தமிழகத்தில் நேற்று நடந்த பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. 85 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடின. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் இல்லை. விமான போக்குவரத்திலும் பாதிப்பில்லை. பள்ளிகள் திறந்திருந்தன. சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்திருந்தது. புறநகரில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வேலூர், கோவை, ஓசூர், சிவகங்கை, மானாமதுரை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பழனி ஆகிய இடங்களில் பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.
தர்மபுரியில் எல்ஐசி அலுவலகம், டாஸ்மாக் அலுவலகம் தாக்கப்பட்டது, வேலூரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் அலுவலகம் மீது கல்வீசப்பட்டது. அதைத் தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
தமிழக பந்த் குறித்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியதாவது:
பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சில இடங்களில் கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. பஸ், ரயில், விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கடலூரில் ஆட்டோ ரிக்ஷா போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கடைகள் பெருமளவில் திறந்திருந்தன.கோவை, விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டிருந்தன. மற்ற மாவட்டங்களில் 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. தொழிற்சாலைகள் வழங்கம்போல இயங்கின. அரசு ஊழியர்கள் 99 சதவீதம் பேர் வருகை தந்திருந்தனர். இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.
டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டம் ஒழுங்கு பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் செய்திருந்தனர்.
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மாநிலத்தில் சில இடங்களில் கடைகள், பள்ளிகளை மூட வற்புறுத்தியவர்கள் மற்றும் பேருந்துகள் மீது கற்கள் வீசி சேதப்படுத்தியவர்கள் 99 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
thamizan
முழு அடைப்பு முழு வெற்றி..தலைமை செயலாளர் அப்படிதான் சொல்லுவார்….!
அவர் அரசாங்க எஜன்ட்