புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததும் அபிவிருத்திக்கான யுத்தம் காத்திருக்கின்றது – கரு ஜெயசூரிய

karu_jayasuriya.jpgவடக்கு மீட்கப்பட்டு போர் முடிவுக்கு வந்தாலும் அடுத்ததாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய யுத்தம் காத்திருப்பதாகத் தெரிவித்த ஐ.தே.க.பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜெயசூரிய, நாட்டின் பொருளாதார நிலையை சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் சக்தி ஐ.தே.க.வுக்கு மட்டுமே உண்டெனவும் தெரிவித்தார். வென்னப்புவத் தொகுதியில் உள்ள கட்டுநேரியவில் நடைபெற்ற ஐ.தே.க.கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கருஜெயசூரிய அங்கு தொடர்ந்து பேசுகையில்;

இந்த நாட்டில் இடம்பெற்று வரும் யுத்தம் முடிவடைந்த பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்து கட்டியெழுப்புவதற்குமான பாரிய யுத்தம் உள்ளது. இதனை எவ்வாறு சமாளிப்பது என்று சிந்திக்க வேண்டும். இந்த வருட நடுப்பகுதியில் பொதுத்தேர்தல் ஒன்றை நாம் எதிர்பார்ப்பதோடு அதனை எதிர்கொண்டு பாரிய வெற்றியைப் பெற்று இந்த நாட்டை ஆளும் சக்தி எமக்குக் கிடைக்கும். அந்த நாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் எமது நாட்டுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார முகாமைத்துவத்தை சரியான பாதையில் சரியான முறையில் திருப்பும் சக்தி ஐ.தே.க.கட்சிக்கு மட்டும் தான் இருக்கிறது. மாறாக எந்தக் கட்சிக்கும் பொருளாதார முகாமைத்துவம் இல்லை. இதனை அன்று முதல் ஐ.தே.கட்சி வெளிப்படுத்தி வந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஐ.தே.கட்சி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டது. குறுகிய இரண்டரை வருட காலத்திற்குள் அந்த நிலை அப்போதைய ஐ.தே.கட்சியினால் முழுமையாக மாற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற ஆட்சியின் போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்தது.

மீண்டும் இந்த நிலையை மாற்றுவதற்கு முதல் படிதான் மாகாண சபைத் தேர்தல்களின் வெற்றியாகும். இதனை நாம் உறுதிப்படுத்தியதோடு எமது கட்சியை ஆளும் பலத்தைப் பெற்றுத் தாருங்கள். எமது கட்சி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *