“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்கள் மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 19ஆம் திகதி வரை நடைபெறும் குறித்த கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. இந்தநிலையில், மேற்படி கூட்டத்தொடர் குறித்து விவரிக்கையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை வழங்குவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.
இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்கள் மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது. உரிய சாட்சிகளுடன் இதனை நிரூபிப்போம்.
நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியனவற்றின் அறிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தாருஷ்மன் குழுவினர் மற்றும் ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் ஆகியோர் அதற்கு இடமளிக்கவில்லை. இந்த முறை இந்த இரு அறிக்கைகளையும் முன்வைப்பதற்கு அரசு எதிர்பார்க்கின்றது.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்பதைச் சாட்சியங்களுடன் ஜெனிவாவில் சுட்டிக்காட்டுவதற்கு அரசு தயாராக இருக்கின்றது. சீனா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளன என்றார்.