். விடுதலைப்புலிகளின் பெயரைக்கூறி தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *