“கடந்த ஆட்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது” என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04.12.2020) வெள்ளிக்கிழமை, கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,
கடந்த ஆட்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது. இன்று அது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இன்று வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 20 வீதமாகும். இது தற்காலிக அரசியல் நியமனங்களின் மூலமாக தீர்க்க முடியாது. எனவே நீண்டகால தீர்வுகள் இதன்போது கண்டறியப்பட வேண்டும். அதில் சர்வதேச நிறுவனங்களை அனுமதித்தாலும் கூட தேசிய ரீதியிலான பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதனையே அரசாங்கம் இன்று முன்னெடுத்து வருகின்றது.
இப்போது முதலீடுகள் வருகின்றது, ஹம்பாந்தோட்டையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் இரண்டாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. எனவே சிறு மற்று மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.