“நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” – இரா.சாணக்கியன்

“நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று (18.12.2020) மலையகத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், அதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இன்றைய தினம் மலையகத்திற்கு சென்ற வேளை, சில விசேட கோரிக்கைகளுக்கு அமைவாக பலரை சந்தித்து பேசினேன்.

பல பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். அதில் மிகவும் பிரதான பிரச்சினையானது எமது நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலை உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை ஆகும்.

தற்போதைய அரசாங்கமானது, மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் தற்போதைய கூற்றுப்படி மாதத்திற்கு 10,000 தொடக்கம் 12,000 கிடைப்பதாக சொல்கின்றனர்.

அதுவும் 26 வேலைநாட்களுக்குரிய தொகையாக இதனை வழங்குகின்றனர். இதனடிப்படையில் ஒருவரின் நாள் வருமானமானது 500 ரூபாய்க்கு குறைவாகவே காணப்படுகின்றது.

அதிலும் சில கழிவுகளை கழித்துவிட்டுத்தான் சம்பளத்தினை வழங்குகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கம் முக்கியமாக கவனித்து, அவர்களுக்கு உரிய சரியான சம்பளத்தை உறுதி அளித்தது போன்று மிக விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாட்டின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று  தேயிலை ஆகும். அத்துடன் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்குரிய மதிப்பு மிக அதிகமாகும். இவற்றுக்கு பல தலைமுறைகளாக பெரும் பங்காற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *