தமிழ்மக்கள் தினம் தினம் செத்துமடியும்போது அரசாங்கத்தைப் பாராட்டியிருப்பது வேதனை தருகிறது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

yasusi.jpgவன்னி யில் விமானத் தாக்குதல்களாலும் பீரங்கித் தாக்குதல்களாலும் ஆட்லறி ஷெல்த் தாக்குதல்களினாலும் தமிழ் மக்கள் தினம் தினம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலை குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் அரசாங்கத்தைப் பாராட்டியிருப்பது பெரும் வேதனை அளிப்பதாகவுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசியிடம் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் யசூசி அகாசியை சந்தித்து கலந்துரையாடினார்கள். இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்திருப்பதாவது;

“வன்னியில் இன்று இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்று யுத்த சூழலில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மக்களின் ஜனநாயக சுமைகளை அரசாங்கம் அப்பட்டமாக மீறி வருகிறது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை. திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மூதூரில் தொண்டர் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகத்தின் கவனத்தை திசை திருப்ப ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுவுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவென சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது. அதில் தமிழ் மக்களின் பிரதிதிநித்துவம் இல்லை. 13 ஆவது அரசியல் அமைப்பு அமுல்படுத்தப்படவில்லை.

இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பு கைவிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியும் நாங்களும் வடக்கு, கிழக்கு இணைப்புக்குத் தயாராக இருந்த போதும் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஆட்சியின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது. புலிகளை இராணுவ பலத்தின் மூலம் அழித்து விட்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் விடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கி விடவே அரசாங்கம் முயன்று வருகிறது. இதற்காகவே அரசாங்கம் கொடூரமான போரை நடத்தி வருகிறது. வன்னியில் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக எதனையும் பேசாமல் பாராட்டியிருக்கிறீர்கள். இப் பாராட்டுரையை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்தி இனத்தை ஒழிப்பதிலேயே ஈடுபடப் போகின்றனர்’ எனத் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த ஜப்பானிய விஷேட தூதுவர்; இலங்கையில் தமிழ் மக்கள் உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதையே ஜப்பான் அரசாங்கம் விரும்புகிறது. இலங்கையில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றுவது முக்கியமானது எனக் கூறினார். அரசாங்கத்தைத் தான் பாராட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பத்மினி சிதம்பரநாதன், கனகசபை பத்மநாதன், சந்திரநேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *