தமிழரை கொல்லவேண்டுமென இராணுவம் எண்ணவில்லையென ஜெயலலிதா கூறியிருப்பது ஆதரவான வார்த்தை இல்லையா? – கருணாநிதி கேள்வி

karunanithi.jpgஇலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை என்று ஜெயலலிதா கூறியிருப்பது இலங்கை இராணுவத்திற்கு ஆதரவான வார்த்தைகளா இல்லையா என்று முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்விபதில் அறிக்கை வருமாறு;

இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக தான் பேசவில்லை என்றும் அப்படி மாயத் தோற்றத்தை உருவாக்க சில தீய சக்திகள் முயல்வதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

இலங்கை வேறுநாடு. அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதில் ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழரைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள இராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல என்று ஜெயலலிதா அளித்த பேட்டி 18ஆம் திகதி அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழரைக் கொல்ல இராணுவம் எண்ணவில்லை என்று அவர் சொன்னது இலங்கை இராணுவத்துக்கு ஆதரவான வார்த்தைகள் இல்லையா? ஜெயலலிதா முதலில் ஒன்றை சொல்வதும் பிறகு அப்படி சொல்லவே இல்லை என்று வாபஸ் வாங்குவதும் இது முதல்முறை அல்ல. இதுதான் கபட நாடகம். இது புரியாமல் பன்னீர்செல்வம் எதையோ நாடகம் என்றும் அதில் நடிக்க தான் தயாராக இல்லை என்றும் சொல்கிறார்.

இலங்கையில் தமிழர்களின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று அறிக்கையில் ஜெயலலிதா கூறியியுள்ளாரே?

இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இலங்கைத் தமிழருக்காக கருணாநிதி திரட்டிய நிதி, அந்த மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அதை கருணாநிதி தன் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை பற்றி?

அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு கோடி ரூபாவுக்கான காசோலைகள் யாரிடம் இருந்து வந்தது என்றே தெரியாமல் தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டேன் என்று நீதிமன்றத்திலேயே சொன்னவர் அல்லவா. தான் திருடி, பிறரை நம்பாள் என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்வாறு கூறியுள்ளார். அந்த நிவாரணப் பொருட்கள் எல்லாம் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன என்று பல நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.

இலங்கைத் தமிழர் நிவாரண நிதியைப் பொறுத்தவரை ஒவ்வொருவரிடம் இருந்தும் காசோலையாகத்தான் வழங்கப்பட்டதே தவிர யாரும் தொகையாக வழங்கவில்லை. என்னிடம் உதவி வழங்கிய அனைவரது பெயரும் ஏடுகளில் வெளியிடப்பட்டது. அந்த நிதி ஒவ்வொரு நாளும் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு அரசு இருப்பில் செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கியது போக மீதி இன்றளவும் அரசு கணக்கில் இருக்கிறது.

மேலும் யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் எழுதிய கடிதம் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு மூலமாக கிடைத்தது. இந்திய அரசால் வழங்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைத்தது. ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்கள் அதில் இருந்தன. சமையலுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. போர் நடந்துகொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக மக்களிடம் இருந்து வந்த நன்கொடைப் பொருட்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்? என்று அதில் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது என்ற தலைப்பில் நீங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை காட்ட முன்வராமல் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்ததும் அவர்களை ம.தி.மு.க.பின்பற்றியதும் பற்றி?

இன்னும் தமிழ் இனம் நெல்லிக்காய் மூட்டையாகத்தான் இருக்கிறது என்று எண்ணி நெஞ்சம் பதைபதைக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இதில் தி.மு.க.செயற்குழுவை மட்டும் கூட்டி முடிவெடுப்பது சரியல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

தி.மு.க.ஜனநாயக இயக்கம். அதன் தலைவராக நான் இருந்த போதிலும் சில முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து விட முடியாது. முடிவுகளை எடுக்கலாம் என்ற போதிலும் நான் அவ்வாறு சர்வாதிகாரமாக நடந்து கொள்வதில்லை. முதலில் கட்சியில் முடிவெடுத்து பின்னர் அனைத்துக் கட்சிகளையோ, தோழமைக்கட்சிகளையோ கலந்தாலோசித்துத்தான் முடிவு அறிவிப்போம். அனைத்துக் கட்சிக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் கட்சியினர் கூட முன்னதாக தங்கள் கட்சிக்குள் விவாதித்து ஒரு முடிவு எடுத்துக் கொண்டுதான் வருவார்கள்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கூறும்போது, ?காங்கிரஸ் அரசையும் மத்திய அரசையும் தமிழக அரசு பகைத்துக் கொள்ள விரும்பவில்லை எனத் தெரிகிறது? என்று கூறியிருக்கிறாரே?

ஆம். தி.மு.க.வோடு தோழமை கொண்டுள்ள கூட்டணியில் உள்ள கட்சியின் அரசுதான் காங்கிரஸ் அரசு. கூட்டணி தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என தி.மு.க.நினைப்பது தவறல்லவே என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *