பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் – விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர்தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்தைய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 36-38 காலி வீதி, கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம், இல. 31, ரஜபிகில்ல மாவத்தை, கண்டி ஆகிய இடங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ எண் 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு இம் மாதம் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *