Wednesday, October 27, 2021

உடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்

இலங்கை தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளார்கள். யுத்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுள்ள 250 000க்கும் அதிகமான மக்கள் சாவை எதிர்கொண்டுள்ளார்கள். எந்தவிதமான உணவு -மருத்துவ – மற்றும் தங்கும் வசதியின்றி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் இம்மக்கள்மேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். அந்த சந்தோசத்தை வெடி கொழுத்தி கொண்டாடுகின்றன தெற்கு ஆழும் வர்க்க துவேசிகள்.

மக்கள் அகப்பட்டுள்ள பகுதிக்குள் கடந்த பல நாட்களாக எந்த நிவாரணமும் அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் நிவாரண நிறுவனங்கள் எதையும் இப்பகுதிக்குள் அனுமதிக்க கடும் தடை விதித்துள்ளது அரசு. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இவ்வளவு மக்களும் வரக்கூடிய எந்த வசதியும் செய்யப்படவில்லை. அங்குகூட உணவு நிவாரண பொருட்கள் எடுத்துச்செல்ல அரசு அனுமதிக்கவில்லை.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பசியாலும் இராணுவத்தின் தாக்குதல்களாலும் சாவை எதிர்நோக்கியுள்ள நிலையின் கோரம் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கப்படுகிறது. உணவுசாலைகள், வைத்தியசாலைகள், கூடாரங்கள் எதுவுமற்ற பிரதேசத்தில் குழந்தைகளுடன் மரங்களுக்குள் – வயல்வெளிகளுக்குள் பதுங்கி எப்பக்கத்தால் ஆமி வரப்போகிறது, எங்கிருந்து சூடு விழப்போகிறது,எங்கு குண்டு விழுகிறது என்று ஒவ்வொரு வெடிச்சத்தத்திலும் உயிரை துடிக்க விட்டுக்கொண்டிருக்கும் மக்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். குழந்தைகள் படக்கூடிய அவலத்தை நினைத்துப் பாருங்கள். எத்தனை நாளைக்கு இந்த மக்கள் உணவில்லாமல் சமாளிக்கப் போகிறார்கள்? இலை குலைகளை உண்டா வாழ்வது? குடிக்கத் தண்ணியில்லாத நிலையில் கழுவித்துடைப்பது பற்றி அவர்களால் அக்கறை கொள்ள முடியுமா? காயங்களுக்கு பரவப்போகும் வியாதிகளுக்கு மருந்து எங்கிருந்து வரப்போகிறது.

மக்கள் இவ்வளவு கேவலப்பட வெற்றி பூரிப்பில் விழாக்கான தூண்டுகின்றனர் ஜனாதிபதியும் அவர் குடும்ப அரசும். இப்படியொரு அரசை ஆட்சியில் இருக்கவிட்டு பார்த்துக் கொண்டிருப்பதா? இந்த இனத்துவேச அரசுக்கெதிராக தொழிலாளர்களும் வறிய மக்களும் ஒன்றுபடவேண்டும்.

நாட்டை இராணுவ மயப்படுத்துவதில் மும்முரமாயிருக்கும் அரசு தமக்கெதிரான எல்லாகுரல்களையும் ஒடுக்கி வருவது உலகறிந்ததே. தமது வன்முறை நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஆதரவு இருப்பதாக வேறு காட்டிக்கொள்ள முயல்கிறது இந்த அரசு. அந்த பச்சை பொய்யை உடைத்து சிங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் யுத்தத்துக்கும் வன்முறை ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடவேண்டும்.

யுத்தம் பிரச்சினைக்கு தீர்வல்ல. யுத்த வெற்றி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது பச்சை பொய். தெற்கில் வறிய மக்கள் படும் அவலத்தை குறைக்க ஒன்றும் செய்யாத இந்த இனவாத அரசு வடக்கு மக்களுக்கு விடிவை கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பது கேலிக்கிடமானது. எதிர்கட்சியோ அல்லது ஆட்சி பகிரும் எந்த தமிழ் குழுக்களோ மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுப்பது சாத்தியமில்லை. தமது நலன்களை மட்டும் குறிவைத்து இயங்கும் இவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை.

இன்று மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. ஆயுத குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் நின்று அடிவாங்கியது போதும். எமது போராட்ட முறை மாறவேண்டிய தருணம் இது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய தருணம் இது. எல்லா ஆழும் வர்க்கமும் மக்களை சுரண்டுவதே இயல்பாககொண்டவை –அதற்காக அவர்கள் இனத்துவேச பிரச்சாரங்களில் இறங்கி மக்களை மக்களுக்கெதிராக மோதவிட்டு பெருங்கொலைகள் செய்வர் – என்பதை அறிந்து அவர்களை முறியடிக்க ஒன்றுபடவேண்டிய கட்டம் இது.

எந்த ஆழும் வர்க்கமும் மக்கள் பிரச்சினையின் தீர்வை நோக்கி இயங்கிய வரலாறு கிடையாது. சுறண்டல் லாபத்தை குறிவைத்து இயங்கும் அவர்களை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு ‘தேசிய வெறியை’ ஊட்டுவதன் மூலம் அடக்கி ஆழலாம் என்று அவர்கள் கனவு கான்கிறார்கள். தேவைகள் நிவர்த்தி செய்யப்படாத அவர்களும் எல்லா பக்கத்தாலும் ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களும் கிளர்ந்தெழுவது வெகு விரைவில் நிகழத்தான் போகிறது. ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மலையக மக்கள் ஆழும் வர்கத்துக்கெதிரான போராட்டத்தில் இணைவதும் தவிர்க்கமுடியாதது. வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு மிக மோசமாக ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் சக மக்களுடன் இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இனம் மொழி மதம் என்று எம்மை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் ஆழும் வர்க்கத்தின் உயிரில் அடிக்க அதுவே வழி.

சற்று யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மை மக்கள் இன்று பட்டினியில் வாழ்கிறார்கள். ஆழும் வர்க்க முதலைகளில் யாருக்காவது பசி தெரியுமா? பெரும்பான்மை மக்கள் சரியான தங்கும் வசதியின்றி வாழ்கிறார்கள். ஆழும் வர்க்கம் மாட மாளிகைகள் ஆள் நடமாட்டமற்று கிடக்கின்றன. சழூகத்து ஏற்றத்தாழ்வின் வித்தியாசம் வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளது. ஆழும் வர்க்க சிறு தொகையினர் அனுபவிக்கும் சொத்துக்கள் யாருடயவை? நாட்டின் வளங்கள் யாருடயவை? எம்மை சூறையாடி வியாபாரம் செய்வது போதாதென்று வன்முறைசெய்து அவர்கள் எமது உரிமைகளை பறித்துக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருப்பதா? –ஒடுக்கப்படும் நாம்தான் பெரும்பான்மை. நாம் ஒன்றுபட்டால் எமது பலம்தான் பெரிது. ஏற்றத்தாழ்வற்ற – வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போரை நாம்தான் முன்னெடுக்கவேண்டும்.

வடக்கு கிழக்கில் ஜந்து நட்சத்திர விடுதிகள் கட்டுவதாலோ விலை உயர்ந்த உல்லாச கடற்கரைகள் உருவாக்குவதாலோ பெரும் கம்பனிகள் சுரண்டுவதற்கு வசதியாக வர்த்தக வலயங்கள் உருவாக்குவதாலோ எந்த பிரச்சினைக்கும் தீர்வு கொண்டுவந்துவிட முடியாது. ‘வளர்ச்சியடைந்த’ நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கத்தேய நாடுகளிள் வசதிகளை குவித்துள்ள சிறு மேல் வர்க்க குழுவுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு பெருமளவில் வெடித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் – முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் திறந்த பொருளாதார கொள்கை உலகமயமாக்கல் முதலியன பெரும் தோல்வி கண்டுள்ளன என்பதை மேற்குலக ஆழும் வர்க்கங்களே ஒத்துக்கொள்ளும் இத்தருணத்தில் இலங்கையில் இந்த பருப்பு வேகும் என்ற கனவு எவ்வளவு பொய் என்பதை நாம் உணர வேண்டும்.

காலம் காலமாக ஒடுக்கப்படுபவர்கள் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய தருணமிது.

Show More
Leave a Reply to accu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • accu
  accu

  சேனன் உங்கள் கட்டுரை மிகவும் நியாயமான உண்மைகளை கொண்டுள்ளதென்றாலும் இன்றைய நிலமையில் இது ஏட்டுச்சுரைக்காய். நடைமுறைப்படுத்துவது இயலாத அல்லது மிகக் கடினமான காரியம். தமிழ்த்தேசியமும் சிங்களத்தேசியமும் இரு துருவங்களாக உச்சம் கொண்டு நிற்க்கின்றன. இங்கே பொது வேலைத்திட்டம் என்பது கனவிலும் சாத்தியம் இல்லை. இது இன்று நேற்றல்ல பல காலமாக உள்ள நிலை. இதற்க்கு முக்கிய காரணம் இலங்கை மக்களிடை தேசிய உணர்வு மிகக் குன்றியிருப்பதாகும். சுதந்திரம் பெறுவதற்க்கு ஏகதிபத்தியத்தை எதிர்த்து நாம் பரந்துபட்ட மக்களின் போராட்டங்கள் நடத்தவில்லை. தொகையாக தமிழரும் சிங்களவரும் சிறை சென்றிருப்பின் அப்போராட்டத்தால் தமிழ்த் தேசிய இனம், சிங்களத் தேசிய இனம் என்ற உணர்வு குறைந்து இலங்கைத் தேசிய இனம்,என்னும் உணர்வு எழுந்திருக்கும்.

  அடுத்து இலங்கையின் சகல பிரஜைகளின் சம அந்தஸ்து பற்றி 25 வருடங்களுக்கு மேலாக வற்புறுத்தி வந்தவர்களும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு தருவதில் பின்னிற்காத இடதுசாரிகள் 1965 காலங்களில் திசை மாறி இன உணர்வினை அங்கீகரித்து ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் அங்கத்தவர்கள் என்று கூறத் தொடங்கியபோது,சிங்களத் தொழிலாளரிடையே இன மேலதிக்கவெறி பரவிவிட்டது. இதைத் தடுப்பதற்க்கு வேறு முக்கிய சக்தி எதுவும் இல்லாமல் போய்விட்டது. இலங்கை மக்களின் பெரும் பகுதியினரை இனவாதம் பற்றியதால் இனக் கலவரங்களில் பங்கு பற்றவும் இது வழிகோலியது.1983 இனப் படுகொலையில் தொழிற் சங்கங்களும் பங்கு கொண்டதாய் சந்தேகம் உண்டு. மக்களுக்கு தலமை தாங்கி சாதி இன வேற்றுமை இல்லாத தொழிலாள வர்க்கத்தை உருவாக்கி வழிநடத்த வேண்டிய இடதுசாரிகள் தேர்தல் வெற்றி, அதிகாரத்தில் பங்கு பெறுதல், ஆகிய காரணங்களுக்காக உழைக்கும் வர்க்கத்தவரை இன ரீதியாக பிளவுபடுத்தி துரோகம் இழைத்துவிட்டார்கள். பின்னர் அறுபதுகளின் கடைசியில் இடதுசாரிகளாக தம்மைக் காட்டிக்கொண்டு உருவாகிய ஜே.வி.பி யும் அடிப்படையில் சிங்கள இன உணர்வாளர்களே. இது இப்படியிருக்க நமது அரசியல்வாதிகளும் தமது பங்குக்கு தேர்தல் வெற்றிகளுக்காகவும் அரசியல் தலமைகளுக்காகவும் கக்கிய இனவாதம் இன்று மிகப் பெரிய நச்சு விருச்சமாக வளர்ந்து அளவுகணக்கில்லாமல் அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொள்கிறது. உலகில் நடக்கும் அனைத்து அநியாயங்களுக்கும் அவற்றின் தலமைகளே முழுப் பொறுப்புடையவர்கள்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  accu;உங்கள் கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன்.
  // 1983 ம்ஆண்டு இனப்படுகொலையில் தொழில்சங்களும் பங்குகொண்டதாய் சந்தேகம் உண்டு // சந்தேகமென்ன அரசியல்வாதிகள் காடைகள் ஜே.வி.பி கலந்து நடத்தியது தான் 83 இனக்கலவரம். இதில் ஜே.வி.பி முன்கூட்டியே கொழுத்துறது கொள்ளையடிப்பதற்கு பட்டியல் தயாரித்து வைத்து நடத்தி முடித்தார்கள் என்பது தான் வியப்பானது. இதற்கு அங்கம் வகித்த தொழிலாளர் எந்த பொறுப்பையும் ஏற்கமுடியாது. இதன் தலைவர்களே பதில்சொல்ல வேண்டியவர்கள். இப்படியான கைங்கரியங்களாலே வர்க்கஉணர்வுகெட்டு இனவாதிகள் ஆனார்கள்.

  Reply