இராணுவத்தினர் நாட்டில் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் தொடர்நதும் கடுமையான முறையில் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் குறித்த நபர்கள் தனது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் இன்று காலை ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை எனவும் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானாவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் பணம் அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.