முடிவின் தொடக்கம் – மக்களின் அவலத்தின் முடிவல்ல: சேனன்

Tamil_Boy_in_a_Bunker‘புலிகளின் அடிமைத்தனத்தில் இருந்து எமது குழந்தைகளை விடுவித்த இராணுவ வீரர்களுக்காக இன்று குடிசையில் இருந்து மாளிகை ஈறாக ஒவ்வொரு கூரையிலும் தேசியகொடி பறக்கிறது’ என்று முழங்கி ஜனவரி 26ல் முல்லைதீவில் இராணுவம் நுழைந்ததை கொண்டாடினார் நமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. – என்னே கரிசனை!

ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் தெற்கில் இனவாதிகளின் கூத்தும் கொண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. வெடிகொழுத்தி குதூகலிப்பார் ஒருபக்கம். இரண்டாம் உலக யுத்த நிகழ்வுகளில் இருந்து உதாரணங்கள் எடுத்து ஆய்வுகளை அள்ளி வீசி இராணுவத்தை புழுகுவார் ஒரு பக்கம். வட கிழக்கை நோக்கி சுரண்டலுக்கு தம்மை தயார்படுத்துவார் ஒரு பக்கம் என்று தென் இலங்கை ஆளும் வர்க்கம் இருப்பு கொல்லாது துடிக்கிறது.

தை 2ல் புலிகளின் தலைமை பிரதேசமான கிளிநொச்சிக்குள் இலங்கை இராணுவம் நுழைந்ததை தொடர்ந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக பாவனை செய்து அரசும் அரசுசார் ஆளும் சக்திகளும் கடும் பிரச்சாரம் செய்து வருகிவதை நாமறிவோம்.

ஆனால் வட கிழக்கில் சந்தோசப்பட ஒன்றுமில்லை – மாறாக இராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அவல நிலையில் இராணுவ வெற்றியில் பூரிக்கிறார் ஜனாதிபதி. யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்ற பினாத்தல் பரப்பப்படுகிறது. இது வரலாறு காணாத வெற்றி என்று அரசாங்கம் வெற்றி பிரச்சாரம் செய்கிறது.

மக்கள் படும்பாடு என்ன என்பது பற்றி – சனத்துக்கு என்ன நடந்தது என்பது பற்றி எப்பக்கமும் எந்த மூச்சுபேச்சும் இல்லை.

வென்றது என்ன?

கடந்த முப்பது வருட காலமாக யுத்தமும் சாவும் பொருளாதார சரிவும் என்று இலங்கை மக்கள் மேலும் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டு வந்துள்ளார்கள்.  முன்பு வென்றெடுத்த உரிமைகள் பல பறிக்கப்பட்டு வாழ்க்கைதரம் பாதிக்கப்பட்டு ஒரு தலைமுறை சீரழிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் குழந்தைகளான புதிய தலைமுறையினர் மிக சீரழிந்த எதிர்காலத்தை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். யுத்த செலவுகள் இலங்கை பொருளாதாரத்தை முடக்கியுள்ள நிலையில் உலகளாவிய பொருளாதார சரிவின் பாதிப்பு மேலதிக சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிளிநொச்சி மக்கள் பலவந்தத்தாலோ பயத்தாலோ இடம்பெயர்ந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உணவு மருந்து மற்றும் தங்கும் வசதியற்று வாடிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் இன்னும் மிக கேவலமான அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர் என்பது தெளிவு.

கிளிநொச்சியில் இருந்து பின்வாங்க முதல் வீடுகள் கடைகள் அனைத்தும் உடைத்து முழு பிரதேசத்தையும் தரைமட்டமாக்கிவிட்டு சென்றுள்ளனர் புலிகள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பற்றிய எந்த கவலையுமின்றி வெற்றி பூரிப்புடன் வெறிச்சோடிய கிளிநொச்சிக்குள் இராணுவம் புகுந்தததை எமது ‘மதிப்புக்குரிய’ ஜனாதிபதி அறிவித்ததை நாமறிவோம்.

கொல்லப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை – காயப்பட்டவர்கள் மற்றும் எஞ்சியவர்களின் பயக்கெடுதி என்று ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பு குலைந்துள்ள நிலையில் கொண்டாட என்ன இருக்கு?

பறிக்கப்பட்ட வாழ்க்கைத்தரம் மீண்டும் கட்டமைக்க – பொது மீளமைப்பு செய்ய இன்னும் ஒரு தலைமுறை காலம் தேவை. எல்லா பக்கத்தாலும் மக்கள் கொடுமை அனுபவிக்க வெற்றி ஆட்டம் ஆடுகிறார் ‘பொறுப்புள்ள’ ஜனாதிபதி.

பயங்கரவாத பூச்சாண்டி காட்டி மேற்கத்தேய ஆளும் வர்க்கம் காட்டும் விளையாட்டுகளை பார்த்து தாமும் விளையாடிப் பார்க்கிறார் ஜனாதிபதி.

வீடுகள் கடைகள் வைத்தியசாலைகள் பாடசாலைகள் மற்றும் அரச கட்டிடங்கள் உடைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் மரங்களை அண்டி வாழும் கேவலத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். உணவு பொருட்களின் தட்டுப்பாடும் நல்ல தண்ணீர் தட்டுப்பாடும் என்றுமில்லாத அளவு அதிகரித்துள்ளது. பசி பட்டினியால் வாடுபவர் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மண்னெண்னை முதற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்ச விலையில் விற்கப்படுகிறது. கடந்த ஆறு மாத காலத்துக்குள் பல பொருட்களின் விலை இரண்டு மடங்காகியுள்ளது. உள்நாட்டு பிரச்சினை போதாதென்று உலகளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பண்டங்களுக்கான தட்டுப்பாடு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆசியாவின் அதிகூடிய பணவீக்கத்துடன் தள்ளாடும் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை இப்போதைக்கு இறங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை. அண்மையில் விடாது பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் உள்நாட்டு உணவு உற்பத்தியை பாதித்து விலைவாசியை மேலும் உயர்த்தியுள்ளது.

உலகெங்குமுள்ள மனித உரிமை மற்றும் நிவாரண அமைப்புக்கள் ‘அவசர நிவாரண நிலை தேவை’ யான வகைக்குள் இலங்கையை வகைப்படுத்தியுள்ளன. இலங்கை வறுமை நிலவரத்தை அவர்கள் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கிறார்கள். முக்கியமாக வடக்கில் மனித அவலம் மிக மிக மோசமான நிலையில் இருப்பதை அவர்தம் அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன. இலங்கையில் 14 வீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் மிக மோசமான பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அரச கணிப்பீடுகளே கூறியுள்ளன. கிழக்கில் இத்தொகை 30 வீதத்தை தாண்டியுள்ளது. இந்த கணிப்பீட்டில் வடக்கு இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் ஒட்டுமொத்த விகிதாசாரம் அரச கணிப்பீட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது திண்ணம்.

வேலைவாய்பும் குறைந்து வரும் நிலையில் தெற்கு வறிய மக்களே ஆடிப்போயுள்ள நிலையில் வடக்கு நிவாரணம் மிகப்பெரிய கேள்விக்குறியே. விலைவாசி கூடி வேலை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் மக்கள் என்ன செய்ய முடியும்? சம்பள உயர்வு மட்டும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பல தொழிலாளர்கள் பல வருடங்களாக எவ்வித சம்பள உயர்வுமின்றி வேலை செய்து வருகிறார்கள்.

ஆனால் கடந்த முப்பது வருடத்தில் ‘பாதுகாப்புக்கான’ செலவு – யுத்த செலவு மட்டும் 800 மடங்கு அதிகரித்துள்ளது.

இராணுவ கலாச்சாரம்

வட கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இராணுவ தளபாடங்கள் பதவிகள் பெயர்கள் பேச்சுவழக்கில் அடிபடுவதை நாமறிவோம். விமானங்களின் பெயர்கள் இராணுவ தளபதிகளின் பெயர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் பெயர்கள் எல்லாம் சிறுவர்களுக்கே தெரியும். விமான சத்தத்தை வைத்தே சிறுவர்கள் எந்த விமானம் வருகிறது என்று கண்டு பிடித்து விடுவார்கள். துப்பாக்கி சத்தத்தை வைத்து எந்து துப்பாக்கி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். செல் குத்துற சத்தத்துக்கு பதுங்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு நாய்க்குட்டிகளுக்கு கூட தெரியும். இது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த சமூகத்து கதை.

தெற்கில் யுத்தமற்ற பிரதேசத்தில வாழ்ந்த மக்கள் மத்தியில் இவ்வகை யுத்த -இராணுவ அறிவு இருந்ததில்லை. ஆனால் இன்று கதை வேறு. யுத்த தளபதிகள் புகழ்பெற்ற கதாயாகர்களாக உலா வருகிறார்கள். யுத்தம் சார் சொற்கள் சகஜமாக ஊடகங்களில் பாவிக்கப்படுகிறது. யுத்தத்தின் ஒவ்வொரு சிறு வெற்றியும் ஆர்ப்பாட்டமாக பதிப்பிக்கப்படுகிறது. இராணுவ நடவடிக்கைக்கு கேள்வியற்ற ஆதரவு வழங்கும்படி மக்கள் பல திசைகளிலும் உந்தப்படுகிறார்கள். இராணுவத்துக்கெதிரான – அரசுக்கெதிரான ஒவ்வொரு நடவடிக்கைகளும் மூர்க்கத்தனமாக எதிர்க்கப்படுகிறது. தன்னிச்சையாக இயங்க முற்படும் ஊடகங்கள் அடித்து நொருக்கப்படுகிறது. சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அண்மையில் அரச காடையரால் அநியாயமாக கொல்லப்பட்டது உலகறிந்த ஒன்று.

தாம் ஒரு இராணுவம் என்று புலிகள் பிரச்சாரம் செய்து வந்தாலும் அவர்கள் ஒருபோதும் இராணுவ வகை நேரடி யுத்தத்தில் ஈடுபட்டதில்லை. அதிநவீன ஆயதங்களுடன் காசாவுக்குள் அத்துமீறி நுழையும் உலகின் மிகப் பலம்வாய்ந்த இஸ்ரேலிய இராணுவத்துக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்தும் கமாசிடம் இருப்பதை விட அதிகளவு ஆயதம் புலிகளிடம் உண்டு என்பது உலகறிந்தது. கிளிநொச்சிக்குள் நுளையும் இலங்கை இராணுவத்தை நேரடியாக புலிகள் எதிர்கொள்ளாதது அவர்தம் முழு பலவீனத்தை காட்டவில்லை. கிளிநொச்சிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்த விமானங்கள் ஆயுதங்கள் ஒன்றையும் இராணுவம் இன்னும் கைப்பற்றவில்லை. கிளிநொச்சிக்குள் தளம் அமைத்து இராணுவம் நிலைகொள்ள முடியுமா என்பது கடும் கேள்விக்குள்ளாகி வருகிறது. ஊடகவியலாளர்களும் மனித உரிமை வாதிகளும் தினமும் தாக்கப்பட்டு வருகிறார்கள். சாக்கோடு சாக்காக அரசியல் எதிரிகளும் வேட்டையாடப்படுகிறார்கள். எதிர்த்து நிற்கும் ஒற்பன் இடதுசாரிகளும் தெற்கு புலிகள் என்று பெயர் வைக்கப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள்;. ஜக்கிய சோசலிச கட்சியின் உறுப்பினர் பலர் ஒழித்திருந்து வேலை செய்ய வேண்டிய நிiயில் உள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் தமது உயிருக்கு பயந்த நிலையிலும் அவர்கள் ராஜபக்ச குடும்ப அராஜகத்துக்கு தெற்கில் பலத்த எதிர்ப்பு செய்து வருபவர்கள் அவர்கள் மட்டுமே.

ஊடகவியலாளர் மற்றும் நிவாரண அமைப்புக்கள் என்று இராணுவம் சாரா அனைவரும் யுத்த பிரதேசம் செல்வதற்கு தடைவிதித்துள்ளது அரசு. இதனால் இராணுவ பிரச்சாரம் மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ராஜபக்ச இலங்கையை காக்க வந்த இளவரசன் மாதிரி சால்வையை போத்துகொண்டு திரிய முடிகிறது. இராணுவம் கொன்று குவிக்கும் மக்களின் தொகை பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை – எல்லாம் நாட்டின் நல்லதுக்கே என்று பாவனை கட்டமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செலவை 177.1 பில்லியன் ரூபாய்களுக்கு அதிகரிக்க கோரி இவ்வாண்டு பாராளுமன்றத்தை கோரவுள்ளது அரசு. இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமன். மிகவும் வறுமையான வடக்கை விட்டு பார்த்தாலும் மிகுதி நாட்டின் மொத்த சனத்தொகையில் 41.6 வீத மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலர்களிலும் குறைந்த வருவாயிலேயே வாழ்கிறார்கள். அரைவாசி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டாலரிலும் குறைந்த தொகையில் வாழும் ஒரு நாட்டில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் டாலர்களை யுத்த செலவுக்கு ஒதுக்க கேக்கும் அரசை என்ன சொல்வது? இந்த அரசில் புரட்சிகர கூறுகளை கண்டுபிடிக்கும் சில மத்தியதர வர்க்க ‘மா’க்களை என்ன சொல்வது?

இருபது மில்லியன் சனத்தொகயுள்ள இலங்கையில் 250000க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு துறையில் வேலை செய்கிறார்கள். நாட்டில் பத்து பேரில் ஒருவர் இராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவராக இருக்கிறார். இவர்களை குறிவைத்து இராணுவத்துக்கான பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

இன்று இலங்கையின் முக்கிய – மற்றும் பெரும்பான்மை அரச ஊழியர்கள் இராணுவத்தினரே. இராணுவத்தினருக்கு 30 000 ரூபாய் வரை சம்பளம் வளங்கப்படுகிறது. முப்பது வருடத்துக்கு முன் வேலை தொடங்கிய பல ஆசிரியர்கள் இன்றும் 6000 ரூபாய்க்கு குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். மற்றய பெரும்பான்மை அரச ஊளியர்களின் சராசரி வருவாய் 4000 ரூபாய்கும் குறைவாகவே உள்ளது. கொழுத்த சம்பளம் மட்டுமின்றி இராணுவத்தினருக்கு இதர சலுகைகளும் வளங்கப்படுகிறது. ஓய்வூதிய அதிகரிப்பு மடடுமின்றி சமுக அந்தஸ்தை கூட்டும் சலுகைகளும் வளங்கப்படுகிறது. உதாரணமாக பொது அரச இடங்களில் இராணுவத்தினருக்கென்று தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

இளம் சமுதாயத்தை இராணுவ ஊழியத்துக்கு கவர்ந்திளுக்கவே இத்தனையும். மிக வறுமையான தென் மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு இராணுவத்தில் சேர்வதை தவிர வேறு வழியில்லை. இராணுவத்தினர் இறந்தால் ஆயுட்கால சம்பளமும் பெரும் தொகையும் குடும்பங்களுக்கு வளங்கப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்தில் இருந்து பலர் இராணுவத்தில் இணைகின்றனர். அண்மையில் ஜனாதிபதி ஒரு குடும்பத்துடன் போஸ் குடுத்து ஆகா கோ என்று புழுகி பலத்த பிரச்சாரம் செய்தது இலங்கை ஊடகங்களை கவனித்து வந்தவர்கள் அறிந்திருக்க கூடும். ஒரே குடும்பத்தில் இருந்து நாட்டை காக்க பல வீரர்கள் இராணுவத்தில் இனைந்துள்ளனர் என்பதே பின்னனி பிரச்சாரம். ஆனால் அந்த குடும்பத்தினர் இலங்கையின் மிக வறிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள். வேறு எந்த தொழிலும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் வேறு வழியின்றி இராணுவத்தில் சேர்ந்தவர்கள் அவர்கள். நாட்டு பற்று தேசிய இறையான்மை என்ற எந்த மன்னாங்கட்டி அக்கறையுமின்றி வயித்துபசியை முன்னிலைபடுத்தியதே அவர்களுக்கும் இராணுவத்துக்குமான தொடர்பின் இரகசியம். இதை லாவகமாக தமக்கு சாதகமாக்கி பிரச்சாரிக்கின்றனர் ஆளும் வர்க்கத்தினர். இலங்கை இராணுவத்தில் பெரும்பான்மையானவர் மிக மிக வறிய பகுதிகளில் இருந்து வந்தவர்களே.

புலிகளின் எதிர்காலம் ?

தமது முப்பது வருடகால வரலாற்றில் புலிகள் என்றுமில்லாத பின்னடைவை கண்டுள்ளனர். இராணுவ ரீதியில் ஒரு மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளனர். இந்திய இராணுவத்திடம் ஏற்பட்ட தோல்வி புலிகளை பொறுத்த வரையில் பெரிய தோல்வியில்லை. அத்தோல்வியால் ஆயுத ரீதியான பின்னடைவோ அல்லது போராளிகளுக்கு பாரிய மனச்சோர்வோ ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி பொது மக்களிடம் இருந்த பெரும்பான்மை ஆதரவிலும் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் மற்றய இயக்கங்கள் செய்த அட்டகாசங்கள் புலிகளின் ஆதரவை அதிகரிக்க உதவினவே அன்றி புலிகளின் செல்வாக்கை பாதிக்கும்படி எதுவும் நிகழவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தோல்வி புலிகளை பல்வேறு வழிகளில் பின்னடைய வைத்துள்ளது.

யுத்த வெற்றிகளை விற்பனை செய்து வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் காசு சேர்க்கும் கலாச்சாரத்தை பரப்பியிருந்த புலிகளுக்கு இந்த யுத்தத்தின் போது பெரிய ‘பிரச்சார நிகழ்வுகளை’ வழங்க முடியாமற்போய்விட்டது. இறுதி அடி விழும் என்ற கதைகட்டி ஆளுக்கு ஆயிரம் பவுன்ஸ் சேர்த்து திரிந்தவர்கள் வாயில் இடி விழுந்த மாதிரி முல்லைத்தீவும் பறிபோனது. இயக்கம் என்ன இந்த அடி வாங்குது என்று இறுகிய புலி ஆதரவாளர்களே அதிருப்தியடைந்துள்ளனர். ஆயிரம் இரண்டாயிரம் என்று இராணுவத்தை ஒரே அடியில் விழுத்தபடுவர். புலிகளின் வீர பிரச்சாரம் கொடி கட்டி பறக்கபோகிறது என்று கனவு கண்டவர்கள் சப்பென்று போயுள்ளனர். இத்தேல்வியானது புலிகளின் கடும் ஆதரவு வட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி அவர்களது பொருளாதார நிலையிலும் பலத்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கத்தேய அரசுகளின் கெடுபிடி காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புலிகளின் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் முடக்கப்படும் சாத்தியமுள்ளது. பல நாடுகளில் புலிகளுக்கான தடை அமுலில் இருப்பதாலும் அவர்கள் சொத்துக்கள் – பினாமி சொத்துக்கள் உட்பட – பல பறிக்கப்பட்டிருந்ததாலும் புலிகளின் வெளிப்படையான அசைவுகள் வெளிநாடுகளில் சாத்தியமற்று போயுள்ளது.

மிக கடுமையான கட்டுப்பாட்டுடன் – தமக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை வைத்து தமது வெளிநாட்டு நடவடிக்கைகளை செய்து வந்த புலிகள் அவ்வாறு தொடர்ந்தும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதற்தடவையாக போராளிகள் அல்லாத – போராட்டத்தோடு தொடர்பற்ற உதிரி ஆதரவாளர்களின் உதவியுடன் புலிகள் தமது நடவடிக்கைகளை வெளிநாடுகளில் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. புலிகளின் காலம் போய் புலி வால்களின் காலம் வந்துள்ளது என்று சொல்லலாம்!

மீண்டும் புலிகள் பலப்படுவதற்கு எந்த நாடும் உதவப்போவதில்லை. இராணுவ ரீதியான – பிராந்திய ரீதியான வெற்றிகளை புலிகள் மீண்டும் நிறுவும் வரை புலிகளுக்கான ஆதரவு மங்கிக்கொண்டே போகப்போகிறது. இலங்கை அரசியலில் தமது செல்வாக்கை தொடர்ந்து நிலை நாட்ட அரசியல் எதிரிகளை கொல்லுதல் – மற்றும் வடக்கு கிழக்கில் தலையெடுக்கும் முக்கிய புள்ளிகளை ‘களையெடுத்தல்’- மக்கள் ஆதரவை நோக்காக கொண்ட செயற்பாடுகளை முடக்குதல் – முதலான காரியங்களில் புலிகள் ஈடுபடுவர் என்பது நிச்சயம்.

இது மட்டுமின்றி மக்கள் மத்தியில் நிலைகொல்லகூடிய இராணுவ தளங்களில் கொரில்லா தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் இராணுவத்தை பொது மக்களுக்கு எதிராக திருப்பும் செயல்களிலும் புலிகள் கூடுதல் கவனம் செலுத்தகூடும். புலிகளின் கொரில்லா தாக்குதல்களுக்கு இரானுவம் எவ்வளவுதூரம் – எவ்வளவு காலத்துக்கு ஈடுகொடுக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது போல் இராணுவ காம்புகளை மையமாக வைத்த கட்டுப்பாடு புலிகளை பலப்படுத்தவே உதவும். அதற்கு மாறான புலிகளின் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது மிக மிக கஸ்டமான விசயம். முக்கியமாக வடக்கில் – அதுவும் புலிகள் நீண்டகாலமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதேசங்களில் முழு கட்டுபாட்டை கொண்டுவருவது மிகவும் சிரமமான காரியமே. மக்கள்மேல் வன்முறை பாவித்து பயக்கெடுதி ஏற்படுத்தாமல் அது சாத்தியமில்லை. ஆனால் அதற்கான முயற்சியையே அரசும் அரசு சார் குழுக்களும் செய்வர்.

புலிகள் இராணுவ ரீதியாக மிகப்பெரிய தோல்வியடைந்திருப்பினும் கடைந்தெடுத்த மிகவும் பயிற்றுவிக்கப்பட்ட பல போராளிகள் தொடர்ந்து இயங்கிகொண்டுதான் இருக்க போகிறார்கள். தோல்வியால் ஏற்பட்ட விரக்தி – அதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக ஒருங்கமைக்கப்படாத அவர்கள் இயக்கம் பல அனர்த்தங்களை விளைவிக்கும் என்பதில் ஜயமில்லை. உதாரணமாக மக்களை கவனத்திற்கொள்ளாத மோட்டுத்தனமான தற்கொலை தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. பல புலி உறுப்பினர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை. அதை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படவுமில்லை. கருணா பிள்ளையான் முதற்கொண்டு அவர்களுக்கு பின்னால் இருக்கும் போராளிகள் உட்பட பலரும் ஆயுதம் சார் இயக்கம் தவிர வேறு பயிற்சி இல்லாதவர்கள். ஆயுதமற்ற அரசியல் நடவடிக்கையில் அவர்கள் திருப்திப்படப் போவதோ அல்லது பாதுகாப்பாக உணரப்போவதோ சாத்தியமில்லை. ஆயுதமற்ற கட்சி அது இது என்று எத்தனை புருடா விட்டாலும் ஆயுத குழு சாராது இயங்குவது கருணாவுக்கு சாத்தியமில்லை. இதே நிலைதான் பல புலி உறுப்பினர்களுக்கும். அரசாலும் அரசுசார் குழுக்கலாலும் வேட்டையாடப்படக் கூடிய நிலையில் அவர்களின் இந்த போக்கு தவிர்க்க முடியாததுமே. புலிகள் மேலான அனுதாபத்தை மீண்டும் மக்கள் மத்தியில் வளர்க்க இந்த அரசு சார் குழுக்களின் நடவடிக்கைகள்தான் உதவப்போகின்றன.

புலிகளின் போராடும் பலம் முறியடிக்கப்பட்டுவிட்டது. புலிகள் கதை முடிந்துவிட்டது என்ற அரச – மற்றும் புலி எதிர்ப்பு தமிழ் மத்தியதர வர்க்க (புலி விசயத்தில் இந்த இரண்டு பகுதிக்கும் பெரிய வித்தியாசமில்லை) பிரச்சாரத்துக்கு எடுபடுவதில் அர்த்தமில்லை. புலிகளின் ஆயுதங்களை இதுவரை இராணுவம் கைப்பற்றவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை குறிப்பிட்ட பங்கர்களுக்குள் முடக்கி பாதுகாத்ததாக வரலாறில்லை. தமது ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் பொது இடங்கள் என்று அவர்கள் ஆயுதங்கள் பல்வேறு இடங்களிள் பரவி கிடக்கும்.

அது மட்டுமின்றி பல்வேறு நாடுகளிள் தமது சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளனர் புலிகள். ஆயுத ரீதியாக புலிகளை பலவீனப்படுத்தவது என்பது அண்மையில் நடக்கிற கதையில்லை. இடைவிடாத புலிகளின் கொரில்லா தாக்குதலுக்கு எதிராக நீண்ட காலத்துக்கு நிண்டு பிடிக்க வேண்டும் என்றால் மக்களின் ஆதரவு தேவை. இதுவரை காலமும் பல்வேறு காரணங்களுக்காக புலிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்த மக்களின் ஆதரவை வென்றெடுப்பது என்பது சுலபமான காரியமல்ல. அவர்தம் அடிப்படை உரிமைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் மட்டுமே அது சாத்தியம்.

புலிகளின் நேரடி நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் முடக்கப்பட்டாலும் அவர்களது இரகசிய நடவடிக்கைகள் தொடரும் என்பதில் ஜயமில்லை. அவர்களது சர்வதேச ஆயுத வியாபாரமும் தொடரும். புலிகள் எதிர்கொள்ளக்கூடிய முக்கிய சவால் தொடர்ந்து எவ்வாறு மக்கள் ஆதரவை தக்க வைத்து கொள்வது என்பதே. வெளிநாடுகளில் முடிந்தளவு தமது கால் ஊன்றுவதற்கான முயற்சியை அவர்கள் செய்வர். புலம்பெயர் மக்கள் மத்தியில் தொடர் போராட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் தமது இருப்பை பாதுகாக்க முயல்வர்.

அரசும் அரசுசார் குழுக்களும் மக்கள் பிரச்சினையை நேரடியாக எதிர்கொண்டு அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் நகராத வரை அரசியல் ரீதியாக பலம் பெறப்போவது புலிகள்தான்.

யுத்தம் முடிந்து விட்டதா?

புலிகளின் கட்டுபாட்டில் இருந்த பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம். யுத்தம் முடிவுக்கு வருவதால் இலங்கை பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவருகிறோம் என்று ஒரு மிக மோசமான பிரச்சாரம் செய்து வருகிறது இலங்கை அரசு.

நீண்ட காலத்துக்கு பிறகு முழு இலங்கையும் இராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் வருவது சாத்தியமே. ஆனால் இந்த இராணுவ ‘பிராந்திய ஆக்கிரமிப்பு’ எந்த தீர்வையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை. இராணுவ பலத்தை நிறுவிய கையுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவும் – அல்லது அவர்களை கட்டுபடுத்தும் வல்லமை – தமக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் கனவுகாண்பது போன்ற கேலிக்கிடமான விசயம் எதுவும் கிடையாது.

கிழக்கில் ஏதோ பொற்காலம் நடக்கிறது பொன் மழை பொழிகிறது என்று அந்த பொற்காலத்தை வடக்கிலும் கொண்டு வந்து காட்டுவதாக உறிதியளித்துள்ளது அரசு! மட்டுப்படுத்தப்பட்ட 13ம் திருத்த சட்டத்தை தவிர வேறு எந்த தீர்வையும் அரசு முன்வைக்கவில்லை. அரச பிரச்சாரத்தின் பின்னனி பலமாக இருக்கும் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உரிமய போன்ற வலதுசாரி தேசியவாத – இனவாத கட்சிகள் 13ம் திருத்த சட்டத்தைகூட அமுல்படுத்த விடப்போவதில்லை.

கிழக்கில் ஜனநாயகம் பூத்து குலுங்குகிறது என்று இனியும் சொல்லி அதேபோல் வடக்கும் வந்தால் போதும் என்பதை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு கிழக்கில் எப்பகுதியையும் சுயாதீனமாக விட அரசுக்கு சம்மதமில்லை. அதேவேளை நேரடி இராணுவ கட்டுப்பாட்டில் வட கிழக்கை தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையும் அரசுக்கில்லை. அதனால்தான். கருணா பிள்ளையான் டக்ளஸ் கட்சிகள் வடக்கு கிழக்குக்கான சரியான தீர்வாக அரசுக்கு தெரிகிறது. தமது முழு கட்டுப்பாட்டில் இயங்கும் ஆயுத குழுக்களிடம் அதிகாரத்தை வளங்குவதன் முலம் தமது பிராந்திய கட்டுப்பாட்டை நிலை நிறுத்த முடியும் என்று அரசு நினைக்கிறது.

பிராந்திய அதிகாரம் செய்யும் குழுக்கள் அரச ஆதரவின்றி எந்த முடிவும் எடுக்க முடியாத அரசின் பினாமி –  பம்மாத்து குழுக்கள் மட்டுமே. மக்கள் மத்தியில் பயக்கெடுதியை உருவாக்கி அவர்களை அரச கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே இவர்கள் செய்யகூடியது. தப்பித் தவறி இவர்கள் மாற நினைத்தால் அரசு அவர்களை உருவி புதிய அதிகார குழுவை இறக்கும் என்ற பயத்தில் இவர்கள் அரச ‘கைகூலிகளாக’ இயங்கப்போவது தவிர்க்க முடியாதது.

அது மட்டுமின்றி ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் – ஆதரவாளர்கள் மற்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ புலிகளுடன் இயங்கியவர்கள் என்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை அரசு பயங்கரவாதிகள் என்று ஒதுக்ககூடிய நிலையுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இனவாதிகள் இவர்களை கோட்டுக்கிழுத்து சிறைக்கனுப்பும் சாத்தியம் உள்ளது. மேலும் கருணா டக்ளஸ் பிள்ளையான் குழுக்களின் தனிப்பட்ட வேட்டைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் கூடிய சாத்தியம் உள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு பலியாக் கூடிய காணாமற் போகக்கூடிய மக்களின் தொகை ஆயிரக்கணக்கிற் செல்லலாம்.

இது தவிர இலங்கையில் ஆயுத போராட்டத்துக்கு வித்திட்ட பிரச்சினைகள் அப்படியே இருக்கிறது. அதுபற்றி பேசுவார் இல்லை. இந்த அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கும்வரை யுத்தம் முடிவுக்கு வரப்போவதில்லை. அது மட்டுமின்றி யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட புது பிரச்சினைகளும் பேசப்படுவதில்லை. எல்லாம் முடிஞ்சுபோச்சு அமெரிக்க மேற்குலக இந்திய ஆசிய முதலாளிகளை கூப்பிட்டு வடக்கு கிழக்கில் சுரண்டல் கடை போடச்சொன்னால் எல்லாம் சரியாப்போகும் என்பவர்கள் வரலாற்றை சற்று உற்று நோக்க வேண்டும்.

சுயநிர்ணய பிரச்சினை முதலாளித்துவ சமுதாயத்தில் தீர்க்கப்பட்டதாக வரலாற்றில் எங்காவது ஆதாரமுண்டா? ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஜயர்லாந்து, பாஸ்க், பெல்ஜியம், குபெக் என்று ‘வளர்ச்சி’ அடைந்ததாக சொல்லப்படும் இடங்களிலேயே தீர்த்து வைக்கபடாத சிக்கலான பிரச்சினை இது. அதனாற்தான் சமுதாய மாற்றத்துக்காக போராடுவNது சுயநிர்ணய உரிமையை அடைய ஓரே வழி என்கிறோம் நாம்.

இலங்கையின் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்ட சமுதாய மாற்றத்துக்கான புரட்சியை முன்னெடுக்காத வரை இலங்கைக்கு எதிர்காலமில்லை. இந்த போராட்டம் கனவுமல்ல. சமீபத்தில் பல வேலை நிறுத்தங்களை நாம் பார்த்துள்ளோம். யுத்தக் காய்ச்சல் – பிரச்சார திரை அவிழ மக்களின் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் ஆழும் வர்க்கம் திண்டாடப்போவது உண்மை. அத்தருனத்தில் நாம் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். யுத்தத்துக்கு நிரந்தர முடிவை கொண்டுவர அதைவிட வேறு வழியில்லை.

இலங்கை சாக்கடை அரசியலை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற தலைவிதி மக்களுக்கு இல்லை.

In Sri Lanka, politics is a terrible, terrible game. So dirty, absolutely filthy. Decent people do not want to have anything to do with it anymore.
FROM THE MARCH 29, 2004 ISSUE OF TIME MAGAZINE
– சொன்னது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.- பாம்பின் கால் பாம்பறியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

4 Comments

 • inioru
  inioru

  புலிகள் கலைக்கப்பட்டால்….. :ஆதித்யன்
  http://inioru.com/?p=1782

  Reply
 • palli
  palli

  புஸ் தற்போது ஏந்தான் ஈராக்குக்கு ராணுவத்தை அனுப்பினேன் என யோசிக்கிறாராம். மகிந்தாவுக்கு யோசிப்பதுக்குகூட தகுதி இல்லாமல் போவது உன்மைதான். இந்த வெற்றி மகிந்தா குடும்பத்துக்கதானேஒழிய இலங்கை அரசுக்கல்ல. ஆகவே பிரபாவுக்காக எமது இனம் எப்பையெல்லாம் சீரழிந்துதோ அதே போல் மகிந்தா குடும்பத்தால் சிங்கள இனம் மட்டுமல்ல இலங்கையே சீரழியபோவது திண்ணம்.
  பல்லி.

  Reply
 • manithan
  manithan

  nice article anaylysis is very real and true,your a absoloutly right.

  Reply
 • santhanam
  santhanam

  பேரினவாதம். இது தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து. புலிகள் இது தமிழ் மக்களின் அனைத்து செயல்பாட்டையும் ஒடுக்கி தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு பிரதான ஒடுக்குமுறை அம்சங்கள் காணப்படுகின்றது சமூக பொருளாதார நலன்கள் தான், ஓடுக்குமுறைக்கான அடிப்படைக் காரணமாகும் புலிகள் அனைத்தையும் தமிழீழத்தின் பினனர் என்கின்றனர் பேரினவாதம் அனைத்தையும் புலியொழிப்பின் பினனர் என்கின்றனர் இப்படி இருதரப்பும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி, பொய்யான போலியான படுபிற்போக்கான அரசியலை மக்களுக்கு எதிராக திட்டமிட்டு திணிக்கின்றனர்

  Reply