பிரபாவின் வரட்டு கெளரவமும் பிடிவாதமுமே தமிழர்களுக்கு பேரழிவைத் தேடித்தந்தது – கருணா

karuna.jpgபுலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் வரட்டு கெளரவமும், பிடிவாதக் குணமுமே தமிழ் மக்களுக்கு அழிவைத் தேடித் தந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் வட பகுதியை புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிப்பதன் மூலம் தமிழ் மக்களே நன்மை அடைவர்.  இதனூடாக சிங்கள மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. தமிழ் மக்கள் சுதந்திரமாக ஜனநாயக உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்தினரின் பொய்ப் பிரசாரங்களை நம்பி அவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர் புலிகள் இயக்கத்தினர் அழிவின் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் கூறினார். ரன்பிம (தங்க பூமி) காணி உறுதி வழங்கும் தேசிய வைபவம் அலரி மாளிகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாறுகையில், இலங்கையில் தமிழீழம் அமைக்க முடியாது. அவ்வாறு அமைக்கப்படுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது. அதனால் சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசிப்போம் என புலிகள் இயக்கத் தலைவருக்கு எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் அந்த யோசனையை நிராகரித்ததுடன், யுத்தத்தின் மூலம் தமிழீழம் அமைக்கலாம் எனப் பிடிவாதமாக இருந்தார். அதனால் நான் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி னேன்.

புலிகள் இயக்கத்தில் 22 வருடகாலம் உறுப்பினராக இருந்த நான், அக்காலம் முழுவதும் யுத்தக் களத்திலேயே இருந்தேன். ஆனால் புலிகள் இயக்கத் தலைவர் ஒருபோதுமே யுத்த களத்திற்கு வந்திராதவராவார். அவர் ஒரு மாயை. அவரது வரட்டு கெளரவமும், பிடிவாதக் குணமும்தான் தமிழ் மக்களுக்கு, அழிவையும், துன்பங்களையும் தேடிக் கொடுத்தது. அதனால்தான் அவரை தமிழ் மக்களில் 95 சதவீதமானோர் நிராகரித்துவிட்டனர்.

பாதுகாப்புப் படையினர் கிழக்கு மாகாணத்தை விடுவித்ததன் பயனாக அங்கு மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள். பாரிய அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தில் கிழக்கு உதயம் திட்டம் ஊடாக அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வேளையில், வடபகுதியை வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அதனால் இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் அன்னாரின் கரங்களைப் பலப்படுத்துவது காலத்தின் அவசியத் தேவை யாகும்.

பொய்ப்பிரசாரம் செய்வதில் புலிகள் வல்லவர்கள். இதனை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தைப் போன்று மீண்டும் கெரில்லாப் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் இங்கு கிடையாது. ஆரம்ப காலத்தைப் போன்று புலிகள் இயக்கத்தினருக்கு இப்போது தமிழ் மக்களின் ஆதரவும் கிடையாது. அவர்கள் தமிழ் மக்களுக்கு அழிவையும், துன்பங்களையும் தேடிக் கொடுத்திருப்பவர்கள்.

இதே நேரம் பாதுகாப்புப் படையினர் தொழில்நுட்ப ரீதியாக இப்போது பாரிய வளர்ச்சி அடைந்துள்ளனர். கெரில்லா போராட்டத்தின் மூலம் இவ்வளர்ச்சிக்கு முகம் கொடுக்க முடியாது. அதனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்நாட்டுத் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தின் ஊடாக நிதியுதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

4 Comments

 • பார்த்திபன்
  பார்த்திபன்

  இப்ப எந்த வரட்டுக் கெளரவம் உங்களுக்கும் பிள்ளையானுக்கும் பிரைச்சினை செய்யுது. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே. எனியாவது திருந்தி மக்களுக்கா பாடுபடப் பாருங்கள்.

  Reply
 • xxd
  xxd

  அரசியல் தீர்க்க தரிசனம் பேசுகின்ற நபருக்கு புலிகள் கிழக்கு நோக்கி வெருகல் ஆற்றுப் பக்கமாக வருகின்ற போது இதே இனவெறி அரசபடைகள் தான் உதவி புரிந்தன. அன்றைய பொழுதில் அரசபடைகள் புலிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டன ஏன்என்பதை அரசியல் கற்ற மேதை புரிந்து கொள்ளவில்லை. கிழக்கின் போராளிகள் கொல்லப்பட்டதற்கு இந்த இனவாத அரச இயந்திரங்களும் ஒத்துழைத்ததை தற்பொழுதைய பிழைப்புவாதச் சிந்தனை மறந்து விடுகின்றது. இதே இனவாத அரசு மக்களை சுதந்திரமாக விடும் என்று கதையும் விடுகின்றனர்.

  அரசியல் தீர்க்க தரிசனம் கொண்ட நபர் எவ்வாறான பாதையை தெரிவு செய்திருக்க வேண்டும். இவரால் தமிழ் மக்களுக்கான சுயநிர்யணயப் போராட்டத்தை தனித்துவமான முறையில் இவரால் ஏன் கொண்டு செல்ல முடியவில்லை போலிப் புரட்சி பேசிய டக்கிளஸ் பாணியில் கிழக்கில் எல்லாம் ஒளிர்கின்றது என பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஜனநாயகப் பேர்வழிகள் மக்களின் அரசியல் உரிமையை வெறும் சோற்றுப் பிரச்சனைக்கு ஒப்பாக பார்க்கின்ற அரசியல் அறிவைத் தான் கொண்டிருக்கின்றார்கள்.

  முன்னர் குண்டைப் பற்றிக் கதைத்த மக்கள் இன்று அங்கு அபிவிருத்தி நடக்கின்றது இங்கு நடைபெறுகின்றது எனப் பேசிக் கொள்கின்றனராம். அதே போல தம்மக்களுக்கு அந்தக பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்கவில்லை இந்தப் பள்ளிக் கூடத்தில் இடம் கிடைக்கவில்லை எனப் பேசிக் கொள்கின்றனராம். ஆக மக்களின் சிந்தனை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பெருமிதம் கொள்கின்றனர். மக்களின் சிந்தனையை புலிகள் மழுங்கடித்தது போதாது என்று இவர்களும் ஒடுக்குமுறையாளனுக்கு விசுவாசமாக மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கின்றனர்.

  புலியெதிர்ப்பாளர்களின் இன்றைய உளவியல் என்பது எப்படியாவது புலியை அழிக்க வேண்டும் என்பதே. புலிகள் அழிந்தபின்னால் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் ஒடுக்குமுறையாளனிடம் இருந்து பெற்றுக் கொடுத்துவிட முடியும்என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
  தொடரும்.. ……

  Reply
 • xxd
  xxd

  புலியெதிர்பாளர்கள் எத்தனை போராளிகளை இழந்திருக்கின்றனர்? எவ்வளவு நிலப்பரப்தை இழந்திருக்கின்றனர்? என்பதை அரச பிரச்சாரர்களாக இருந்து செய்வதன் மூலம் புலியெதிர்ப்பாளர்கள் தமது உளவியல் தேவையை நிவர்த்தி செய்கின்றனர். மக்கள் கொல்லப்படுவதைப் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. மக்கள் திறந்தவெளிச் சிறைக்குள் வாழ்வதுபற்றி அக்கறை இல்லை.

  ஏன் சிங்கள க்ட்சி பின்வருமாறு கூறுகின்றது
  “”வட பகுதியில் பல இடங்களை புலிகளிடமிருந்து மீட்டு அவர்களை தோற்கடித்துள்ளதாக கூறும் அரசாங்கம் அதனை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியின் சகல இடங்களிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார குற்றஞ்சாட்டினார். ” வாக்குக்காக கூறும் பிரச்சாரம் என்றாலும் கூட புலியெதிர்ப்பாளர்கள் அரசபயங்கரவாதத்தினை எதிர்த்து குரல் கொடுக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.

  இன்றைக்கு தேவையானது யுத்த நிறுத்தமாகும். யுத்த நிறுத்தத்தின் மூலம் புலிகள் பலன் பெறுவார்கள் என்ற காரணத்தினால் புலியெதிர்ப்பாளர்கள் யுத்த நிறுத்தம் வேண்டாம் என்று கூறுகின்றனர். …. மக்களுக்கான தேவையை முதன்மைப் படுத்துவததே முக்கியமானதாகும்.

  Reply
 • Kullan
  Kullan

  …….. எப்படித்தெரியும் சுதந்திரமும் அதன் பெறுமதிகளும். அம்மான் புலிகளுக்குச் செய்த அதே வேலை இவருக்கு பிள்ளையானாலோ அரசாலே கிடைக்கும். அரசு தமிழ் இனவழிப்புக்கு இவர்களைப் பாவித்த பின் வெட்டிவிடுவது மட்டுமல்ல தட்டியும் விடுவார்கள். அப்போ தெரியும் அம்மானுக்கு. பிரபா போகும் பாதை பிழை என்றாலும் நீர் சரியான பாதையில் மக்களை வழிநடத்தியிருக்கலாம் தானே. ஏன் இனவழிபாளருடன் சேர்ந்து இருக்கிறிர்.

  Reply